
பொங்கல் திருநாள் கண்கண்ட தெய்வமான சூரியனை நினைத்துக் கொண்டாடப்படுவதாகும். அவர் உலகிலுள்ள எல்லாருக்கும் பொதுவானவர். எல்லா மதங்களுமே சூரியனைக் கொண்டாடுகின்றன. இந்து மதத்தில் சூரியனையும், சந்திரனையுமே கடவுளின் கண்கள் என்கிறார்கள். சூரியனால் தான் உலக இயக்கமே நிகழ்கிறது.
அதிகாலையில், தனது கதிர்களைப் பரப்பி நம்மை விழிக்க வைப்பவர் அவர் தான். ஆன்மிகத்தில் 'விழித்தல்' என்பது மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. 'விழிப்பு நிலை' என்பது ஏதோ அதிகாலையில் எழுவது என்பது மட்டுமல்ல. எவரொருவர் எந்த சந்தர்ப்பத்திலும் விழிப்புடன் இருக்கிறாரோ அவர் எல்லாவற்றிலும் வெற்றி பெறுகிறார். ராமபிரான் நாராயணனின் அம்சம் தான். ஆனாலும், ராவணனை வெற்றி கொள்ள அவர் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியதாயிற்று. அகத்தியர் ராமனிடம், “ஸ்ரீராமா! நீ உன் வம்ச தெய்வமான சூரியனை வழிபடு. வெற்றி பெறுவாய் என்று தூண்டினார். அவரை வழிபடுவதற்குரிய ஸ்லோகங்களையும் கற்றுத் தந்தார். அந்த ஸ்லோகங்களின் தொகுப்பே 'ஆதித்ய ஹ்ருதயம்' எனப்படுகிறது. 'ஆதித்யன்' என்றால் 'சூரியன்'. 'ஹ்ருதயம்' என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு 'இருதயம்' என்று பொருள். இருதயம் என்ற உறுப்பை அறுவை சிகிச்சை செய்து விட்டால் கண்ணால்
பார்க்கலாம். நெஞ்சில் கை வைத்தால் துடிப்பதை உணரலாம். ஆனால், இந்த இருதயப்பகுதிக்குள் மறைந்திருப்பதே மனம். இதை நம்மால் பார்க்க முடியாது. ஆனால், இருதயத்துக்குள் இருந்து கொண்டு எது எதையோ செய்யத் தூண்டும். அது நல்லதாகவும், கெட்டதாகவும் இருக்கலாம். அதாவது ஒற்றை இருதயத்துக்குள் இரட்டை மனப்பான்மை கொண்ட மாயசக்தி அது.
இந்த மனதை நல்ல செயல்களின் பக்கம் மட்டும் திருப்ப வேண்டுமானால் ஒரு அங்குசம் வேண்டும். அந்த அங்குசத்தின் பெயர் தான்
கடவுளின் அருள். கடவுளின் அனுக்கிரகம் ஒருவனுக்கு கிடைத்து விடுமானால், அவன் கடவுளாகவே கூட மாறி விடுகிறான்.
அப்படிப்பட்டவர் தான் சூரியன். அவரிடம் களங்கம் என்பதே இல்லை. உலக வழக்கில் ஒரு வாக்கியத்தை அடிக்கடி பயன்படுத்துவார்கள். 'அவனா... அவன் திறமைசாலியப்பா! எவனாலும் அவனை நெருங்க முடியாது' என்று. அதுபோல், சூரியன் மிக மிக சிறந்தவர். அவரது பணி பிறருக்கு சேவை செய்வது மட்டுமே! தூரத்தில் நெருப்பை வைத்து சாரமான ஒளியை நமக்கு அளிப்பவர். அந்த ஒளியிலிருந்தே தாவரங்கள் தங்களுக்குரிய உணவைப் பெறுகின்றன. அந்தத் தாவரங்களே உலக மக்களுக்கு உணவாகின்றன.
ஆக, எல்லாரும் எல்லாமும் பெற காரணமானவர் சூரியன். இதற்காக அவர் ஏதாவது கூலி பெற்றுக் கொள்கிறாரா என்றால் இல்லை.
நீர்நிலைகளில் அவரது உஷ்ணம் பட்டு ஆவியாகி மேலே சென்று மீண்டும் மழையாகக் கொட்டுகிறது. குறைந்த நீரை எடுத்து அதிக நீரை நமக்குத் தருபவர் அவர்.
இப்படி தன்னலமற்ற சேவை செய்யும் அவர், மனிதர்களான நம்மையும் பிறர் சேவையில் ஈடுபட வேண்டுமென மறைமுகமாக
உணர்த்துகிறார். இப்படி நமக்கு எல்லா வசதிகளையும் தரும் அவருக்கு நன்றிக்கடனாகவே பொங்கல் விழாவை நடத்துகிறோம். அவர் தந்த பச்சரிசி, கரும்பு, தானியங்கள், காய்கறிகளைப் படைத்து, இதுபோல் என்றும் குறைவின்றி கிடைக்க வேண்டுகிறோம்.
அவர் உதிக்கும் அதிகாலைப் பொழுது நமக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. அந்த சுறுசுறுப்பை மாலை வரை விடாமல் பிடித்துக் கொண்டு, யார் ஒருவர் தன் பணியைச் செய்கிறாரோ அவர் சாதனைகள் செய்கிறார். இந்தப் பொங்கல் நன்னாளில் இருந்து அதிகாலையில் எழும் நல்ல வழக்கத்தைக் கடைபிடித்து வெற்றிச் சரித்திரம் எழுதுங்கள்.