PUBLISHED ON : ஜன 15, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறுக்கும் நெடுக்குமாக
வேர் கிழிய வீழ்ந்துகிடக்கும்
தென்னைகளின் மீது 
மாறி மாறி அமர்ந்து
எதையோ தேடிக்கொண்டிருக்கும்
ஒரு பறவையை
பார்த்துக் கொண்டிருக்கிறான்
விவசாயி
அவனது வீட்டையும் வயலையும்
துடைத்தழித்த புயல்
இன்னும் அவனை
கடந்து முடியவில்லை
மேலாடையற்ற
அவனது காந்திய உடல்
நடுங்கிக்கொண்டிருந்தது
விதைத்த கரங்கள்
திருவோடுகளாவதைக்
கற்பனை செய்ய முடியாமல்
கைகளை உதறிக்கொண்டான்
கடைசியாக ஒருமுறை
தலைதுாக்கிப் பார்த்து
சேற்றில் புதைந்துபோன
அந்தப் பசுவின் கண்களை
மறக்க முடியவில்லை
நேற்று இரவு 
அந்தப் பசு
அவனது கனவில் வந்தது
நம்பிக்கையின் பச்சைநிறம்
காற்றிலசைந்தது
சூரியனின் ஒளிக்கீற்றுகள்
அவனது குடிசையை
புதிதாகப் பின்னிக்கொண்டிருந்தன
புன்னகையில் பால்பொங்க
கரும்பு வயலுக்குள்ளிருந்து
அவன் வெளிவருகிறான்
- கவிஞர் பழநிபாரதி

