PUBLISHED ON : அக் 09, 2025 12:00 AM

1 ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்ரிபித் பல்கலை சவுதி அரேபிய பாலைவனத்தில் 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 176 பாறை ஓவியங்களை கண்டறிந்துள்ளது. முற்காலத்தில் இங்கே மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதை இது உணர்த்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2 தினமும் மாம்பழம் உண்பது, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்று அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம், மாம்பழத்தில் உள்ள கரோட்டினாய்ட், அஸ்கார்பிக் அமிலம், பீனால் சேர்மம், கேலிக் அமிலம், நார்ச்சத்து ஆகியவை தான்.
3 பொதுவாக பழங்கற்கால குகை ஓவியங்களில் நீல நிறம் இருக்காது. ஆய்வாளர்கள் தற்போது ஜெர்மனியில் உள்ள ஒரு பழங்கற்கால குகையில், அசுரைட் தாது கொண்டு நீல நிறம் தீட்டப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். இதுவே ஐரோப்பிய கண்டத்தில் பயன்பட்டுள்ள முதல் நீலச் சாயம்.
4 பூமியிலிருந்து 620 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் கோள் Cha 1107--7626. கடந்த இரு மாதங்களாக நொடிக்கு 600 கோடி டன் துாசு, வாயுக்களை ஈர்த்து மிக வேகமாக வளர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
5 NGC 6000 எனும் கேலக்சி பூமியில் இருந்து 10.2 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் விருச்சிக ராசி மண்டலத்தில் உள்ளது. சமீபத்தில் ஹப்பிள் தொலைநோக்கி மிக அழகாகப் படமெடுத்துள்ளது. இது, அறிவியல் ஆர்வலர்களிடையே வைரலாகி வருகிறது.