/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
காந்தப்புல மாற்றம் நிகழ்ந்தது எப்போது?
/
காந்தப்புல மாற்றம் நிகழ்ந்தது எப்போது?
PUBLISHED ON : பிப் 20, 2025 12:00 AM

பூமியில் காந்த மண்டலம் தான் சூரிய னிலிருந்து வரும் ஆபத்தான கதிர்களைத் தடுக்கிறது. ஆனால், இந்த மின்காந்த மண்டலம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இதில் மாற்றங்கள் ஏற்படும். வடபுலம் தென்புலமாக மாறும், மறுபடியும் தென்புலம் வடபுலமாக மாறும். 7,80,000 ஆண்டுகளுக்கு முன்பாக இப்படியான தலைகீழ் மாறுதல் நடந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இப்படியான முழுமையான மாற்றம் ஏற்படுவதற்கு இடையிலே காந்த மண்டலத்தில் அவ்வப்போது சிறிய மாற்றங்கள் ஏற்படும். இவை சில நூறு ஆண்டுகளிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் வரை கூட நீடிக்க வாய்ப்பு உள்ளது. அத்தகைய ஒரு சிறிய மாற்றம் 42,000 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
நியூசிலாந்து நாட்டில் ஒரு மரத்தின் தொல்லெச்சம் கண்டு பிடிக்கப்பட்டது. பொதுவாக மரங்களில் உள்ள வளையங்களை வைத்து மரங்களின் வயதையும் சுற்றுப்புறத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கண்டறிய முடியும். ஆனால், இந்த மரத்தை ஆராய்ந்த போது ஒரு புது விஷயம் பதிவாகி இருந்தது. அதாவது 42,000 ஆண்டுகளுக்கு முன்பாக, பூமியின் காந்த மண்டலத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் பூமியில் ரேடியோ கார்பனின் அளவு திடீரென்று அதிகரித்துள்ளது என்பது தெரியவந்தது.
காந்த மண்டல மாற்றத்தால் பூமியின் ஓசோன் மண்டலம் மெலிவுற்றது. இதனால் சூரியனிலிருந்து வந்த புற ஊதாக் கதிர்கள் தடுக்கப்படாமல் நேரடியாகப் பூமிக்கு வந்துள்ளன. இந்தக் கதிர்கள் பட்டுப் பல உயிரினங்கள் அழிந்துள்ளன. நம் மனித இனமான ஹோமோ சேபியன்ஸ் இந்தக் கதிர்களிடம் தப்பிப்பதற்காகவே குகைகளில் தஞ்சம் அடைந்தனர். சக மனித இனமான நியாண்டர்தால் இனம் பெருமளவில் அழிந்தது கூட இதனால் தான் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவையெல்லாம் தற்போது அனுமானங்களாக முன்வைக்கப்படுகின்றன. இன்னும் தெளிவான ஆய்வுகள் இருந்தால் மட்டுமே இவற்றை உறுதிப்படுத்த முடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

