PUBLISHED ON : செப் 26, 2024 12:00 AM

மரக்கன்றுகள் ஓரளவு வளரும் வரை அவற்றுக்குப் பாதுகாப்பு தேவை. வீட்டுத் தோட்டங்களில் நாம் வேலி அமைத்துக் காக்கிறோம். வீட்டுக்குள்ளே வளரும் செடிகள் என்றால் அவற்றின் மீது கண்ணாடிக் கூண்டை அமைத்தால், நல்ல சூரிய ஒளி கிடைக்கும். இதே முறையைக் காடுகளிலும் பின்பற்றலாம் என்று தாவரவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பசிபிக் கடலில் அமைந்துள்ள குவாம், ரோடா தீவுகளில் மட்டுமே வளரக்கூடிய பெரிய மரம் சீரியாந்தெஸ் நெல்சோனி (Serianthes nelsonii). இது ஓர் அருகிவரும் தாவரம். ரோடா தீவில் 121 மரங்கள் மட்டுமே உள்ளன. குவாம் தீவில் ஒரே ஒரு மரம் தான் உள்ளது. எனவே, இந்த இனத்தைக் காக்க விஞ்ஞானிகள் பெரிதும் முயன்று வருகின்றனர். இதன் கன்றுகளைத் தோட்டங்களில் செயற்கை ஒளியில் வளர்க்கும்போது நன்றாக வளர்கின்றன. ஆனால், வளர்ந்த பின்னர் காடுகளில் நட்டால் போதுமான சூரிய ஒளி கிடைக்காமல் பட்டுப்போய் விடுகின்றன.
காடுகளில் செயற்கை ஒளியை உருவாக்க இயலாது. இதனால் விஞ்ஞானிகள் ஓர் எளிய முறையைக் கையாண்டனர். செடி வளர்வதற்கு நடுவே இடம் விட்டு அதைச் சுற்றி அறுகோண வடிவில் கண்ணாடிகளைப் பதித்தனர். அவற்றின் மீது படும் சூரிய ஒளி செடிக்குப் போதுமான வெளிச்சத்தைத் தந்தது. கண்ணாடி பதிக்கப்படாத செடிகளைக் காட்டிலும் இவை 175 சதவீதம் உயரமாக வளர்ந்தன. இந்த ஆய்வின் வாயிலாக அடர்ந்த காடுகளில் நடப்படும் மரக்கன்றுகளுக்குப் போதுமான சூரிய ஒளி கிடைக்கக் கண்ணாடி களைப் பயன்படுத்தலாம் என்பது தெரியவந்துள்ளது.

