/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
தண்ணீரை சுத்தமாக்கும் பாக்டீரியா
/
தண்ணீரை சுத்தமாக்கும் பாக்டீரியா
PUBLISHED ON : ஜன 18, 2024 12:00 AM

நம் அண்டை கிரகமான செவ்வாய் கிரகத்தை பற்றி நீண்ட நெடிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. செவ்வாய் கிரகத்தின் சில பகுதிகளில் தண்ணீர் உறைந்த நிலையில் இருக்கிறது என்றாலும் கூட, அதை அப்படியே பயன்படுத்த முடியாது. இந்தத் தண்ணீரில், 'பெர்குளோரேட்ஸ்' என்கிற ஒரு வகை வேதிப்பொருட்கள் உள்ளன.
இதனால் தான் அந்த நீரை மனிதர்கள் குடிப்பதற்கோ, பயிர்களை வளர்ப்பதற்கோ, ராக்கெட்டிலோ பயன்படுத்த முடியாது. எதிர் திசை சவ்வூடு பரவல் (ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்) உள்ளிட்ட சில முறைகளை கொண்டு இதை தண்ணீரில் இருந்து நீக்க முடியும் என்றாலும் கூட, அதற்கு மிக அதிகமான முயற்சி தேவைப்படுவதோடு, செலவும் ஆகும். இதனால் தான், முற்றிலும் புதிய முறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
சில வகை பாக்டீரியாவால் இந்த பெர்குளோரேட்ஸை, ஆக்சிஜன் மற்றும் குளோரைடாக மாற்ற முடியும். ஆனால், அந்த பாக்டீரியாவை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியாது. அங்கே அவை வாழ இயலாது. இதனால் தான், செவ்வாய் கிரகத்தில் வாழக்கூடிய 'பேசிலஸ் சப்டிலிஸ்' எனப்படும் ஒரு வகை பாக்டீரியாவிற்குள், பெர்குளோரேட்ஸைச் சிதைக்கும் பாக்டீரியாவின் மரபணுக்களை ஒட்ட வைத்திருக்கின்றனர்.
இவ்வாறு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாக்டீரியாவை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு சென்று, அங்குள்ள தண்ணீரை மனிதர்களால் பயன்படுத்தத் தக்க வகையில் மாற்ற முடியும்.