/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
மூர்க்க குணமும் முட்டுக் கிடாய்களும் - வந்து பாரு பக்கம்; நாங்க 'கொம்பு வச்ச சிங்கம்'
/
மூர்க்க குணமும் முட்டுக் கிடாய்களும் - வந்து பாரு பக்கம்; நாங்க 'கொம்பு வச்ச சிங்கம்'
மூர்க்க குணமும் முட்டுக் கிடாய்களும் - வந்து பாரு பக்கம்; நாங்க 'கொம்பு வச்ச சிங்கம்'
மூர்க்க குணமும் முட்டுக் கிடாய்களும் - வந்து பாரு பக்கம்; நாங்க 'கொம்பு வச்ச சிங்கம்'
PUBLISHED ON : ஜன 15, 2023

தொட்டுப்பார்த்தால் முட்டித் துாக்கிஎறிந்து விடும் வளைந்து படர்ந்த கொம்புகள், கர்ஜிக்கும் சிங்கம் போல் சிலிர்க்க வைக்கும் கம்பீர பிடரி, முரட்டுக் குணத்தால் தெறிக்க விட்டு மிரட்டும் கண்கள், 'புதிய எதிரியே வா என்னை எதிர்க்கவே...' என்பது போல் களத்தில் எதிரிக்கு சவால் விடும் மூர்க்கக் குணம்… என முட்டுக் கிடாய்களை பார்த்தாலே பரவசம் தான்.
பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர்களின் பண்பாடு, வீரத்தை பறை சாற்றும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போல் 'முட்டுக் கிடாய்' என்ற கிடாய் சண்டைகளும் களைகட்டும்; இளைஞர்கள் கூட்டம் மகிழ்ச்சியில் துள்ளும். ஜல்லிக்கட்டுக்காக தங்கள் பிள்ளையை போல் காளைகளை வளர்ப்பவர்கள், கிடாய்களையும் அதுபோல் வளர்த்து முரட்டு குணமுள்ள குட்டிகளின் மனபலத்தை கண்டறிந்து சிறப்பு பயிற்சிகள் மூலம் 'முட்டுக் கிடாய்'களாக மாற்றுகின்றனர்.
தமிழகத்தில் மயிலம்பாடி, எட்டையாபுரம் செவலை மலை, கொங்கு, வெளிச்சி, அணில்மறை, கருமறை, சாம்பல், இருசெல், சுத்தக் குறும்பை, மொட்டை கருப்பு, நெத்தி வெள்ளை... என நாட்டின கிடாய்கள் பட்டியல் நீள்கின்றன. இதுதவிர ஆந்திராவின் கோங்கு, கர்நாடகாவின் குறும்பை போன்ற உயர் ரக கிடாய்களையும் தமிழகத்தில் வளர்த்து வருகின்றனர். முட்டுக் கிடாய்களை 'கவுரவத்திற்காக' பரம்பரையாக வளர்ப்பவர்கள் உண்டு.
அந்த வகையில் முட்டுக் கிடாய்களை வளர்த்து வரும் மதுரை மைதீன் பாட்ஷாவை சந்தித்தோம். அவர் நம்மிடம்...
ஜல்லிக்கட்டை போல் கிடாய் முட்டையும் பாதுகாக்க இளைய தலைமுறையினர் களம் இறங்க வேண்டும். அப்பா, நான் என எங்கள் குடும்பத்தில் 45 ஆண்டுகளாக பல்வேறு இனங்களை சேர்ந்த முட்டுக் கிடாய்களை வளர்த்து வருகிறோம்.
தற்போது நாட்டினம், ஆந்திரா, கர்நாடகம் என 18 கிடாய்கள் வளர்க்கிறேன். இதற்காக காரியாபட்டி (விருதுநகர் மாவட்டம்) அருகே கிடாய் வளர்ப்புக்காக பிரத்யேக கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.
ஆறு மாதக் குட்டியில் இருந்தே போட்டிக்கு பழக்குகிறோம். முட்டுக் கிடாய்களுக்கு கொம்பும், உடல் நீளமும் தான் பலம். வாரம் ஒருமுறை நீச்சல், நடை பயிற்சி அளித்து துவரம் பருப்பு, உளுந்தங் குருணை, நிலக்கடலை, பச்சரிசி, பாசிப்பயறு, கொள்ளு, கம்பு, கடலை புண்ணாக்கு, பேரீச்சை, மக்காச்சோளம், கோதுமை தவிடு, அகத்திக்கீரை என உடலை வலுவேற்றும் உணவுகளை கொடுக்கிறோம்.
போட்டிக்கு 20 நாட்களுக்கு முன் இளநீர், பாலில் முட்டை கலந்து கொடுப்போம். ஜல்லிக்கட்டு காளைகளை மண் குவியலில் முட்டவிட்டு தயார் படுத்துவது போல், சக வயதில் உள்ள கிடாய்களுடனும், காய்ந்த மரங்களிலும் முட்ட விடுவோம். 2 பற்கள் (ஒரு வயது), 4 பற்கள் (2 வயது) என ஒரே பல் எண்ணிக்கை உள்ள கிடாய்களை தான் முட்டுக்கு விடுவது மரபு.
இவற்றை பராமரிப்பது பெரும் கலை. இதற்காக தனி அறைகள், பயிற்சி பெற்ற இளைஞர்களை வேலைக்கு வைத்துள்ளோம். ஒவ்வொரு நாளும் சிறுநீர் என்ன கலரில் இருக்கிறது என ஒரு தாய் தன் குழந்தையை பேணுவது போல் கவனிப்போம். வாரம் ஒருமுறை உடல் பரிசோதனை செய்ேவாம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டிகளில் எங்கள் கிடாய்கள் பரிசுகளை குவித்துள்ளன. தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுபோல் கிடாய் வளர்த்து வருகின்றனர். போட்டிக்காக மட்டுமல்ல, சிலர் கவுரவத்திற்காகவும் வளர்த்து வருகின்றனர் என்கிறார்.
மேலும் அறிய: 98421 73123
50 முதல் 75 முட்டுகள்
போட்டியில் 50 முதல் 75 முட்டுகள் வரை நிர்ணயிக்கப்படுகிறது. சண்டையிடும் இரண்டு கிடாய்களும் 50 முட்டுகள் முட்டி நின்றால் போட்டி 'டிரா' என அறிவிக்கப்படும். போட்டியை தொடர இரு தரப்பினரும் சம்மதித்தால் மேலும் 25 முட்டுக்கு விடப்படும். இதில் பின் வாங்கும் கிடாய் தோல்வியுற்றதாக அறிவிக்கப்படும்.
போட்டிக்கு பின் கிடாயின் தலையில் உப்பு கலந்த வெந்நீரால் ஒத்தடம் கொடுக்கின்றனர். ஒரு போட்டிக்கும் அடுத்த போட்டிக்கும் மூன்று மாத இடைவெளி தருகின்றனர்.
ஒரு வெற்றி ரூ. 1 லட்சம்
முட்டுக்கிடாய் குட்டியின் விலை ரூ.30 ஆயிரம். ஒரு முறை வெற்றி பெற்ற கிடாய் ரூ. 1 லட்சம் வரை விலை போகும். அடுத்தடுத்து வெற்றி பெறும் போது அதன் விலை பல மடங்கு உயரும். கவுரவத்திற்காக வளர்ப்பவர்கள் கிடாய்களை விற்கமாட்டார்கள்.
'பெயில்' ஆகாத 'பேய்க்கருப்பு'
'பேய்க்கருப்பு' என்ற நாட்டின கிடாய் இதுவரை 20க்கும் மேற்பட்ட போட்டிகளில் முதல் பரிசு வென்றுள்ளது. ஒரு போட்டியில் கூட இக்கிடாய் தோற்றது இல்லை.
மனநிலைக்கு ஏற்ப பயிற்சி
பயிற்சியாளர் கனி கூறுகையில், 'கிடாய்களுக்கு நாங்கள் தான் பாகன். இதன் அருகே மற்றவர்கள் சென்றால் முட்டித் துாக்கி விடும். தமிழகத்தில் நடந்த போட்டிகளில் பங்கேற்ற கிடாய்களுக்கு நான் பயிற்சி அளித்துள்ளேன்' என்றார்.
பொங்கலை முன்னிட்டு
கிராமங்களில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவர். இதில் ஏறு தழுவுதல், உறியடித்தல், மாட்டுவண்டி பந்தயம், சிலம்பம், கபடியில் ஆண்களும், கோலமிடுதல், கும்மி, கோலாட்டம் போன்றவற்றில் பெண்களும் பங்கேற்பர்.