PUBLISHED ON : ஜன 04, 2024 12:00 AM

மனிதர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு 7 - 8 மணி நேர துாக்கம் தேவை என்கின்றனர் மருத்துவர்கள். சரியான துாக்கமின்மை, பல பிரச்னைகளை உருவாக்கலாம். ஒவ்வொரு விலங்கும் தன் உழைப்பு, சூழலுக்கு ஏற்ப குறிப்பிட்ட நேரம் துாங்குகின்றன. ஆனால், அன்டார்டிகாவில் வாழும் 'சின்ஸ்டார்ப்' என்ற ஒரு வகை பென்குயின்கள், ஒரு நாளைக்கு 4 வினாடிகள் மட்டுமே துாங்குகின்றன என்றால் நம்ப முடிகிறதா?
உண்மை தான். ஆனால் 4, 4 வினாடிகளாக ஒரு நாளைக்கு 10,000 முறை, அதாவது மொத்தம் 11 மணி நேரம் துாங்குகின்றன! பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தேசிய நியூரோ சயின்ஸ் மையம் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
இந்த வகை பென்குயின்கள் தண்ணீரில் நீந்தி உணவு தேடும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் துாக்கக் கலக்கத்தில் இருப்பது போலவே தோன்றுவதால், இவற்றின் மூளையில் கருவிகளை பொருத்தி விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் வாயிலாக, எந்த விலங்கு, பறவைகளிலும் காணப்படாத இந்த வித்தியாசமான துாக்க முறை இவற்றிடம் மட்டும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. இவை வாழும் சூழலில் இவற்றுக்கு பல எதிரிகள் உள்ளன. அவற்றிலிருந்து தங்களையும், தங்கள் முட்டை, குஞ்சுகளையும் காத்துக் கொள்வதற்காக, இவை எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவை உள்ளது.
தவிரவும், இவை கூட்டமாக வாழும் இயல்புடையவை என்பதால், எப்போதும் சத்தம் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அதனால், ஆழ்ந்த துாக்கம் சாத்தியமில்லை. கூட்டத்தில் சில பறவைகள் சற்று அசந்தாலும், மற்ற பறவைகள் விழிப்புடனே இருக்கும். இதனால், இவை தங்களுக்கு வரும் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்கின்றன.