sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

அழகிய நிலாக்கலாம் - கவிஞர் சினேகனின் பொங்கல் நினைவுகள்!

/

அழகிய நிலாக்கலாம் - கவிஞர் சினேகனின் பொங்கல் நினைவுகள்!

அழகிய நிலாக்கலாம் - கவிஞர் சினேகனின் பொங்கல் நினைவுகள்!

அழகிய நிலாக்கலாம் - கவிஞர் சினேகனின் பொங்கல் நினைவுகள்!


PUBLISHED ON : ஜன 14, 2018

Google News

PUBLISHED ON : ஜன 14, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசித்து ரசிக்கும் வயதில் மனதை இளக வைக்கும் கவிதைகளால் தன் கவி பயணத்தை துவங்கி, தனக்கென தனி 'ஸ்டைலால்' 2500க்கும் மேல் சினிமா பாடல்கள் எழுதி குவித்து களம் கண்டு வலம் வருபவர் இளம் கவிஞர் சினேகன்.

தினமலர் பொங்கல் ஸ்பெஷல் பகுதிக்கு கடகடவென கவிமடை திறந்த தருணங்கள்...

பொங்கல் பண்டிகையை ரசிக்கும் வயது என்றால் அது பள்ளி பருவத்தின் இளமை காலம் தான். ஒரு முறை வந்து போகும் பொங்கலை, ஓராண்டு முழுவதும் எதிர்பார்த்து காத்திருந்த பருவம் அது.

பண்டிகைக்கு ஒரு புத்தாடை தான் கிடைக்கும். ஆனால் அந்தாண்டு முழுவதும் அந்த ஆடை மீது அளவுகொள்ளா பிரியம் இருக்கும். சட்டை, பேண்ட் என்பதெல்லாம் அப்போது பிரச்னை இல்லை. பொங்கலுக்கு நான்கு நாட்களுக்கு முன் நெருங்கிய உறவுகள் ஒன்று கூடும் இடமாக வீடுகள் மாறும். நண்பர்கள் அரட்டைக்கு அளவிருக்காது.

தஞ்சை அருகே புதுக்கரியபட்டி தான் என் சொந்த கிராமம். அங்கிருந்து திருக்காட்டூர் சந்தைக்கு சென்று தான் பொங்கல் பொருட்கள் வாங்க வேண்டும். நுாறு கிராமங்கள் பங்கேற்கும் அந்த சந்தைகள் கூடுவது பொங்கல் விழாவில் தான்.

சந்தைக்கு சென்று கடிப்பதற்கு இதமாக கனு இல்லாத கரும்பு தட்டைகளை தேடி பிடிப்பது, முதல் மஞ்சள் கிழங்கு, பச்சரிசி என பொங்கல் பொருட்களை வாங்கி அப்பா - அம்மாவுடன் வீடு திரும்பும் வரை மனதில் 'பொங்கல் உற்சாகம்' குறையாமல் இருக்கும்.

அப்போது ஒரு கட்டு கரும்பு 10 ரூபாயாக இருந்தது. கட்டில் 15 கரும்புகள் இருக்கும். 500 ரூபாய் கொண்டு சென்றால் வண்டி நிறைய கரும்பு, வாழைத்தார், பொங்கல் பொருட்கள் வாங்கி வீடு திரும்பிய நினைவு உண்டு.

மாட்டு பொங்கலின் நினைவுகள் மறக்கமுடியாது. மாட்டிற்கு பொங்கல் ஊட்டுவற்காக காலையிலேயே மாட்டை குளிப்பாட்டி, கலர் கலர் பொட்டு வைத்து, சீவிய கொம்புகளுக்கு வண்ணமிட்டு, சாம்பிராணி காட்டி பக்குவமாய் மாடுகளை பராமரிப்பதே பெரும் கலை.

காய்கறிகளுடன் பொங்கல் படைத்து, அதை ஊட்டுவதற்கு முன் தண்ணீர் குடிக்க வைத்து சிறு சிறு உருண்டை பிடித்து லாவகமாக ஊட்டுவதை பார்க்கும் போது பொங்கல் விழாவின் உணர்வு ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் உருண்டோடும். விரதம் முடித்த பின் தான் ஜல்லிக்கட்டுக்காக மாடுகளை திறந்து விடுவார்கள். ஜல்லிக்கட்டு அன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மாடு அவிழ்த்து விடப்படும்.

பொங்கல் திருநாள் என்றாலே வேறு எந்த பொழுது போக்கும் இன்றி ஆடுகள், மாடுகளுடன் மக்கள் மகிழ்ச்சியாக கழித்த பொழுதுகள், வீட்டை சுத்தம் செய்வது, வண்ணங்கள் தீட்டுவது, பெரியோர் காலில் சிறுவர் விழுந்து ஆசி பெறுவது, நீண்ட நாட்களுக்கு பின் நண்பர்களை சந்திப்பது... என அரங்கேறிய உணர்வுப்பூர்வமான விஷயங்கள் தான் என் நினைவில் இன்றும் நிழலாடுகிறது.

ஓடும் காலச்சுழல் மாற்றத்தில் இன்று நகர் வாழ்க்கையில் 'சிங்கிள்' கரும்பை வைத்து பொங்கல் கொண்டாடி முடிப்போர் ஏராளம். 'டிவி' பார்த்து பொங்கல் வைக்கும் கலாசாரம் வந்து விட்டது.

பூமிக்கும், சாமிக்கும் நன்றி சொல்வது மட்டுமல்ல பொங்கல் விழா. ஒரு வருடம் தேய்ந்து போன வாழ்க்கையை மறுபடியும் சலவை செய்துகொள்ள, நம்மை புதுப்பித்துக்கொள்வதற்கான கலாசார விழா அது. அந்த பழைய பொங்கலை இன்றைய இளைய தலைமுறையினருக்கு மீண்டும் காட்ட வேண்டுவது நமது கடமை. ஒட்டுமொத்த கலாசாரத்தின் பொக்கிஷமாக புனித விழாவாக பொங்கல் விழாவை நாம் கொண்டாட வேண்டும்.

அது ஒரு அழகிய நிலா காலம்...

அது மீண்டும் வருமா என்ற ஏக்கம் எனக்கு உண்டு. அதற்கான முயற்சியும் என்னுள் உண்டு. மீண்டும் வரும் நம்பிக்கையுடன் எனது உணர்வு பூர்வ பொங்கல் வாழ்த்துகள்!






      Dinamalar
      Follow us