
மகன்: நீங்க கரும்பு மாதிரின்னு அம்மா சொல்றாங்க...
அப்பா: அவளுக்கு என்ன திமிரு...!
மகன்: ஏம்ப்பா... நல்லவிதமா தானே சொல்லிருக்காங்க?
அப்பா: டேய்... அவளுக்கு கரும்பு பிடிக்காதுடா...!
-என்.ஆஷிகா, சென்னை.
காதலன்: உனக்கு என்ன பொங்கல் 'கிப்ட்' வாங்கணும்னு யோசிக்கிறேன்...
காதலி: பச்சை கலர் சுரிதார் வாங்கித் தாங்க!
காதலன்: உன் தங்கையும் அதே கலர் தான் வேணுங்கிறா... அதான் யோசிச்சுட்டு இருக்கேன்!
-எம்.கோகிலா, கோவை.
வாடிக்கையாளர்: ஏம்ப்பா... பொங்கலுக்கு ஏதாச்சும் தள்ளுபடி இருக்கா?
கடைக்காரர்: வாங்குற ஒவ்வொரு கிலோ சர்க்கரைக்கும் மூன்று வேளை 'சுகர் மாத்திரை' தர்றதா இருக்கோம்.
-வி.என்.திலகவதி, காஞ்சிபுரம்.
பயணி 1: பொங்கல் ஸ்பெஷல் பயண டிக்கெட் புக் செய்தவரை ஏன் அடிக்கிறாங்க?
பயணி 2: பஸ்களுக்கு பதிலா மாட்டு வண்டிகளை கொண்டு வந்து நிறுத்தியிருக்காராம்...!
-எஸ்.ஷோபனா, மதுரை.
நண்பர் 1: என் மனைவி என்னை ரொம்ப அசிங்கப்படுத்துறா!
நண்பர் 2: தன் தோழிகள் வழியா உனக்கு பொங்கல் வாழ்த்துக்கள் தானே சொன்னாங்க!
நண்பர் 1: வந்த வாழ்த்துக்கள் எல்லாமே மாட்டுப் பொங்கலுக்கு அனுப்ப வேண்டியதுய்யா!
-ஆர்.மகாதேவன், திண்டுக்கல்.
தோழி 1: காலையில் கோலம் போட்டதுக்கு எங்க அம்மா திட்டிட்டாங்கடி...!
தோழி 2: இது என்ன கொடுமை? யாராச்சும் கோலம் போட்டதுக்கு திட்டுவாங்களா?
தோழி 1: கோலம் போட்டது எதிரில் உள்ள என் காதலன் வீட்டில்!
-எஸ்.பாக்கியநாதன், திருப்பூர்.
சிறுவன் 1: வர...வர... எங்க தாத்தாவை எனக்கு பிடிக்க மாட்டேங்குது...!
சிறுவன்2: ஏன் அப்படி சொல்ற...?
சிறுவன் 1: ஆசையா கரும்பு கடிங்கன்னு கொடுத்தா... வாங்கவே மாட்டேங்கிறாரு...!
-மு.மணிவாசகன், புதுச்சேரி.