PUBLISHED ON : ஜன 14, 2025

நீங்கள் நினைக்கும் நியாயமான விஷயங்கள் எல்லாம் நிகழ வேண்டுமா. பத்ரகாளி தேவியை மனமுருக பிரார்த்தித்து, அங்குள்ள ஆலமரத்தை ஏழு முறை வலம் வந்து மரத்தில் மணி ஒன்றைக் கட்டினால் மனதில் நினைப்பதெல்லாம் 'மணிமணியாய்' நடக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.
மரத்தில் மணி கட்டினால் அற்புதம் நிகழ்த்தும் இந்த 'காட்டில் மேக்கதில் தேவி கோயில்' கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவறா அருகே பொன்மனா என்ற இடத்தில் உள்ளது.
காட்டில் கோயில் என்றழைப்பதால் காட்டு பிரதேசத்தில் இருக்கிறது என நினைக்க வேண்டாம். அரபிக்கடலுக்கும், அருகில் உள்ள 'பேக்வாட்டருக்கும்'(காயல்) இடையில் உள்ள சிறு தீவில் தான் கோயில் உள்ளது. கடலில் இருந்து 10 மீ., துாரத்தில் கோயில் இருந்த போதும், 2004 சுனாமியின் ஆழிப்பேரலைகளால் கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதது 'அம்மனின் அதிசயம் அல்லாது வேறு என்ன' என்கின்றனர் இங்குள்ள மீனவர்கள்.
பலநுாறு ஆண்டுகளுக்கு முன்பு, முதலை மீது அமர்ந்து தேவி கடலில் வந்த போது இங்கு ஒளிர்ந்து கொண்டிருந்த 'கிடாவிளக்கை' பார்த்து தேவி இறங்கி வந்து பிரதிஷ்டை ஆனதாக கோயில் புராணம் கூறுகிறது. அந்த விளக்கு இப்போதும் கோயிலில் உள்ளது. விளக்கை வணங்கிய பின்பு கோயிலுக்குள் செல்வது வழக்கம். பக்தர்கள் இந்த விளக்கில் இருந்து தீபம் ஏற்றி, அடுப்பில் தீயிட்டு நேர்ச்சை பொங்கல் நடத்துகின்றனர். தினமும் பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்யும் வசதி இங்குள்ளது.
கொடிமரத்தில் இருந்து விழுந்த மணி முன்பொருமுறை கோயில் விழாவின் போது, கொடிமரத்தில் இருந்து ஒரு மணி கீழே விழுந்தது. அதனை எடுத்த கோயில் பூஜாரி அருகில் உள்ள ஆலமரத்தில் கட்டினார். அதற்கு பிறகு அவர் நினைத்தது எல்லாம் நடந்தது. பின்னர் அம்மனின் வாக்கு கேட்கும் 'தேவப்பிரசன்னம்' பார்க்கப்பட்டது.
அப்போது ஆலமரத்தில் மணிகட்டுவது அம்மனுக்கு பிடித்தமான வழிபாட்டு நேர்ச்சை என கண்டறியப்பட்டது. அதன் பின்னர் இங்கு மணி கட்டி கும்பிட பக்தர்கள் வரத்துவங்கினர். குழந்தைப்பேறு வேண்டியும், நோய்கள் நீங்கவும், வேலை பெறவும் கோரிக்கை வைத்து பக்தர்கள் அதிக அளவில் மணி கட்டுகின்றனர். ரூ.40 செலுத்தி கோயிலில் மணியை வாங்கலாம். ஒரு மணியில் இருந்து ஆயிரம் மணி வரை கட்டுபவர்களும் உண்டு.
சமீபகாலமாக தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் இங்கு வருகின்றனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு தங்கி ஓய்வெடுத்துச்செல்லவும் வசதி உள்ளது. கார்த்திகை மாத திருவிழா காலத்தில் பக்தர்கள் தங்கி பஜனை செய்வதற்காக 1001 குடில்கள் கட்டப்படுகின்றன.
கோயிலைச் சுற்றி ஐந்து கிணறுகள் உள்ளன. கடலுக்கு மிக அருகில் இருந்தும் உப்பில்லாத சுவையான குடிநீர் இவற்றில் இருந்து கிடைக்கின்றன. அம்மனின் அருள் அமுதமாய் இந்த தண்ணீரை பக்தி பரவசத்தோடு பக்தர்கள் பருகுகின்றனர். மெய்மறந்து, சொல் மறந்து காட்டில் மேக்கதில் தேவி முன்பு நின்று கைகூப்பி தொழுது வெளியே வந்த போது, கடற்காற்றில் ஆடும் ஆலமரத்து மணிகளின் ஓசை ஒலித்துக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு பக்தனின் கனவுகளை சுமந்து கொண்டு அம்மனின் அற்புதத்திற்காக காத்திருப்பதாக தோன்றியது.
படகு பயணம் இலவசம்
பஸ், ரயில், கார் மூலம் கொல்லம் சென்ற பிறகு அங்கிருந்து 19 கி.மீ.,ல் உள்ள சவறா அருகே சங்கரமங்கலம் செல்ல வேண்டும். அங்கிருந்து 2 கி.மீ.,ல் உள்ள கொட்டாரத்துக்கடவு படகுத்துறைக்கு சென்றால், கோயில் சார்பில் இலவசமாக படகு சர்வீஸ் ஏற்பாடு செய்துள்ளனர். இரண்டு நிமிட படகு பயணத்தில் கோயிலை அடையலாம்.
தரிசன நேரம்: அதிகாலை 5:00 - 12:00; மாலை 5:00 - 8:00
தொடர்புக்கு: 86061 25351
- ஜி. வி. ரமேஷ் குமார்