/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
காற்றை கிழித்து பறக்கும் சாகச வீராங்கனை பிரியங்கா
/
காற்றை கிழித்து பறக்கும் சாகச வீராங்கனை பிரியங்கா
PUBLISHED ON : அக் 30, 2024

'ரிஸ்க்' என ஆண்களே ஒதுங்கும் கார் பந்தயத்தில், 'காற்றை கிழித்து பறக்கும் சாகசத்தின் சிகரம் தொடுவேன்' என வீறுகொண்டு எழுந்துள்ளார் தமிழக முதல் பெண் கார் பந்தய வீராங்கனை பிரியங்கா. ஒன்றரை ஆண்டுக்கு முன் துவங்கிய கார் பந்தய பயணத்தில் சர்வதேச 'பார்முலா 4'ல் பங்கேற்க தகுதி பெற்றதை பற்றி அவர் கூறியதாவது...
* எப்போது துளிர்த்தது இந்த சாகச ஆசை வீட்டில் எல்லோரும் கார் பிரியர்கள்.
அப்பா விஜய், சமூக ஆர்வலர், வைல்டு லைப் போட்டோகிராபர். அம்மா அன்னபூரணி, தனியார் நிறுவன ஊழியர். பிறந்தது குன்னுார். சிறு வயது முதல் கார் தான் என் கனவு. பொம்மைகளுடன் விளையாடும் வயதில் சிறிய சைஸில் கலர் கலர் எலக்ட்ரிக் வகை கார்கள் வாங்கி விளையாடுவேன். தாத்தா மெக்கானிக்கல் இன்ஜினியர். காரில் எங்கே வெளியே சென்றாலும் முன் சீட்டில் தான் உட்காருவேன். அப்போது தாத்தா, அப்பா கார் ஓட்டும் போது அதை உற்றுக் கவனிப்பேன். சிறு வயதில் துளிர்த்த ஆசை இப்போதும் தொடர்கிறது.
* அதிக 'ரிஸ்க்' ஆன இத்துறையை நீங்கள் தேர்வு செய்தபோது பெற்றோர் 'ரியாக் ஷன்' எப்படி இருந்தது
தற்போது பெங்களூருவில் பி.பி.ஏ., முதலாமாண்டு படிக்கிறேன். ஆனால் கார் ரேஸ் தான் என் பயணம் என முடிவு செய்தது ஒன்றரை ஆண்டுக்கு முன் தான். அப்போது பொதுத் தேர்வு, உயர்கல்வி என வாழ்க்கையின் எதிர்காலம் குறித்து பெற்றோர் கேள்வி எழுப்பினர். 'ஒரு வாய்ப்பு கொடுங்க, நீங்கள் நினைப்பதை விட சாதித்து காட்டுகிறேன்' என்றேன். என் மீது வைத்த நம்பிக்கையால் வாய்ப்பு கொடுத்தனர். இப்போதும் என் வெற்றிப் பயணத்தில் நிழலாக வருபவர்கள் அவர்களே.
* எங்கு துவங்கியது உங்கள் சாகச பயணம்
கொரோனா பாதிப்பு காலத்தில் கோ கார்டிங் கார் ரேஸில் பயிற்சி பெற்று எம்.ஆர்.எப்., கோவை மோட்டார் ஸ்பீட்வே போட்டிகளில் பங்கேற்றேன். சர்வதேச அளவில் பெண்களுக்கு கார் ரேஸ் பயிற்சி அளிக்கும் அகுரா நிறுவனத்தில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்தது. இதை நடத்துபவர் 7 முறை சர்வதேச கார் ரேஸில் சேம்பியன்ஷிப் பெற்ற சவுரா சட்டர்ஜி. பயிற்சி பெற்ற சில மாதங்களிலேயே 'டேலன்ட் கன்ட்' போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் 24 ஆண்களுடன் நான் மட்டும் பங்கேற்றேன். 8வது இடம் பிடித்தேன். ரூ.2 லட்சம் பரிசு கிடைத்தது. அப்போது முதல் துவங்கிய ரேஸில், தற்போது எம்.ஆர்.எப்., போட்டியில் (பொது) ஏழாவது இடத்தில் உள்ளேன்.
* ஆண் ஆதிக்கம் கொண்ட கார் ரேஸில் பெண்ணாக எப்படி சாதிக்க முடிகிறது
சாதிக்க வேண்டும் என நினைத்தால் ஆண் என்ன, பெண் என்ன. கார் ரேஸின் போது ஹெல்மெட் போட்டு விட்டால் எல்லோருமே டிரைவர்கள் (போட்டியாளர்கள்) தான். என் ஆர்வம் தெரிந்து கோவை - சென்னை - பெங்களூரு என 70 ஆயிரம் கி.மீ., காரிலேயே எனக்காக ஒன்றரை ஆண்டிற்குள் பயணித்துள்ளார் அப்பா. எனக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைக்க பெற்றோரே காரணம். 'ஒரு பெண் எப்படி ஜெயிக்கலாம்' என்ற எண்ணம் ஆண்களிடம் உண்டு. இத்துறையில் அது சற்று அதிகமாக உள்ளது.
* இதுவரை சாதித்தது
சென்னை எம்.ஆர்.எப்., நேஷனல் சேம்பியன்ஷிப்பில் தற்போது 'டாப் 7'ல் உள்ளேன். இப்போட்டியில் பங்கேற்ற 27 பேரில் நான் மட்டுமே பெண். அதில் 7வது இடத்தில் உள்ளேன். சென்னை, கோவை, ஜே.கே., சேம்பியன்ஷிப், கடைசியாக சென்னையில்
நடந்த கார் பந்தயத்தில் எல்.ஜி.பி.எப்., 4ல் ஒரே பெண் என்ற பெருமையும் உள்ளது. பந்தயத்தில் வெளிப்படும் வேகம், நேரம் போன்றவை அடிப்படையில் ஒவ்வொரு பந்தயத்திலும் புள்ளிகள் கிடைக்கும். இதன் அடிப்படையில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தகுதி கிடைக்கும். என்னுடைய தற்போதைய 'டாப் ஸ்பீடு' 171 கிலோ மீட்டர். இந்த பெருமை பெற்ற தமிழகத்தின் முதல் பெண் நான்.
* உடல், மனம் ரீதியாக சந்திக்கும் சவால்கள்
ரேஸின்போது காருக்குள் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். நீர்ச் சத்து குறையும். வளைவுகளை கடப்பது சவாலாக இருக்கும். போட்டியாளர்கள் உத்திகளை கணித்து சமாளிக்க வேண்டும். மன உறுதி வேண்டும். சிறிய கவனக்குறைவு கூடபெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருமுறை விபத்தில் சிக்கி கடவுள் அருள், பெற்றோரின் வேண்டுதலால் மீண்டுள்ளேன்.