
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுத்தும் நீயே சொல்லும் நீயே
பொருளும் நீயே பொற்றமிழ்த் தாயே
முகமும் நீயே அகமும் நீயே
முகவரி நீயே முத்தமிழ்த் தாயே
நீயே எங்கள் அடையாளம்
நீயே எங்கள் பூகோளம்
நீயே எங்கள் வரலாறு
நீயே எங்கள் பண்பாடு
அறமே வாழ்வின் அச்சாணி என்றாய்
பிறர்க்கென வாழ்தல் பெருவாழ்வென்றால்
உறவே உலகென வாழும் உலகில்
உலகே உறவென ஓங்கி மொழிந்தாய்
குருதியில் உலகம் குளித்த காலையில்
போர்க்களம் தோறும் பூச்செடி நட்டாய்
ஒன்றே குலமென ஓதி முடித்தாய்
நன்றே செய்திட ஞானமளித்தாய்
ஆயிரமாயிரம் ஆண்டுகள் எங்கள்
ஆன்ற புலவோர் எழுத்தில் இருந்தாய்
உழுதும் விதைத்தும் உலகைச் சமைத்த
உழைக்கும் மக்கள் சொல்லில் இருந்தாய்
ஆழி அலையிலும் ஆயுத மழையிலும்
அழிந்துபடாத பொருளாய் இருந்தாய்
நிலவும் கதிரும் நிலவும் வரையில்
நீயே தமிழே எங்கள் முதல்தாய்
கவிப்பேரரசு வைரமுத்து
poet.vairamuthu@gmail.com