PUBLISHED ON : ஜன 14, 2017

காரைக்குடி அருகே விசாலயன்கோட்டையை சேர்ந்த 14-வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சங்கம் அமைத்து தங்கள் வீட்டு நிலத்தில் தாங்களே விவசாயம் செய்து, வேளாண்மைக்கு முன்னோடியாக திகழ்கின்றனர்.
நாட்டின் முதன்மையான தொழிலாக விவசாயம் இருந்தாலும், இளைய தலைமுறையை சேர்ந்த பெரும்பாலானோர், 'ஒயிட் காலர்' வேலை வாய்ப்பே உயிர்நாடி என வாழ்கின்றனர். ஏற்றம் இறைக்கவோ, ஏர் உழவோ இன்றைய இளைய தலைமுறைக்கு தெரிவதில்லை. லாபம் என்ற குறிக்கோளுடன் மட்டுமே விவசாயத்தை பார்ப்பதால், இந்த நிலைமை. லாபம் என்பதையும் தாண்டி, மன நிறைவு விவசாயத்தில் தான் உள்ளது. இதை அடுத்து வரும் தலைமுறை உணரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர் சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தை சேர்ந்த விசாலயன்கோட்டை தென்றல் குழந்தைகள் விவசாய சங்க குழுவினர்.
மொத்தம் 30 உறுப்பினர்கள். 14 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே இதில் சேர வேண்டும். இவர்களுக்கு தலைவராக முதன்மை பொறுப்பாளர், இரண்டாம் நிலை பொறுப்பாளர் தேர்வு செய்யப்படுகிறார். இவர்களின் முக்கிய நோக்கமே இயற்கையான முறையில் காய்கறிகளை வீட்டு தோட்டத்தில் விளைய வைத்து, பயன்பெறுவது தான். ஒவ்வொரு நாளும் காலை,மாலையில், வீட்டு தோட்டத்தின் பராமரிப்பு இந்த சிறுவர்களின் கையில் உள்ளது.
ஒவ்வொருவருக்கும் ஒரு மாதாந்திர அட்டை வழங்கப்படுகிறது. அந்த மாதாந்திர அட்டையில், அன்றன்று அவர்கள் செய்த பணிகளுக்குரிய மதிப்பெண்ணை குறித்து வைத்து கொள்ள வேண்டும். காலை 5 மணிக்கு எழுந்தால் ஐந்து மதிப்பெண். 6 மணிக்கு எழுந்தால் 4 மதிப்பெண். அம்மா எழுப்பி விட்டால் ஜீரோ மதிப்பெண். உடற்பயிற்சி, அம்மாவுக்கு உதவி செய்தால், சிறுசேமிப்பில் ஈடுபட்டால், ஊர் சுற்றாமல் இருந்தால், அளவாக விளையாடினால், பெரியவர் சொல் கேட்டால், சண்டை போடாமல் இருந்தால், தன் வேலையை தானே செய்தால், பிறரிடம் யாசகம் கேட்காமல் இருந்தால், கீரை, காய்கறி சாப்பிட்டால், வீட்டு தோட்டத்தை பராமரித்தால், ஒற்றுமையாக இருந்தால் என ஒவ்வொன்றுக்கும் தலா ஐந்து மதிப்பெண்ணை அவர்களே வழங்க வேண்டும். ஒரு நாளைக்கு மொத்தம் 70 மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், இவர்களின் சங்க கூட்டத்தில் இந்த மாதாந்திர அட்டை பார்வைக்கு வைக்கப்பட்டு, இதில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு ரிலையன்ஸ் பவுண்டேஷன் பால மகா சபை சார்பில் பரிசு வழங்கப்படுகிறது.
ஆர்.அர்ஜூன், எட்டாம் வகுப்பு , விசாலயன்கோட்டை: ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கி இயற்கை காய்கறிகளை சாப்பிட வேண்டும், பிற தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும், வேளாண்மையை உயிர் மூச்சாக கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ரிலையன்ஸ் பவுண்டேஷன் சார்பில் எங்கள் சங்கம் செயல்படுகிறது. மாதம் ஒரு நாள் கூட்டம் நடத்துவோம். தினந்தோறும் டியூஷன் இருக்கும். கல்லூரியில் படிக்கும் சண்முக பிரியா அக்கா தான் எங்களுக்கு இலவசமாக டியூஷன் எடுக்கிறார்.
எஸ்.கோகிலா, ஆறாம் வகுப்பு: வீட்டு தோட்டத்தில் முருங்கை, பாகற்காய், மாதுளை, மல்லி உள்ளிட்டவைகளை பயிர் செய்து வருகிறோம். மண்புழு உரத்தை உபயோகிக்கிறோம்.
நாகராஜன், ரிலையன்ஸ் அறக்கட்டளை: அடுத்து வரும் தலைமுறைக்கு, விவசாயத்தை எடுத்து செல்ல வேண்டும் என்ற அடிப்படையில், இந்த சிறுவர் விவசாய சங்கங்களை ஏற்படுத்தி உள்ளோம். அல்லிக்கோட்டை, டி.நாகணியில் உள்ளது. அடுத்ததாக விசாலயன்கோட்டையில் ஆரம்பித்துள்ளோம் இங்கு 71 வீட்டு தோட்டம் உள்ளது. சாத்தம்பத்தியில்35 தோட்டம் உள்ளது.
இங்குள்ள சிறுவர்கள் விவசாயத்தில் மட்டுமன்றி, சிறு சேமிப்பிலும் சிறந்து விளங்குகின்றனர். அவர்களுக்கு வங்கி கணக்கு துவங்க ஏற்பாடு செய்து வருகிறோம். ஒரு கணினி வசதியும் வழங்க உள்ளோம். சங்கம் மூலம் சிறுவயதிலேயே அவர்களின் ஆளுமை திறன், பிற தகுதிகள் வளர்கிறது, என்றார்.
இவர்களை ஊக்குவிக்க 98403 43852.
டி.செந்தில்குமார்