PUBLISHED ON : ஜன 25, 2024 12:00 AM

01. தொல்லெச்சங்களில் உயிரினங்களின் மேல்தோல் கிடைப்பது அரிது. காரணம் அவை பெரும்பாலும் அழுகிவிடும் அல்லது பிற உயிரினங்களால் உண்ணப்பட்டுவிடும். ஆனால், சமீபத்தில் ஆய்வாளர்கள் அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் உள்ள ஒரு குகையில் பல்லி போன்ற ஓர் உயிரியின் தோலைத் தொல்லெச்சமாகக் கண்டறிந்துள்ளனர். இது 28.8 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
02. பூமியிலிருந்து 50 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள LHS 1140b என்ற கோள் 2017ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பூமியை விட 1.7 மடங்கு பெரிய கோளான இது, ஒரு பாறைக் கோளாக உள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பிய தகவல்களின் படி இக்கோளில் ஹீலியம், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் நிரம்பியுள்ளன. இங்கு தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
03. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் கழுகு போன்ற தோற்றமுடைய ட்ரோனை வடிவமைத்துள்ளனர். மற்ற பறவை வடிவ ட்ரோன்கள் போல் இது இறக்கைகளை அசைக்காது, மாறாக கழுகுகள் போல் இறக்கையை நிலையாக வைத்துப் பறக்கும். இத்தகைய வடிவமைப்பு காரணமாக பேட்டரி மின்சாரம் பெருமளவு சேமிக்கப்படுகிறது. இந்த ட்ரோன் மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் பறக்கும்.
![]() |
04. ஜனவரி 21ஆம் தேதி ஜெர்மன் தலைநகரான பெர்லினை நோக்கி வந்த எரிகல் ஒன்று விண்ணிலேயே எரிந்து சாம்பலானது. வெடிக்கும் போது ஏற்பட்ட வெளிச்சம் பல கிலோமீட்டர் வட்டத்திற்குத் தெரிந்தது. இது முதன்முதலில் பூமியை நெருங்குவதைத் தொலைநோக்கி மூலம் ஹங்கேரி நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
05. அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள், நாம் குடிக்கும் 1 லிட்டர் தண்ணீரில் 2,40,000 பிளாஸ்டிக் நானோ நுண்துகள்கள் இருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். இது நம் உடலில் ஏராளமான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர்.