sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம்

/

மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம்

மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம்

மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம்


PUBLISHED ON : ஜன 14, 2013

Google News

PUBLISHED ON : ஜன 14, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகரீகம் நாலாபுறம் குடியேறினாலும், பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், பறைசாற்றுவதிலும், தென்மாவட்டத்திற்கு இணை, தென்மாவட்டமே. 'அச்சம் தவிர், நெஞ்சை நிமிர்' என, ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயங்களில் காளைகளுக்கு இணையாய் பாய்ந்து வரும், நம்மூர் காளைகளே அதற்கு சாட்சி.

ரேக்ளா பந்தயத்தில் வெற்றி வாகை சூடும் தென்மாவட்ட காளைகளில், மதுரை ஓய்.கொடிக்குளம் பழனியாண்டியின் காளைகளுக்கு முக்கிய இடமுண்டு. 'தவிடன் காளை வந்துருச்சுடோய்...' என, எதிர் தரப்பு பீதியடையும் அளவிற்கு, அவரது காளைகளின் பாய்ச்சல் வேகம், சொல்லில் அடங்காது. அதற்காக, அவை பயிற்றுவிக்கப்படும் சூழ்நிலையை கேட்டால், 'மனிதருக்கு கூட இந்தளவு சவுகரியம் கிடைக்குமா,' என, அசந்து விடுவீர்கள்.

சந்தையிலிருந்து காளை கைக்கு வந்ததுமே, அதன் குணமறிந்து பயிற்சி அளித்து, தயார் படுத்துகின்றனர். தேன் கலந்த பேரீட்சை கால் கிலோ, காளைகளின் காலை டிபன். 'டிபன்' முடித்த கையோடு, தரிசில் உழவு செய்து, இழுவைப் பயிற்சி. அதன் பின், கண்மாய் அல்லது கிணற்றில் நீச்சல் பயிற்சி. குளியல் முடிந்ததும், மதிய உணவாக அரை லிட்டர் பால், நான்கு முட்டை.

பின் ஓய்வுக்குச் செல்லும் காளைக்கு, தலா ஒன்றரை கிலோ பருத்தி விதை, சத்துமாவு கலவையை கூழ் போல் காய்ச்சி, மாலை 'ஸ்நாக்ஸ்' ஆக தருவர். காளை ஒன்றை பராமரிக்க, நாள் ஒன்றுக்கு ஆகும் செலவு என்ன தெரியுமா? ரூ.500.

கிராமங்களின் செலவு கணக்கை ஒப்பிடும் போது, ரூ.500 என்பது, விண்ணைத் தொடும் 'பட்ஜெட்'. இருப்பினும், பந்தயத்தில் வெற்றி பெற்று, உரிமையாளருக்கு பெருமை சேர்க்கும் போது, செலவுகள், வாழ்த்துக்கள் மூலம் வரவாய் மாறிவிடுகிறது.

'தடைகளை கடந்து, எதிர்ப்பை சமாளித்து, வருவாய் இழந்து, அப்படி ஏன் காளைகளை கண்காணிக்க வேண்டும்?' என்ற கேள்விக்கு, மனம் திறக்கிறார், பழனியாண்டி, ''சிறு வயதில் வீர விளையாட்டுகளில் இருந்த ஆர்வம், ரேக்ளா பக்கம் திருப்பியது. பெரியமாடு, கரைச்சான் மாடுகள் ஜோடி, தலா 2 வைத்துள்ளேன்.

காளைகளுக்கு பராமரிப்பு செலவு அதிகம் இருந்தாலும், பின்னணியில் கிடைக்கும் வெற்றி, அனைத்தையும் மறக்கடிக்கும். அப்பன் திருப்பதியில் நடந்த பந்தயத்தில், 27ம் எண்ணில் இருந்த எனது மரக்காளை, முதல் பரிசை பெற்று, எனக்கு கவுரம் தேடித்தந்தது. இருபது ஆண்டுகளில், என் காளைகள் பெற்ற பரிசுகளை வைக்க, வீட்டில் இடமில்லை. மற்றவர்களுக்கு இது மாடு; எனக்கு கவுரவம் சூட்டும் மகுடம்,'' என, பெருமையாய் கூறினார்.

'பெருமை ஒருபுறம் இருந்தாலும், பாரம்பரியம் மாறிவிடக்கூடாது,' என்பதில் கிராமத்தினர், ரெம்பவே சிரத்தை எடுப்பர். சிலர் அதை விமர்சனம் செய்யலாம்; ஆனால், ஒவ்வொரு வீர, தீர விளையாட்டின் பின்னணியில், தங்கள் வாழ்வை அதற்காக அர்ப்பணித்த தமிழர்களின் தன்னம்பிக்கை ஒளிந்திருப்பதை, பலரும் புரிந்துகொள்வதில்லை.

- மேஷ்பா






      Dinamalar
      Follow us