
விதை கொட்டும் கருவி... களை வெட்டும் கருவி... தண்ணீர் சொட்டும் கருவியுடன் காலைப் பொழுதை விவசாயத்திற்காக அர்ப்பணிக்கின்றனர், மதுரை மேலூரைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி இளைஞர்கள்.
'சிறுபிள்ளை வெள்ளாமை வீடு திரும்பாது' என்கிற பழமொழியை உடைத்தெறிந்து விதைதூவி, களையெடுத்து நிலத்திற்கு புத்துயிர் பாய்ச்சுகின்றனர். இவர்களின் காலடி பட்டதும் நிலமும் துள்ளி எழுந்து சாகுபடிக்கு சந்தோஷமாக தயாராகிறது. மதுரை மேலூர் வெள்ளாலபட்டியைச் சேர்ந்த விவசாயி அருணாச்சலம் இவர்களை ஒருங்கிணைத்து விவசாய வேலைக்கு பழக்கியுள்ளார். மாணவர்கள் பாலகிருஷ்ணன், விஜய், வீரமாணிக்கம், சுந்தர், வீரமணிகண்டன், உலகநாதன், பழனிவேல், அருண், பூபதி, கண்ணன், பூமணி, கிருஷ்ணகுமார், அஜித், மணிகண்டன், கல்யாணசுந்தரம், சரவணன் ஆகியோர் இணைந்து குழுவாக செயல்படுகின்றனர்.
கால்நடைகளை கவனிக்கும் அப்பா-அம்மா
மாணவர்களுக்கு விவசாய பாடம் கற்றுத் தரும் அருணாச்சலம் கூறியது: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்துவிட்டு ஓசூரில் 'ஸ்டூல் ரூம் இன்சார்ஜ்' ஆக, மாதம் ரூ.40ஆயிரம் சம்பளம் வாங்கினேன். அதை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்தேன். மதுரையில் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே விவசாயம் செய்கிறேன். தங்கை சரண்யா எம்.எஸ்சி., கணிதம் படித்துவிட்டு விவசாயம் செய்கிறார். அப்பா மகாராஜன் ஆடுகளை பார்த்துக் கொள்ள, அம்மா ராணி மாடுகளை வனிக்கிறார். நான்காவது படிக்கும் மகன் மருதீஸ்வரன் ஆடு, மாடுகளின் கோமியம், சாணத்தை சேகரித்து தருவான். பெரியவர்கள் விவசாயம் நஷ்டகணக்கு என்று விலகிச்
செல்கின்றனர். முறையாக செய்தால் லாபமில்லாத தொழில் எதுவும் இல்லை. இன்றைய இளைஞர்களுக்கு விவசாயத்தை உணர்த்த நினைத்தேன். இந்தநிலையில் மதுரை விவசாய கல்லூரி வேளாண் அறிவியல் மையத்தில், விவசாய கருவிகளை கையாளும் பயிற்சி
அளித்தனர். எங்க ஊர் பசங்களுக்கு சிறியரக டிரம் சீடர், கோனோ வீடர் ஓட்ட கற்று கொடுத்தேன். இதையே பகுதிநேர தொழிலாக
செய்கின்றனர். விவசாயத்தில் நெல் விதை தூவுவதும், களையெடுப்பதும் தான் செலவு கையை கடிக்கும் முக்கிய வேலை. சிறிய கருவி மூலம் விதைநெல் தூவுவது, களையெடுப்பது, உரமிடும் வேலையை மாணவர்கள் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு செலவு குறைகிறது. மாணவர்களின் உழைப்புக்கு பணம் கிடைக்கிறது, என்றார்.
விவசாய பசங்களின் அனுபவங்கள்
வீரமணிகண்டன், வக்புவாரிய கல்லூரி
வாரத்தில் இரண்டு நாட்கள் நான்கு மணி நேரம் வேலை செய்வேன். ரூ.400 கிடைக்கும். வீட்டுச் செலவிற்கு கொடுப்பேன். என் செலவுகளை பார்த்துக் கொள்வேன். இரண்டாண்டு பழக்கத்தில் எங்க வீட்டு 3 ஏக்கர் வயலில் விதை தூவுவது, களையெடுப்பதை நண்பர்களோடு சேர்ந்து நாங்களே செய்கிறோம். வெறும் அரட்டையாக இல்லாமல் விவசாயமாக செய்வது சந்தோஷமாக உள்ளது.
விஜய், விலங்கியல் வக்புவாரிய கல்லூரி
இரண்டாண்டுகளாக விவசாய வேலை பார்க்கிறேன். சிரமமின்றி விவசாயம் செய்யமுடியும் என்பதை கற்றுக் கொண்டேன். விடுமுறை நாட்களில் இதுவே நல்ல உடல் உழைப்பையும், பொழுதுபோக்கையும் தருகிறது. இயந்திரங்கள் இருப்பதால் வேலை எளிதாகவும், ஆர்வமாகவும் உள்ளது.
வீரமாணிக்கம், வக்புவாரிய கல்லூரி
மற்றவர்களின் வயலில் வேலை செய்த அனுபவம் எங்கள் வீட்டு 50 சென்ட் நிலத்தில் விவசாயம் பார்க்கத் தூண்டியது. படிப்புக்கும் வேலைக்கும் தொடர்பில்லை. சேற்றில் கால்வைத்து மற்றவர்களுக்கு சோறு அளிப்பது சுகமான விஷயம்.
சுந்தர், பிளஸ் 2, ஒத்தகடை அரசு பள்ளி
எங்கள் குழுவில் கடைசியாக சேர்ந்தவன் நான். ஆறுமாதமாக விவசாயம் செய்கிறேன். கருவிகளை எப்படி கையாள்வது என சொல்லி கொடுத்ததை அப்படியே செய்கிறேன். பகுதிநேர வேலை செய்ய ஆரம்பித்தபின், படிப்பு செலவுக்கு வீட்டில் பணம் கேட்பதில்லை. மற்றவர்களின் பசிக்காக வேலை செய்கிறோம் என்று நினைக்கும் போது, பிரமிப்பாக இருக்கிறது, என்றார்.
இவர்களை பாராட்ட : 99429 60167
எம்.எம்.ஜெ.,