PUBLISHED ON : ஆக 07, 2025 12:00 AM

நம் உடலுக்குத் தேவையான சத்துகளுள் ஒன்று கொழுப்புசத்து. உடலில் இந்தச் சத்து அதிகமானால் இதயக் கோளாறு தொடங்கி புற்றுநோய் வரை பல நோய்கள் ஏற்படும். கொழுப்புக்கும் புற்றுநோய்க்குமான தொடர்பு குறித்து நீண்டகாலமாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. உடலில் இயற்கையாகவே புற்றுநோயை எதிர்த்துப் போராடும் நேட்சுரல் கில்லர்ஸ் (Natural killer -- NK) உள்ளிட்ட சில செல்கள் உள்ளன.
அதிகக் கொழுப்பு இவற்றை அழித்துவிடுகிறது. அதனால் தான் புற்றுநோய் வேகமெடுக்கிறது என்கின்றன முந்தைய ஆய்வுகள். கொழுப்பின் அளவை விடக் கொழுப்பின் தன்மை தான் புற்றுநோய் ஏற்படக் காரணமாக உள்ளது என சமீபத்திய ஆய்வு கூறுகிறது .
அமெரிக்காவில் உள்ள பிரின்செஸ்டன் பல்கலையின் புற்றுநோய் மைய ஆய்வாளர்கள் எலிகள் மீது ஆய்வு செய்தனர். ஒரு பகுதி எலிகளுக்குத் தேங்காய், ஆலிவ், பனை எண்ணெயிலிருந்து எடுக்கப்பட்ட தாவரக் கொழுப்பை உண்ணக் கொடுத்தனர். மற்றொரு பகுதி எலிகளுக்குப் பன்றிக் கொழுப்பு, வெண்ணெய், மாட்டுக் கொழுப்பு ஆகியவற்றைக் கொடுத்தனர். பிறகு இரு தரப்பு எலிகள் உடலிலும் புற்றுநோய் செல்களைப் புகுத்தி வைத்தார்கள். கட்டிகள் வளரும் வரை சில நாட்கள் பொறுத்திருந்து எலிகளை ஆராய்ந்தனர்.
விலங்குக் கொழுப்புகள் புற்றுநோய் எதிர்ப்புச் செல்களின் மைடோகாண்ட்ரியாவைத் தாக்கி அந்தச் செல்களைச் சிதைத்தன. இதனால் விலங்குக் கொழுப்பு உண்ட எலிகள் உடலில் புற்றுச் செல்கள் பெருகி இருந்தன.
மாறாகத் தாவரக் கொழுப்பை உண்ட எலிகள் உடலில் நோய் எதிர்ப்புச் செல்கள் நன்றாக இயங்கிப் புற்றுநோய் செல்களை அழித்தன. இதேபோல் மனித உடலில் உள்ள நேட்சுரல் கில்லர்ஸ் செல்களை மட்டும் தனியாக எடுத்து இருவேறு கொழுப்புகளைச் செலுத்தி ஆய்வாளர்கள் சோதித்துப் பார்த்தனர்.
இதிலும் மேற்கண்ட முடிவே வந்தது. ஆகவே விலங்குக் கொழுப்புகளை விடத் தாவரக் கொழுப்புகள் ஆபத்து குறைவானவை என்று இந்த ஆய்வின் மூலம் நிறுவப்பட்டுள்ளது.