/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
முள்ளில்லாத ரோஜா செடி உருவாக்கம்
/
முள்ளில்லாத ரோஜா செடி உருவாக்கம்
PUBLISHED ON : ஆக 15, 2024 12:00 AM

ரோஜாக்கள் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? அவற்றின் பல வண்ணங்களும், மனம் கவரும் மணமும் நம்மை ஈர்க்கும். ஆனால், அவற்றின் முட்களோ 'தொடாதே' என்று எச்சரிக்கும். வெகுசில ரோஜா வகைகளில் மட்டும் தான் முட்கள் இருக்காது.
சில வகை கத்திரிக்காய், தக்காளி உள்ளிட்ட தாவரங்களில் முட்கள் நிறைந்திருக்கும். தாவரம் உண்ணும் விலங்குகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள, இவை முட்களைத் தற்காப்பாகப் பெற்றுள்ளன.
ஆனால், இவற்றை பெரியளவில் பயிரிட்டு சாகுபடி செய்யும்போது முட்கள் பெரும் இடைஞ்சலை ஏற்படுத்துகின்றன. எனவே, இவற்றை எவ்வாறு நீக்குவது என்பது குறித்த ஆய்வுகள் நடந்துவந்தன.
ஸ்பெயினில் உள்ள யு.பி.வி., பல்கலை ஆய்வாளர்கள் கத்திரிக்காய்களை ஆராயும்போது, அவற்றில் உள்ள 'தி லோன்லி கை' எனப்படும் எல்.ஓ.ஜி., (LOG) மரபணுக்கள் தான் முட்களை உருவாக்குகின்றன என்று கண்டறிந்தனர். தாவரங்களில் சில ஹார்மோன்களை உருவாக்குவதும் இதுதான்.
தங்கள் ஆய்வு முடிவைப் பிற நாட்டு விஞ்ஞானிகளிடம் தெரிவித்தனர். முந்தைய ஆய்வுகளைப் படித்தனர். மேலும் சில ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். இவற்றிலிருந்து எல்.ஓ.ஜி., மரபணுக்கள் தான் 20 தாவர இனங்களில் முட்கள் உருவாகக் காரணம் என்று உறுதி செய்தனர். ரோஜாச் செடிகளில் இந்த மரபணுவைச் செயலிழக்கச் செய்தனர், பிரான்ஸ் நாட்டின் வேளாண், உணவு, சுற்றுச்சூழல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். முட்கள் இல்லா செடி உருவானது.
அதே வழியைப் பின்பற்றி, 'டெசர்ட் ரெய்சின்' எனும் ஆஸ்திரேலிய பழத்தை முட்கள் இன்றி வளர்த்தனர். இப்படி செய்வதால் அந்தத் தாவரங்களில் வேறு எந்த மோசமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. இந்த முறையில் முட்கள் வளர்வதைத் தடுத்துவிட்டால் விவசாயிகள், தோட்ட வேலை செய்பவர்கள் தொல்லையின்றி நல்ல சாகுபடி செய்யலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.