/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
இயற்கையுடன் இணைந்த வாழ்வு - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
/
இயற்கையுடன் இணைந்த வாழ்வு - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
இயற்கையுடன் இணைந்த வாழ்வு - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
இயற்கையுடன் இணைந்த வாழ்வு - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
PUBLISHED ON : ஜன 15, 2020

தென்னகத்தை சேர்ந்த பழமைவாய்ந்த ஆதினங்களில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினமும் முதன்மையானது. பல தலைமுறைகளாக ஆன்மிகம் மட்டுமின்றி சமூக, தமிழ், கல்வி, விவசாயத்திற்கு பல அரிய தொண்டுகளை ஆற்றி வருகிறது. தமிழர் திருவிழாவான பொங்கல் திருநாள் பாரம்பரியம் குன்றாமல் ஆதினத்தில் கொண்டாடப்படுவதுடன், இரண்டாயிரம் மேற்பட்டோருக்கு மண்பானை, அரிசி, வெல்லம், கரும்பு போன்றவை அருள்கொடையாக வழங்கப்படுகிறது.
தற்போதைய ஆதினம் பொன்னம்பல அடிகளார் நிறைந்த தமிழறிஞர். அன்பே வாழ்வு, அன்பே சிவம், சமய வாழ்வு, தமிழ் பண்பாடு, கனவில் வந்த கருத்து மழை, உயிர் நாரில் தொடுத்த மாலை என பல நுால்களை எழுதியிருக்கிறார். இயற்கை விவசாயம் மீதான ஆர்வத்தால் கால்நடை பல்கலையுடன் இணைந்து வேளாண் அறிவியல் நிலையம் மூலம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறார். குறைந்த கல்வித்தகுதியுடைய கிராமப்புற மாணவர்கள் தொழில் பயிற்சி பெற குன்றக்குடி, விழுப்புரம் அருகே ஐ.டி.ஐ.,க்களையும் நடத்தி வருகிறார்.
குன்றக்குடி ஆதின மடத்தில் இயற்கை முறையில் பயிரிட்டுள்ள தோட்டத்தில் மஞ்சள்செடிகள் பொங்கலுக்கு அறுவடை செய்ய தயாராகவுள்ளன.
* இந்தாண்டு பொங்கல் கொண்டாட்டம்
பொங்கல் விவசாயிகளின் திருநாள். உழைக்கும் மக்களின் திருநாள். தமிழ் பண்பாட்டு திருநாள். விவசாயம் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இன்று அறிவியல், தொழில்நுட்பங்கள் என்னதான் வளர்ச்சி பெற்றிருந்தாலும் கூட விவசாயம் இல்லை என்றால் எதுவுமே இல்லை. அனைத்தும் அடித்தளமாக விவசாயம் விளங்குகிறது. உலகிற்கு உணவு வழங்கும் விவசாயிகளின் வாழ்க்கை நலம் பெற வேண்டும். இன்றைய இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். இயற்கை விவசாயம் வெற்றி பெற வேண்டும். இயற்கையுடன் இணைந்து வாழ்வு தேவை. இதற்காக ஆதினம் பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. பராம்பரியமாக பொங்கல் அன்று மண்பானையில் பொங்கலிட்டு வழிபாடு நடக்கும்.
* இயற்கை விவசாயம் மீதான ஈடுபாடு எப்படி
இன்று விதவிதமான நோய்கள் பெருக்கத்திற்கு காரணம் செயற்கை உரங்கள் தான். உற்பத்தியை அதிகரிக்க பயன்படுத்தும் ரசாயனங்களால் பொன்னு விளைவிக்கும் மண்ணும் நஞ்சாகிறது. நம் முன்னோர்கள் கடைபிடித்தது போல இயற்கை விவசாயத்தை பின்பற்றி அதிக உற்பத்தியை ஈட்டலாம். கால்நடை பல்கலை துணையுடன் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறோம். கால்நடைகள் வளர்ப்பு, தோட்ட பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இதற்காக பத்து பேராசிரியர்கள் இங்கு பணிபுரிகின்றனர். மண் பரிசோதனை செய்து மண்ணின் தரத்தை கண்டறிந்து அதற்கு ஏற்ப என்னென்ன பயிரிடலாம் என யோசனை வழங்கப்படுகிறது. இம்மையம் மூலம் எண்ணற்ற முன்னோடி விவசாயிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
* தட்பவெப்ப நிலை மாற்றம் பாதிப்பு ஏற்படுத்துகிறதே
இயற்கையை அழித்ததன் விளைவு சந்திக்க வேண்டியிருக்கிறது. மழைநீரை வீணாக்காமல் சேமிக்க பழகிட வேண்டும். மழைநீரை சேமிக்க செட்டிநாடு பேட்டன் என ஒரு நடைமுறையே உள்ளது. செட்டிநாட்டு ஏரியாவிலுள்ள ஒவ்வொரு கோயிலிலும் ஒரு குளம் இருக்கும். குன்றக்குடியில் மருதாபுரி குளம், வையாபுரி தீர்த்தம் உள்ளிட்ட நான்கு குளங்கள் உள்ளன. இதனால் இங்கு நிலத்தடி நீருக்கு எந்த காலத்திலும் பஞ்சமிருக்காது.
* ஆதினத்தின் தமிழ் தொண்டு
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் சிலப்பதிகாரம் எழுத முற்பட்ட போது குன்றக்குடியில் தான் மூலப்பத்திரங்களை பெற்று உரை எழுதினார். மறைந்த மகாசன்னிதானத்தின் பேச்சு, மூச்சு எல்லாமே தமிழ் என இருந்தது. எண்ணற்ற நுால்களை தமிழ் உலகிற்கு தந்து விட்டு சென்றிருக்கிறார். அன்று முதல் இன்று வரை இத்தொண்டு தொடர்கிறது. ஆதினம் சார்பில் மக்கள் கல்வி மையம் மூலம் கிராமப்புற மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஐ.டி.ஐ.,க்கள், கல்வியியல் கல்லுாரியும் நடத்தப்படுகிறது.
* இன்றைய தலைமுறையினருக்கு கூற விரும்புவது
இன்று நம் குடும்ப அமைப்பில் அன்பு தேவைப்படுகிறது. அன்பு குறைவதால் பல சிக்கல்கள் உருவாகின்றன. அன்பு குறைவதே ஆதரவற்ற இல்லங்கள் அதிகரிக்க காரணமாகின்றன. பெரியவர்களை பாதுகாக்க தவறுகின்றனர். குழந்தைகளை கவனிக்க தவறுகின்றனர். எனவே அனைவரிடமும் அன்பு பாராட்ட வேண்டும்.
அன்பே சிவம்.
தொடர்புக்கு 94862 32436
மேஷ்பா, மாது