/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
ஒச்சப்பனாக மாறிய ஹங்க் - மனசெல்லாம் மாங்குளம் கிராமம்
/
ஒச்சப்பனாக மாறிய ஹங்க் - மனசெல்லாம் மாங்குளம் கிராமம்
ஒச்சப்பனாக மாறிய ஹங்க் - மனசெல்லாம் மாங்குளம் கிராமம்
ஒச்சப்பனாக மாறிய ஹங்க் - மனசெல்லாம் மாங்குளம் கிராமம்
PUBLISHED ON : ஜன 15, 2016

நம்மை நாமே கொண்டாடும் கலாசாரம், உலகம் முழுவதும் கடைபிடிக்கும் நடைமுறை தான். மாறாக, நம் கலாசாரத்தை உலகமே கொண்டாடுகிறது என்றால், அது தான் தமிழுக்கு கிடைத்த கவுரவம். இங்கே ஒரு பெல்ஜியக்காரரை, தமிழ் கலாசாரத்திற்கு அடிமையாக்கியிருக்கிறார், ஒரு ரிக்ஷாக்காரர்.
அந்த ஈர்ப்பு, ஜேக்கப் ஹங்க் என்ற பெயரை, ஹங்க் ஒச்சப்பன் என மாற்றும் அளவிற்கு மாற்றியிருக்கிறது. யார் இந்த ஹங்க்? யார் அந்த ஒச்சப்பன்? உங்களைப் போலவே அதே ஆர்வத்தில் மதுரை வந்த பெல்ஜியம் ஒச்சப்பனை சந்தித்தோம்.
''1987 ல் முதன் முறையாக தமிழகம் வந்தேன். மதுரை தான் தமிழ் கலாசாரத்தின் மையம் என்பதை, இங்கு வந்ததுமே தெரிந்து கொண்டேன். கொடைக்கானல் சென்ற போது, மதுரை செல்லூர் ஒச்சப்பனை சந்திக்க நேர்ந்தது. அவர் தான், என் அடுத்த வாழ்க்கையை தீர்மானித்தார். தன் தோளில் சுமந்து, எனக்கு இந்த கலாசாரத்தை காண்பித்தார். அதற்கு முன்பு வரை, பெல்ஜியம் சிறைச்சாலையின் மூத்த கறார் அதிகாரியாக, கடந்து கொண்டிருந்த எனது வாழ்க்கையை, வேறு விளிம்பிற்கு கொண்டு சென்றது ஒச்சப்பன் தான்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருந்தாலும், மதுரையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தான், பண்டைய கலாசாரம், குடும்ப உறவுகள் பின்னி பிணைந்திருக்கிறது. ஜல்லிக்கட்டு கூட, தமிழ் பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டு தான்.
27 ஆண்டுகளாக இங்கு வந்து கொண்டிருக்கேன். ஆண்டுக்கு மூன்று மாதம் மதுரையில் தங்கும் போது கிடைக்கும் ஒருவித பூரிப்பு, பெல்ஜியத்தில் கிடைப்பதில்லை.
மதுரை அருகே மாங்குளம் தான் என் சொர்க்கபுரி. மலை அருகே கிராமம், தேங்கிய குளம், அன்பான மக்கள், அழகான உபசரிப்பு, இவை தான் மாங்குளத்தையும், என்னையும் பிணைத்தது. என் நாட்டில் நான் வசிக்கும் அந்த ஒன்பது மாதங்களை ஓய்வில் தான் கடத்துவேன். அது ஒரு இயந்திர வாழ்க்கை. இங்கே அப்படி அல்ல; இயந்திரங்களை இயக்கும் மனிதனின் வாழ்க்கையை பார்க்கிறேன்.
பெல்ஜியத்தில் எனக்கென யாரும் இல்லை; இங்கோ... யாரென்று தெரியாத போதும் எனக்கென தனி உறவுகள் உள்ளன. முன்பு போல் ஒச்சப்பனால் என்னுடன் நேரத்தை செலவிட முடியவில்லை. அவருக்கு தற்போது நிறைய வேலைகள் உள்ளன.
ஆனாலும் அவர் கற்றுத் தந்த அரைகுறை தமிழோடு, நானே தனியாய் உலா வந்து கொண்டிருக்கிறேன்.
தை மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடும் சமயம், மதுரை கிராமங்களில் வசிப்பது சொர்க்கத்தில் இருப்பதற்கு சமம்.
மாடுகளில் துவங்கி, மனிதர் வரை மதிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப் படுகிறது. நான் காண்பதையெல்லாம் என் நினைவுகளில் அடைபட வசதியாக, அனைத்தையும் போட்டோ எடுத்துக் கொள்கிறேன். நாடு திரும்பியதும் அவற்றை திரும்பிப் பார்க்கிறேன்.
அதற்குள் மீண்டும் நான் திரும்பி வர வேண்டிய காலம் வந்து விடுகிறது. இப்படி தான் என்னுள் தமிழ் வந்தது. உயிர் இருக்கும் வரை மதுரை வர வேண்டும்; மதுரை வருவதற்காக என் உயிர் இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் பிரார்த்தனை என்று, கிராம வாசிகளுடன் மீண்டும் பரஸ்பரம் நட்பு பாராட்டத் துவங்கி, நமக்கு விடை கொடுத்தார், ஹங்க் ஒச்சப்பன்.
வாயில் நுழையாத பெயர்களை சூட்டி, மகிழும் நம் நவீன தமிழர்களுக்கு மத்தியில், தமிழ் பண்பாட்டை அறிமுகம் செய்த ரிக்ஷாக்காரரின் பெயரை தனக்கு சூட்டி, தமிழ் கலாசாரத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஒச்சப்பன், நம் பெருமைகளை பெல்ஜியம் கொண்டு சேர்த்தவர் என்ற வகையில், மாறாத மதுரையின் சுவடுகளில் இவரும் இடம் பெற வேண்டியவரே.
நவநீ