/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
விரிசலை தானகவே சரிசெய்யும் பிளாஸ்டிக் பாலிமர்
/
விரிசலை தானகவே சரிசெய்யும் பிளாஸ்டிக் பாலிமர்
PUBLISHED ON : செப் 25, 2025 12:00 AM

சத்தீஸ்கரிலுள்ள பிலாய் ஐ.ஐ.டி.,யின் ஆய்வாளர்கள், சுயமாக விரிசல்களை சரிசெய்து கொள்ளும் ஒரு புதுமையான பிளாஸ்டிக் பாலிமரை கண்டு பிடித்துள்ளனர். இதற்கு வெளிப்புற வெப்பமோ, பராமரிப்போ தேவையில்லை. கீறல்கள் சில நிமிடங்களில் மறைகின்றன. சற்று பெரிய வெட்டுகள் தானாக ஒன்று சேர்வதோடு, பழைய வலிமையைப் பெறுகின்றன.
டாக்டர் சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், அதிக அழுத்தத்தையும் வெப்பத்தையும் தாங்கும் திறனைக் கொண்டுள்ளன.
இந்த தன்னைத் தானே தேற்றிக்கொள்ளும் பாலிமர், இன்று அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் பேட்டரி உறைகள், விண்வெளி வாகனங்களின் உடற்பாகங்கள் மற்றும் உடலில் அணியும் கவசங்கள் போன்ற பல வகைகளில் பயன்படும்.
இந்த பாலிமரின் மீது பலமான தாக்குதல் ஏற்பட்டால், அதன் விசையை பெற்றுக்கொண்டு, விரிசல்கள் ஏற்படாமல் தடுக்கும். எப்படி? அடிவிழுந்ததும், இந்த புதிய பாலிமர் இளகி, மென்மையாக மாறிவிடும். இந்த பாலிமரை குறைந்த செலவில் பெருமளவில் உற்பத்தி செய்ய முடியும் என இதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பாலிமரால் ஆன நுகர்பொருட்கள், சில ஆண்டுகளில், குப்பைக்குப் போகாமல் வெகுகாலம் உழைக்கும். மேலும், பராமரிப்புச் செலவுகள் மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும். இக்கண்டுபிடிப்பு புதிய பொருளறிவியலின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக அமையும்.