/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
வாடிவாசலுக்கு கோயில் எழுப்பிய தொட்டப்ப நாயக்கர்
/
வாடிவாசலுக்கு கோயில் எழுப்பிய தொட்டப்ப நாயக்கர்
PUBLISHED ON : ஜன 15, 2020

ஸ்பெயின் நாட்டின் விளையாட்டு காளையை அடக்குவது. எனினும், சிவப்பு நிற துண்டை காளை முன் காட்டி, ஏமாற்றி, போக்கு காட்டி, இறுதியில் சோர்வடைய செய்வர். இதனை வீரவிளையாட்டாக கருத முடியாது என பல்வேறு நாட்டினர் மறுத்து விட்டனர். ஆனால் தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டு உலகளவில் முதலிடம் வகிக்கிறது. மதுரையில் நடக்கும் அலங்காநல்லுார், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விளையாட்டை காண பல்வேறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் படையெடுக்கின்றனர்.
மழை பெய்து, விவசாயம் செழிக்க கோயில் விழாக்களில் தொன்று தொட்டு பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பதை முன்னோர்கள் தெய்வ வழிபாடாக கருதினர்.
தமிழகத்தில் 1,500ம் ஆண்டிலேயே ஜல்லிக்கட்டு விழாவிற்காக வாடிவாசலுக்கு கோயில் எழுப்பிய ஜமீன்தார் என்ற பெயருக்கும், புகழுக்கும் சொந்தக்காரர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொடப்பநாயக்கனுார் ஜமீன் தொட்டப்பநாயக்கர்.
இவரது காலத்திற்கு பின் ஜமீன்தார் உருவாக்கிய கிராமம் அவரது பெயரிலேயே தொட்டப்ப நாயக்கனுார் என நிலைத்து விட்டது. அனைத்து சமுதாயத்தினரும் வாழும் இக்கிராமம் மலைகளால் சூழப்பட்ட அமைதி பூஞ்சோலை. ஜமீன் வாழ்ந்த அரண்மனையில் வாரிசுகள் வசிக்கின்றனர்.
தொட்டப்ப நாயக்கர் எழுப்பிய வாடிவாசல் கோயிலில் இருந்து ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்வது வழக்கம். இதற்காக கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஜல்லிக்கட்டு விழாவை நடத்தி வருகின்றனர்.
பொங்கலை முன்னிட்டு வாடிவாசல் கோயிலுக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் தொட்டப்ப நாயக்கனுார் ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றவர் ஜமீன்தாரின் அரசியல் வாரிசு பாலமுருக மகாராஜா. அவரிடம் பேசியதிலிருந்து...
தமிழகத்தில் எருதுபிடி, மாடுபிடி, காளைப்போர், மஞ்சு விரட்டு, ஏறு தழுவுதல் என்ற பெயர்களில் தொன்று தொட்டு மாடுபிடி விளையாட்டு பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. பண்டைய காலத்தில் வீட்டில் வளர்க்கும் காளையை அடக்குபவர்களை தான் ஆண் மகனாக கருதி திருமணத்திற்கு சம்மதித்தனர் பெண்கள். இந்த மாடுபிடி விளையாட்டுக்கள் தான் பின்னாளில் 'ஜல்லிக்கட்டு' என்ற பெயரில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
மன்னர் திருமலை நாயக்கர், 72 பாளையக்காரர்களை நியமித்து பகுதி, பகுதியாக நிலம் வழங்கி ஆட்சிபுரிய வைத்தார். அந்த 72 பாளையக்காரர்களில் எனது முன்னோர் தொட்டப்ப நாயக்கரும் ஒருவர். பிரிட்டிஷ் ஆட்சியில் ஜாமீன்தாரர் என அழைக்கப்பட்டனர். காளைகள், ஜல்லிக்கட்டு மீது அளவில்லா பாசம், தெய்வ பக்தி கொண்டிருந்ததால் வாடிவாசலுக்கு கோயில் எழுப்பி பெருமை சேர்த்தார் தொட்டப்ப நாயக்கர். ஆண்டுதோறும் தை 3ல் தொட்டப்பநாயக்கனுாரில் ஜல்லிக்கட்டு நடந்து வந்தது. சில ஆண்டுகளாக நடக்கவில்லை. கிராம மக்கள் ஒருங்கிணைந்து வழக்கம் போல் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
பிளஸ் 2 வரை படித்துள்ள நான் விவசாய பணிகளை செய்கிறேன். கிராம மக்களுக்கு சேவையாற்றுவது, நீர் நிலைகளை பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளை செய்வது வழக்கம். நான் யாரிடமும் லஞ்சம் வாங்க மாட்டேன்; யாருக்கும் லஞ்சம் கொடுக்க மாட்டேன், எனக் கூறி வெற்றிலை வைத்து ஓட்டு கேட்டு ஊராட்சி தலைவரானேன். ஜல்லிக்கட்டு, கிராம முன்னேற்றம், இயலாதோருக்கு இயன்றளவு உதவி செய்வது எனது கடமை. இதன் மூலம் முன்னோர் கட்டிகாத்த பெயருக்கும், புகழுக்கும் பெருமை சேர்ப்பேன், என்றார். இவரின் சேவை தொடர 96883 78837ல் ஹலோ சொல்லலாம்.
காசு, கண்