/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
ஆயிரமாண்டு கடந்த அற்புதம் காண்போமா: சோழ சாம்ராஜ்யம் போய் வருவோமா..?
/
ஆயிரமாண்டு கடந்த அற்புதம் காண்போமா: சோழ சாம்ராஜ்யம் போய் வருவோமா..?
ஆயிரமாண்டு கடந்த அற்புதம் காண்போமா: சோழ சாம்ராஜ்யம் போய் வருவோமா..?
ஆயிரமாண்டு கடந்த அற்புதம் காண்போமா: சோழ சாம்ராஜ்யம் போய் வருவோமா..?
PUBLISHED ON : அக் 20, 2025

பிற்கால சோழர்களின் தலைநகரங்களில் தனிச்சிறப்பு பெற்றவை தஞ்சாவூரும், கங்கை கொண்ட சோழபுரமும். தந்தை முதலாம் ராஜராஜசோழன் தஞ்சையில் கட்டிய பிரகதீஸ்வரர் கோயிலைப் போல, கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயில் எழுப்பினார் தனயன் ராஜேந்திர சோழன். பிரமாண்ட விமானத்துடன் கூடிய இரண்டு கோயில்களின் அமைப்பும் எழுந்தருளியுள்ள அம்மன், சுவாமி பெயர்களும் ஒன்றாக உள்ளன. அவற்றின் கோபுர கலசங்களின் நிழலும் தரையில் விழுவதில்லை. இரண்டுமே தொல்லியல் துறையின் கீழ் பராமரிக்கப்படுகிறது. 2004ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.
அரியலுார் மாவட்டத்தில் உள்ள, சோழர்களின் பெருமை பேசும் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு சமீபத்திய ஆடித் திருவாதிரை நாளில் பிரதமர் மோடி சென்றதன் மூலம் இத்தலம் ஆன்மிக சுற்றுலாத்தலமாக இந்திய அளவில் மாறிவிட்டது.
தரிசனம் தரும் நந்தி
கோயில் கொடிக்கம்பத்தை கடந்ததும் பிரமாண்ட நந்தி திறந்தவெளியில் 15 அடி நீளம், 8 அடி அகலம், 11 அடி உயரத்தில் சுதை வேலைப்பாட்டில் அமர்ந்த நிலையில் உருவாக்கப்பட்டுள்ளது. பகலில் நந்தியின் மீது சூரியஒளி பட்டு, 200 மீட்டர் துாரத்தில் உள்ள கருவறை லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது பிரமிப்பைத் தரும். மூலஸ்தான விளக்குகளை அணைத்து விட்டால் லிங்கத்தின் மீது விழும் ஒளி அற்புதமாகத் தெரியும். நந்தியை தரிசித்த பின் படியேறினால் பிரதான கோயில் வாயிலை அடுத்து உள்ளே மகா மண்டபம், 143 கல் துாண்களுடன் 175 அடி நீளமும் 95 அடி அகலம் உடையது.
மகா மண்டபத்தை கடந்தால் அர்த்தமண்டபம். எட்டு பெரிய துாண்களுடன் இருப்பதால் எட்டுக்கால் மண்டபம் எனப்படுகிறது. துாண்களின் மேற்புறத்தின் இருபக்கமும் 53 வகை பரதநாட்டிய அபிநய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் துவாரபாலகர்களின் இருபுறமும் விநாயகர், சரஸ்வதி சிலைகள் உள்ளன, நடுவில் சிறிய நந்தி, பலிபீடம் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் சிறிய நந்தி, வெளிப்புற பெரிய நந்தி, கொடிமரம் மூன்றும் ஒரே நேர்கோட்டில் தெரியும்.
வளாகத்தின் தென்பகுதியில் தென்கைலாய சன்னதி, தென்மேற்கில் விநாயகர் சன்னதி, வடக்கே அம்மன், சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி சன்னதிகள், வடகிழக்கு திசையில் சிம்மக்கேணி உள்ளன.
கிழக்கில் கோபுரத்துடன் கூடிய நுழைவாயில் சிதைந்து உள்ளதால் வடக்கில் சாதாரண 2 அடுக்கு தோரண வாயில் மட்டும் உள்ளது. உயர்ந்த மாடத்தின் மீது அமைந்த இக்கோயில் 53 மீட்டர் உயரமுடையது. கோயில் விமானம் 9 தளங்களுடன் ௨ அடுக்கு பிரகாரத்தை கொண்டது.
பெருவுடையாரே போற்றி
கருவறையில் ஒரே கல்லில் பெருவுடையார் சிவலிங்க திருமேனியாக காட்சியளிக்கிறார். ஆவுடை பீடத்தின் சுற்றளவு 60 அடி. தரையில் இருந்து 20 அடி உயரத்தில் கருவறை அமைந்துள்ளது. உள்ளே இலுப்பை மரங்களால் சாளரம் கட்டப்பட்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து, குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான தட்பவெப்பம் தருகிறது. பெருவுடையார் சன்னதி வாசலில் போகசக்தி அம்மன் செப்புத் திருமேனி தெற்கு முகமாக உள்ளது.
விமானத்தின் ௪ மூலைகளிலும் ஒரே கருங்கல்லால் ஆன ௪ நந்திகள், சிகரத்தின் நாற்புறமும் கீர்த்தி முகம் என்ற சிங்க முக வளைவுகள் உள்ளன. கோபுர உச்சியில் செப்புக்கலசம் ஏழடி உயரம் கொண்டது.
பிரமாண்ட நாயகி
தாயாராக, பெரியநாயகி அம்மன் ஒன்பதரை அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறார். ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் நவக்கிரகங்கள் செதுக்கப்பட்டுள்ளதால் இவற்றை சுற்றி வரமுடியாது. பிரமாண்ட கணக்கவிநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணியர் என பிரகாரத்தைச் சுற்றிலும் பல தனிக்கோயில்கள் உள்ளது ஏகாந்த உணர்வை தருகிறது. லிங்க தரிசனம் முடிந்து படிக்கட்டு வழியாக வெளியேறும் இடத்தருகே வெளியில் அழகுடன் காட்சியளிக்கும் சிறிய நந்தி, எந்த பக்கம் சுற்றி வந்தாலும் கண்களால் நம்மை தொடர்வது போன்றிருக்கும்.
கதை சொல்லும் சிற்பங்கள்
முக மண்டப சுவர்களில் சிவபெருமானின் பல்வேறு அனுக்கிரக சிற்பங்களான விஷ்ணு அனுக்கிரகமூர்த்தி, ராவண, மார்க்கண்டேய, சண்டேச அனுக்கிரகமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. சண்டேச சிற்பத்தில் சிவபெருமான், சண்டிகேஸ்வரரின் தலையில் மலர் மாலை அணிவிப்பது போல அருள்பாலிக்கும் அழகுகாட்சி எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது.
நேர்த்தியான ஆபரணங்கள் அணிந்ததை நேரில் பார்ப்பது போலிருக்கிறது லட்சுமி, சரஸ்வதியின் தியான வடிவிலான சிற்பங்கள். தலையில் அணிந்திருக்கும் கிரீடம் முதல், பாதத்தில் அணிந்துள்ள தண்டை, கொலுசு வரை இரு சிற்பங்களுக்குமான நுணுக்கமான வேலைப்பாடும், அதன் வேறுபாடும் பிரமிக்க வைக்கிறது.
விநாயகர் சிற்பத்தில் அவரது இடது பக்கம் தொந்தி சரிந்து வளைந்துள்ள காட்சி காண்பது பரவசம் தரும். பிரம்மாவின் சிற்பத்தில், எந்த பக்கம் பார்த்தாலும் முக அமைப்பு ஒரே மாதிரியாக காட்சிஅளிக்கிறது. மதில் சுவரின் மேற்கிலும் தென்கிழக்கிலும் அரண்கள் அமைக்கப்பட்டு பீரங்கி மேடைக்கு பொருந்துவதாக அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கக்கிணறு
1012 - 1044 வரை ஆட்சி செய்த முதலாம் ராஜேந்திரச் சோழனின் வடநாட்டு படையெடுப்பே வெற்றிப் பெருமிதத்தை திக்கெட்டும் பறைசாற்றுவதாக அமைந்தது. அந்தப்போரில் தோற்ற மன்னர்களின் தலையில் கங்கை நீர் நிறைந்த குடங்களை சுமந்து வரச் செய்து இக்கோயிலில் உள்ள பிரமாண்ட சிங்கமுக கிணற்றில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்ததால் கங்கை கொண்ட சோழன் எனப்பட்டார். அதனாலேயே இந்த ஊர் கங்கை கொண்ட சோழபுரம் ஆனது. இக்கோயிலை மையமாக கொண்டே ஐந்து மைல் சதுர அளவிற்கு அப்போதைய தலைநகர் அமைக்கப்பட்டுள்ளது.
ஆயிரமாண்டுகளை கடந்து அழகும் கம்பீரமுமாக வீற்றிருக்கும் கோயிலின் சிற்பங்களையும் கட்டடக் கலையையும் ரசித்தபடி சிவபெருமானை லிங்கமாக தரிசனம் செய்வது பெரும்பேறு.
தஞ்சாவூரில் தந்தை கட்டிய பிரகதீஸ்வரர் கோயிலை காலையில் தரிசித்த பின், ஒரு மணி நேர பயணத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் தனயன் கட்டிய பிரகதீஸ்வரர் கோயிலை தரிசனம் செய்வது இன்னும் சிறப்பு. இப்படி ஒருநாளுக்கு திட்டமிட்டு, இரண்டு கோயிலுக்கும் சென்று வந்தால் சோழ சாம்ராஜ்யத்திற்குள் சென்று வந்த உணர்வை பெறலாம்.
விழா விசேஷங்கள்
இக்கோயிலில் மாதமிரு முறை பிரதோஷம், மாதமொரு முறை சங்கடஹர சதுர்த்தி, பவுணர்மி பூஜை நடைபெறும். மாத கார்த்திகையில் முருகனுக்கு அபிஷேகம், ஐப்பசி பவுர்ணமியில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேக விழா நடைபெறும்.
நடை திறக்கும் நேரம்
காலை 6:00 - மதியம் 12:00 மணி மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை.
எங்கு உள்ளது
அரியலுார் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள இக்கோயில், அரியலுாரில் இருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ளது.

