/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
மாட்டு பொங்கல் ஸ்பெஷல்: கோமாதா குலமாதா
/
மாட்டு பொங்கல் ஸ்பெஷல்: கோமாதா குலமாதா
PUBLISHED ON : ஜன 14, 2014

காமதேனு-பெயர் விளக்கம் தேவலோக பசுவை 'காமதேனு' என்பர். 'காமம்' என்றால் விருப்பம். 'தேனு' என்றால் 'இளங்கன்றுடன் கூடிய பசு'. விரும்பியதைத் தரும் இளங்கன்றுடன் கூடிய பசு என்று அர்த்தம். காமதேனுவின் கன்றிற்கு நந்தினி என்று பெயர்.
மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் ஏன்?
வாயில்லா ஜீவன் என்று பசுவைச் சொல்கிறோம். ஆனாலும், விலங்கினங்களில் பசு இனம் மட்டுமே அடிவயிற்றிலிருந்து 'அம்மா' என்று அழைத்து, அன்பை வெளிப்படுத்துகிறது. 'அம்மா' என்ற சொல்லுக்கு, 'அன்பால் தன் குழந்தைக்கு பாலூட்டி சீராட்டுபவள்' என்று பொருள். ஆனால், பெற்றவள் இளம் வயதில் மட்டுமே பால் தருவாள். பசுவோ, இளம் வயது முதல் முதுமை வரை நமக்கு பால் தருகிறது. நம்மோடு என்றும் பிரிக்க முடியாத உறவாக இருப்பதால் பசுவைக் 'கோமாதா' என்று போற்றி வழிபாடு செய்கிறோம். காளை நம் வயல்களை உழுகிறது, அறுவடைப் பணியில் உதவுகிறது. வண்டி இழுக்கிறது. உழைப்பின் சின்னமாய் விளங்குகிறது. அவற்றுக்கு நன்றி செலுத்தும் நாளே மாட்டுப்பொங்கல்.
'கோ' : பாலகிருஷ்ணர் பசுவைப் போல, பூமியும் தாயாக நமக்கு தேவையான தண்ணீர், தானியங்கள், உணவுவகைகளைக் கொடுக்கிறாள். அவளும் கூட ஒருமுறை பசுவாக வடிவம் கொண்டாள். துவாபரயுகத்தில், அசுர சக்திகளின் ஆதிக்கம் பூமியில் அதிகரித்தது. அவர்கள் செய்த பாவத்தை பூமித்தாயால் சுமக்க முடியவில்லை. அப்போது விஷ்ணு, அவளது பாரம் தீர்க்க கிருஷ்ணராக கோகுலத்திற்கு வந்தார். அப்போது பசு வடிவெடுத்து பூமிதேவியும் அவருடன் வந்தாள். கிருஷ்ணவதாரம் முழுவதும் அவர் பசுக்களிடம் அன்பு காட்டி வந்தார். இதனால் அவரை 'கோ'பால கிருஷ்ணர் என்றனர். 'கோ' என்றால் 'பசு'. யமுனை ஆற்றங்கரையில் பிருந்தாவனத்தில் மேய்ச்சலுக்குச் செல்லும் பசுக்களை ஒன்று சேர்க்க, புல்லாங்குழல் இசைப்பார். காற்றினிலே கீதம் கலந்ததும், பசுக்கள் தங்களை மறந்து கிருஷ்ணரைத் தேடி ஓடி வரும். குழல் இசைக்கும் வேணு கோபாலன் தன் இடக்காலை பூமியில் ஊன்றியபடி செங்குத்தாக வைத்திருப்பார். தாமரை போன்ற அவரின் திருவடியைப் பசுக்கள் நாவினால் சுவைக்கும். எப்போதும் கடவுளின் திருவடியை நினைத்துக் கொண்டிருப்பவனே தன்னோடு ஐக்கியமாக
முடியும் என்பதையே வேணுகோபாலனின் திருவடியை சுவைக்கும் பசு உலகுக்கு உணர்த்துகிறது.