PUBLISHED ON : ஆக 01, 2024 12:00 AM

பாம்புகள் பெரும்பாலும் கூட்டமாக வாழ்வதில்லை. வட, மத்திய அமெரிக்காவில் வாழும் கார்ட்டர் பாம்புகள் (Garter snakes) மட்டும் விதிவிலக்கு.
குளிர்காலங்களில் அதிகபட்ச குளிரைச் சமாளிக்க, இவை மற்ற விலங்குகளின் வளைகளில் அல்லது வேறு பாதுகாப்பான இடங்களில் கூட்டமாக நீண்ட காலம் ஓய்வெடுக்கும்; மற்ற காலங்களில் தனித்தே வாழும். இவ்வாறு வாழும் ஒரே பாம்பினம் இவை மட்டும் தான் என்று நம்பப்பட்டு வந்தது.
ஆனால், சமீபத்தில் கிடைத்த தொல்லெச்சம் ஒன்று, கடந்த காலங்களில் சில வகை பாம்புகள் கூடி வாழ்ந்துள்ளன என்பதை உறுதி செய்கிறது.
அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தில், 3.8 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லெச்சம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், நான்கு பாம்புகளின் இறந்த உடல்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன.
இந்த பாம்புகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத புது இனத்தைச் சேர்ந்தவை.
இவற்றின் உடல் பெரியளவில் சேதமடையாமல் இருப்பதும் அறிவியலாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த பாம்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.