PUBLISHED ON : ஆக 29, 2024 12:00 AM

01. புகை பிடித்தல், மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவை தான் இதய நோய்களுக்கான காரணிகளாக அறியப்பட்டு வந்தன. தற்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மொனாஷ் பல்கலை 23,814 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வில், யாருக்கெல்லாம் மலச்சிக்கல் உள்ளதோ அவர்களுக்கெல்லாம் இதயநோய் ஏற்படும் சாத்தியம் அதிகமுள்ளதாகக் கண்டறிந்துள்ளது.
![]() |
02. வலி நிவாரணத்திற்காக எடுத்துக் கொள்ளப்படுபவை ஓபியாய்டு மருந்துகள். இவற்றை அளவு தெரியாமல் அதிகமாக எடுத்துக் கொண்டால் மரணம் கூட நேரலாம். இதனால், இவற்றை செயலிழக்கச் செய்யும் நாலோக்சோன் மருந்தை தானாகவே ரத்தத்தில் கலக்கும் கருவியை மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் வடிவமைத்துள்ளது. இதை உடலுக்குள் பொருத்தினால் போதும்.
![]() |
03. பொதுவாக உலோகங்களை உருவாக்க உயர் வெப்பநிலை தேவை. ஆனால், தற்போது சிங்கப்பூர் பல்கலை, சில பூச்சிகளின் மேற்புறத்தில் உள்ள சிடோசான் எனும் ஒருவித சர்க்கரையைப் பயன்படுத்தி, சாதாரண அறை வெப்பநிலையிலேயே உலோகங்களை உருவாக்க முடியும் எனக் கண்டறிந்துள்ளது.
![]() |
04. பயனற்ற ஏவுகணை பாகங்கள், செயலிழந்த செயற்கைக்கோள் என விண்வெளியில் 8,000 டன் குப்பை கழிவுகளாக உள்ளன. வேகமாகச் சுழலும் இவை பூமிக்கும், பூமியிலிருந்து அனுப்பும் விண்கலன்களுக்கும் ஆபத்தாக முடியும். அதனால், இவற்றை அகற்ற விண்வெளி விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
![]() |
05. நம் சூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட பல கோள்களின் கருவத்தில் தண்ணீர் இருக்கலாம் என்று சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவற்றின் கருவம் இரும்பாலானவை. இரும்பால் மிக அதிகமான நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ள முடியும்.