/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
குக்கர் பொங்கலான உழவர் பொங்கல்....!
/
குக்கர் பொங்கலான உழவர் பொங்கல்....!
PUBLISHED ON : ஜன 14, 2013

பொங்கல் என்ற சொல், தமிழில் சோறு பொங்குவதையோ, பால் பொங்குவதையோ மட்டும் குறிப்பதல்ல. வளர்தல், உயர்தல், எழுதல், பொழிதல், நிறைதல், மிகுதி என பல அர்த்தங்களுடன் உள்ளும், புறமும் உற்சாகத்தை பொங்கவைக்கும் ஒரு சொல். மண்ணும், மனமும் இயற்கையால் நிறைந்து வழிவதை சொல்வது.
இயற்கையின் தலைப்பிள்ளைகள் உழவர்கள். அவர்கள் இன்று தலைகுனிந்து நிற்கின்றனர். ஊர்ப்பசியை தீர்ப்பவர்கள், உறு பசியால் உயிரை விடுகின்றனர். உழவையும், சுகாதாரத்தையும் 'தாய்த்தொழில்கள்' என்றார் மகாத்மா காந்தி. இவை, இன்று பணத்தை முன்வைத்து நடக்கும் சூதாட்ட தொழில்களாகிவிட்டன. மரபுப் பயிர்கள் விளைந்த இடத்தில், பணப்பயிர்கள். விவசாயத்தை, மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுகிறது.
வாழ்த்து அட்டைகளால் வீடுகள் நிரம்பிய காலம். மண் குடிசை வாசல் முன் கோலமிட்டு, கரும்புகள் சாற்றி, துணியால் முடிந்த ஈரத்தலையுடன் பெண்கள் பொங்கலிடுவது,
மாடுகளுக்கு பொங்கல் ஊட்டுவது என அழகான சித்திரங்கள் தான் இன்று நம் மனதில் நிழலாடுகின்றன. மதத்தொடர்பு இல்லாத ஒரு பண்டிகை தைப்பொங்கல்தான். இதை அறிந்தே மக்கள் இயற்கையை கொண்டாடுகின்றனர்' என்கின்றனர் படைப்பாளிகள்.மேலாண்மை பொன்னுச்சாமி (சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்):
அதிகாலை சூரிய உதயத்தில் வீட்டு முற்றத்தில் கரும்பு சாற்றி, பொங்கல் வைப்பது தமிழ் மரபு. ஆதியில், அச்சுறுத்தலாக கருதப்பட்ட காளைகளை வசக்கி, கால்நடைகளாக மாற்றினான் மனிதன். இதன் வெற்றிவிழாதான் ஜல்லிக்கட்டு. ஜப்பான், ஸ்பெயின் உட்பட பல நாடுகளில் எருதுகளை அடக்கும் விழாக்களை இன்றும் காணலாம்.
ஜல்லிக்கட்டு முரட்டுத்தனம், அநாகரிகம் என நகரத்து மக்கள் தவறான கண்ணோட்டத்தில் பேசுவதற்கு வரலாறு அறியாத தன்மைதான் காரணம். முன்பு, மேலாண்மறைநாடு கிராமத்தில் 98 ஜோடி காளைமாடுகள் இருந்தன. பொங்கலன்று மாடுகளை குளிக்கவைப்பர். அலங்கரித்து தெருக்களில் ஓடவிடுவர். மாட்டு வண்டி சக்கரங்களுக்கு வண்ணங்கள் தீட்டுவர். மாடுகளின் கொம்புகளுக்கு அரசியல் கட்சிகளின் கொடிகளில் உள்ள வண்ணங்கள் தீட்டுவர்.
தையன்று மிருகவதை, அசைவ உணவுக்கு இடமில்லை. காய்கறி உணவுகள் சாப்பிடுவர். டிராக்டர்களின் வருகையால் காளைகள் காணாமல் போயின. காலமாற்றத்தால், கொண்டாட்ட முறைகள் மாறியிருக்கலாம். பேராசிரியர் ஞானசம்பந்தன்:
தையில் வசந்தகாலம் துவங்குகிறது. உற்பத்தி செய்த நெல் வீடு வந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விழா பொங்கல். நெல் இருப்பு வைத்து, வாரிசுகளுக்கு திருமணம் முடிப்பர்; அடகு வைத்த நகைகளை மீட்பர். உயிரினங்களுக்கு நன்றி செலுத்துவது தமிழரின் சிறப்பு. வீடுகளில் பசு, காளைகள் இருப்பது வங்கி சேமிப்பு மாதிரி.
அறுவடையான நெல் வைக்கோல், அரிசி உமி, கழுவு நீர், வடிச்சதண்ணீர், எச்சில் இலை என கழிவுகளை பசுக்களுக்கு உணவாக அளிக்கிறோம். இதற்கு பிரதிபலனாக பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என 5 வகை உயிர்ப்பொருட்களை, பிரதிபலனாக பசுக்கள் நமக்கு தருகின்றன. வீடுகளை தானாக சுத்தம் செய்வர். இதை யாரும் சொல்லி செய்வதில்லை. உலகில் வேறு எங்கும் இது கிடையாது.
புது மாப்பிள்ளைகளின் பல் உறுதியை பரிசோதிக்க கரும்பை கடிக்க கொடுப்பர். பஞ்சபூதங்களுக்கு நன்றி தெரிவிக்கும் உறவுத்திருவிழா. இன்று, வீட்டிற்குள் குக்கர் பொங்கலாக மாறிவிட்டது. கரும்பு, ஜூஸாகிவிட்டது. வாழ்த்துக்கள் எஸ்.எம்.எஸ்., களாக சுருங்கிவிட்டன.
-பாரதி

