PUBLISHED ON : ஜூன் 04, 2026 07:31 AM

சமூகத்தில் நாம் எவ்வாறு பழகுகிறோம் என்பதை நம் மூளை எப்படி தீர்மானிக்கிறது என்பது குறித்த புதிய அறிவியல் உண்மைகள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. நாம் மற்றவர்களிடம் பேசுவதற்கு அல்லது பழகுவதற்கு முன்பே, நம் மூளை அதற்கான முடிவை எடுத்துவிடுகிறது என்பதை இந்த ஆய்வு முடிவு சுட்டிக்காட்டுகிறது.
ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலை ஆராய்ச்சியாளர்கள், 'ஜீப்ராபிஷ்' (Zebrafish) எனப்படும் மீன் வகையைக் கொண்டு இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த மீன்களின் நரம்பு மண்டலம் மனிதர்களுடையதைப் போன்ற அமைப்பைக் கொண்டு உள்ளதால் இது ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டது.
ஒரு மீன் மற்றொரு மீனிடம் செல்வதற்கு சில வினாடிகளுக்கு முன்பே, அதன் மூளையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் செயல்படாமல், மூளை முழுதும் உள்ள நரம்புகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. குறிப்பாக 'பல்லியம்' (Pallium) என்ற உயர்மட்ட மூளைப் பகுதியின் செயல்பாடு பெருமளவு அதிகரிப்பதைக் கண்டறிந்து உள்ளனர்.
நாம் ஒருவரிடம் நெருங்கிச் செல்லலாமா வேண்டாமா என்ற முடிவை எடுப்பதற்கு முன்பே, மூளை தனக்குள்ளேயே ஒரு 'முன் - முடிவு நிலையை' (pre-decision state) உருவாக்குகிறது. இந்த செயல்பாடு எந்த அளவுக்கு வலிமையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவர்கள் சமூகத்தில் மற்றவர்களிடம் அதிக நெருக்கத்துடன் பழகுவார்கள் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மனிதர்களுக்கும் இதே வகையான மூளை அமைப்பு இருப்பதால், சமூகத்தில் சிலர் ஏன் மற்றவர்களுடன் எளிதில் பழகுகிறார்கள், வேறு சிலர் ஏன் எப்போதும் தனிமையில் இருக்கவே விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்த அறிவியல் கண்டுபிடிப்பு பெரிதும் உதவும்.
இதன் வாயிலாக மன இறுக்கம் மற்றும் சமூகப் பதற்றம் போன்ற உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கும் எதிர்காலத்தில் சிறந்த மருத்துவ தீர்வுகளைக் காண முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
