/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
2028ல் செவ்வாய் செல்லும் 'ஸ்பேஸ்எக்ஸ்' விண்கலம்
/
2028ல் செவ்வாய் செல்லும் 'ஸ்பேஸ்எக்ஸ்' விண்கலம்
PUBLISHED ON : டிச 25, 2025 07:46 AM

எலான் மஸ்க் தன் செவ்வாய் கிரக கனவுகளுக் கான காலக்கெடுவை நிர்ணயித்துவிட்டார். 2028 ம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்திற்கு, ஆளில்லா முதல் விண்கலத்தை அனுப்பிவிட முடியும் என்றும், அதைத் தொடர்ந்து, மனிதர்கள் அங்கு தரையிறங்குவது, 2030ல் நடக்கும் என்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் திட்டவட்டமாக கூறுகிறார்.
செவ்வாயில் கதிர்வீச்சு அபாயம், மனிதர்களுக்கு ஏற்பில்லாத, மிக மெல்லிய வளிமண்டலம் போன்ற சவால்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை. மேலும், ஒரு பாழ் நிலத்தில், வாழ்வாதாரத்தைத் தக்கவைப்பதற்கான பொருளாதாரச் சவால்களுக்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்த நிலையில், மஸ்கின் அறிவிப்பு, ஒரு அதீத துணிச்சலான காலக் கெடுவாகவே பார்க்கப் படுகிறது.
ஆனால், மஸ்க், செவ்வாயில் மனிதக் காலடி என்பதை வெறும் கற்பனையாகப் பார்க்கவில்லை, மாறாக, “அது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வு” என்கிறார். பூமியின் பலவீனமான நிலைக்கு எதிராக, மனிதகுலத்திற்கான ஒரு 'காப்பீடாக' அவர் செவ்வாயைக் கருதுகிறார். ஆனால், பொறியியல் சார்ந்த சிக்கல்களும், சட்ட ரீதியான தாமதங்களும் 2028-ஐ எட்ட முடியாத ஓர் இலக்காகவே மாற்றும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
எது எப்படியாயினும், மஸ்க்கின் இந்த அறிவிப்பு செவ்வாய் கிரகக் குடியேற்றத்தை மக்களின் கற்பனையில் ஆழமாகப் பதியச் செய்துள்ளது.
இது 'சாத்தி யமா?' என்ற விவாதத்தை மாற்றி, 'எப்போது? ' என்ற விவாதமாக மாற்றிஇருக்கிறது.

