PUBLISHED ON : ஆக 01, 2024 12:00 AM

01. ஆஸ்திரேலியாவில் சூரிய மின் தகடுகள் வைத்து தயாரிக்கப்படும் மின்சாரம், அங்கிருந்து சிங்கப்பூருக்கு மின் கம்பிகள் மூலம் அனுப்பும் திட்டம் வரப்போகிறது. 4,300 கி.மீ., துாரம் இந்தக் கம்பிகள் கடலுக்கடியில் கொண்டு செல்லப்படும். 2030ம் ஆண்டு இந்த வேலை முடிந்ததும் இது, உலகின் மிகப் பெரிய மரபுசாரா ஆற்றல் திட்டப்பணி ஆகிவிடும்.
![]() |
02. பூமியை அன்றாடம் 50 விண்கற்கள் தாக்குகின்றன. இவை சிறிய அளவுடையவையாக இருப்பதால் நமக்கு ஆபத்தில்லை. பெரியவை வந்தால் பேரழிவு ஏற்படும். இதை மனதில் வைத்து, விண்கற்களை திசை திருப்பும் வழியை, சீன விண்வெளி நிறுவனம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது; இதற்கான தொழில்நுட்பத்தை 2030க்குள் உருவாக்கிவிட திட்டமிட்டுள்ளது.
![]() |
03. ஜெர்மானிய மனித ஊட்டச்சத்து பல்கலை 56,000 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், வெண்ணெயை விட ஆலிவ் முதலிய தாவர எண்ணெய்கள் சத்தானவை என்று தெரிய வந்துள்ளது. தாவரக் கொழுப்பு, வெண்ணெயைக் காட்டிலும் நீரிழிவு, உடல் பருமன் ஆகியவற்றை குறைவாகவே ஏற்படுத்தும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
![]() |
04. டால்பின்கள் மற்ற விலங்குகளை விட வேகமாக நீருக்குள்ளும், நீருக்கு வெளியேயும் தாவுகின்றன. இதற்கு காரணம் அவற்றின் உடல் அமைப்பு. இதை முன்மாதிரியாகக் கொண்டு நிம்டி (NIMTE) எனும் சீன நிறுவனம், சரக்கு கப்பல்களில் சில மாற்றங்கள் செய்தது. இதன் விளைவாக எரிபொருளை 2 சதவீதம் வரை மிச்சப்படுத்த முடிந்தது.
![]() |
05. உடல் பருமனுக்கு தரப்படும் மருந்தைப் போலவே ஓட்ஸ் உணவில் உள்ள சத்துகள் நம் உடலில் வேலை செய்யும் என்கின்றனர், அமெரிக்காவின் அரிசோனா பல்கலை ஆய்வாளர்கள். ஓட்ஸில் உள்ள சில நார்ச்சத்துகள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றுவதே உடல் மெலிவதற்கு காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.