/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
இலக்கியங்கள் கொண்டாடிய பொங்கல்! தீர்ப்பளிக்கும் பேராசிரியர் சாலமன்பாப்பையா
/
இலக்கியங்கள் கொண்டாடிய பொங்கல்! தீர்ப்பளிக்கும் பேராசிரியர் சாலமன்பாப்பையா
இலக்கியங்கள் கொண்டாடிய பொங்கல்! தீர்ப்பளிக்கும் பேராசிரியர் சாலமன்பாப்பையா
இலக்கியங்கள் கொண்டாடிய பொங்கல்! தீர்ப்பளிக்கும் பேராசிரியர் சாலமன்பாப்பையா
PUBLISHED ON : ஜன 14, 2017

'அக்னி குஞ்சு ஒன்று கண்டேன்' என கர்ஜித்த பாரதியை குருவாக ஏற்றுக்கொண்டவர். குன்றக்குடி அடிகளிடம் மேடை இலக்கணத்தை கற்றவர். சிந்தனை சிரிப்புக்கு சொந்தக்காரர். 'அன்பு பெரியோர்களே...' என இவர் குரல் ஒலிக்காத இடமில்லை.
ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளை கண்ட, பட்டிமன்ற பிதாமகன் சாலமன் பாப்பையா.
இலக்கியங்களில் தைப்பொங்கல் எப்படி கொண்டாடப்பட்டது என நாம் கேட்க, பல நூல்களை ஆராய்ந்து, அவற்றிற்கு இடையே பட்டிமன்றம் நடத்தி, ஒரு நல்ல தீர்ப்பை இங்கே சொல்கிறார்.
இதோ உங்களிடம்பேசுகிறார்...
மழை இல்லை என்றாலும் சரி, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்தாலும் சரி. நகர் என்றாலும், கிராமம் என்றாலும் தைப்பொங்கல் அன்று மாடுகளை அலங்கரிப்பது, கொம்புகளில் வர்ணம் பூசுவது என உற்சாகமாக கொண்டாடுவர். மாடுகளை சின்னப்பிள்ளைகள் போல தெருத்தெருவாக அழைத்து ஊர்வலமாக செல்வதும் நடக்கும்.
கரும்பு, மஞ்சள், வெல்லம், இஞ்சி என வீதியில் பொங்கல் வைத்து சூரியதேவனுக்கு ஆணும், பெண்ணும் வீடு வீடாக படைப்பர். அதை பக்கத்து வீட்டாருக்கும், மாட்டுக்கும் கொடுப்பர். வீட்டை அலங்கரிப்பர்.
என்ன தான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், இந்த தமிழர் திருநாளான தைப்பொங்கல் கொண்டாட்டம் இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை இந்துக்களுக்குரியது என்றாலும், 'இது எங்கள் பண்டிகை' என்று ஜாதி, மத வேறுபாடின்றி அதை கொண்டாடுகிறார்கள். ஆனால், நம்மூரில் எல்லா மக்களுக்குமான விழா என்று எதுவுமில்லை.
சங்க இலக்கியங்களில், பொங்கல் பண்டிகை குறித்த குறிப்பு இருக்கிறதா என பார்த்தால் இல்லை. ஆனால் தை மாதம் பற்றி குறிப்பு இருக்கிறது. தமிழ் மாதங்களில் தையை மட்டும் குறிப்பிட காரணம், அறுவடை காலம் என்பதால் குறிப்பிட்டிருக்கலாம் என கருதுகிறேன். புத்தரிசி வைத்து படைப்பதால் தைத்திங்களுக்கு முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும்.
இலக்கியங்களில் தை
புறநானூற்றில் கிள்ளிவளவன், சோழ நாட்டை குறிப்பிடும்போது 'தைத்திங்கள்...' என்ற பாடல் இருக்கிறது. அதில் குளிர்ந்த குளம், பனியை பற்றி குறிப்பிடுகிறார். பொங்கல் பற்றிய குறிப்பு இல்லை. ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணையிலும் தைத்திங்கள் குறித்த குறிப்புகள் உள்ளன. ஆகவே, பெரும்பாலான சங்க இலக்கியங்களில் பொங்கல் பற்றிய குறிப்புகள் இல்லை.
சரி, பொங்கல் என்ற சொல்லாவது இருக்கிறதாய்யா என்றால், சிலப்பதிகாரத்தில் இந்திரா விழா குறித்த குறிப்புகள் உள்ளன.
சோழநாட்டில் பொங்கல்
அதில் சோழநாட்டின் நகரை காக்க காவல் பூதம் ஒன்றை இந்திரன் அமர்த்தியிருந்தான். இதன் நினைவாக சிலை அமைத்து, அதன் பீடத்தில் அவித்த அவரை, துவரை பயிறுகளையும், எள்ளு உருண்டை, சோறு போன்றவற்றை இந்திரனுக்கு பொங்கலாக வைத்து இருக்கிறார்கள். இப்படி தான் பொங்கல் வருகிறது. நாம் நினைக்கிற மாதிரியான பொங்கலாக இருக்கலாமா என்பதற்கு நான் உத்தரவாதம் தரமுடியாது. திருஞான சம்பந்தர் தைப்பூசம் பற்றி கூறியிருக்கிறார். அவ்வளவு தான்.
பொங்கலின் 'மறுபக்கம்'
சரி, நண்பர்களிடம் கேட்டால், 'என்னத்தண்ணே சொல்ல, இல்லை....ல' என கைவிரிச்சிட்டாங்க. இது எப்படிதான் வந்துச்சு என பார்த்தோமானால், 1889களில் க.நமச்சிவாயம் முதலியார் என்ற தமிழறிஞர் உழவருக்கு என ஒரு நாளை குறிப்பிடணும். அதை பொங்கல் திருநாளாக மாற்றணும் என கூறியிருக்கிறார். எதை பார்த்து சொன்னார் என தெரியவில்லை.
ஒருவேளை, வடக்கே மகாசங்கராந்தி கொண்டாடுவதை பார்த்து சொல்லி இருக்கலாம். உ.வே. சாமிநாதய்யர் இதுகுறித்து குறிப்பு சொல்லியிருக்கிறார். அதேபோல் சல்லிக்கட்டு என்பது நாயக்கர் மன்னர்கள் காலத்தில் வந்திருக்கலாம். காளைகளின் கொம்புகளில் காசு கட்டுவார்கள். அதை சல்லி என்று அக்காலத்தில் கூறுவர்.
இதனால் சல்லியை கட்டு என்பதை தான் சல்லிக்கட்டு என்று வந்திருக்கலாம் என்பது எனது யூகம். முல்லை நிலத்தில் ஏர்தழுவுதல் என்பது இருந்தது. காளைகளை அடக்கியவர்களுக்கு சல்லிகாசு கிடைக்கும்.
பாரதிதாசன் ஆதாரம்
பொங்கல் பண்டிகை எப்படி வந்தது என்பது குறித்து பாரதிதாசனின் குறிப்புகள் மூலம் கிடைத்தது. பொங்கல் தைத்திங்கள் முதல் நாள் என்றார், தமிழர் திருநாள் என்றார்... என்ற பாடல் மூலம் குறிப்பிடுகிறார். அதாவது நமச்சிவாயம் முதலியாரை பாரதிதாசன் குறிப்பிடுகிறார் எனக் கருதுகிறேன்.
பொங்கல் பண்டிகையை அறிஞர்கள் ஒரு இயக்கமாக மாற்றியிருக்க வேண்டும். இப்படி தான் பொங்கல் பண்டிகை வந்திருக்க வேண்டும், என்கிறார் சாலமன் பாப்பையா.
கே.ராம்குமார்