/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
உயிர் காக்கும் உன்னத பணியில் உலகை சுற்றும் - உசிலம்பட்டி பெண்குட்டி
/
உயிர் காக்கும் உன்னத பணியில் உலகை சுற்றும் - உசிலம்பட்டி பெண்குட்டி
உயிர் காக்கும் உன்னத பணியில் உலகை சுற்றும் - உசிலம்பட்டி பெண்குட்டி
உயிர் காக்கும் உன்னத பணியில் உலகை சுற்றும் - உசிலம்பட்டி பெண்குட்டி
PUBLISHED ON : ஜன 15, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தான் பூர்வீகம் இந்த பயோடெக் இளம் விஞ்ஞானி மினு கார்த்திகாவுக்கு. பயோடெக் மருத்துவ துறையில் நோய் வரும் முன் கண்டறிந்து, பாதுகாக்கும் அரிய ஆராய்ச்சி பணியில் உலகின் 18 நாடுகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். பல்வேறு உலக நாடுகளில் தனது பணியால் தமிழர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., அலுவலர் கணேசன், மதுரை துணை வணிக வரி அலுவலர் புவனேஸ்வரி தம்பதியின் மூத்த மகள் மினு கார்த்திகா 34. இவர் லண்டன் ஆக்ஸ்போர்டு 'பயோடெக் பார்மசி' என்ற நிறுவனத்தில் 'பீல்டு அப்ளிகேஷன் சயின்ஸ்டிஸ்ட்' ஆக பணிபுரிகிறார். துபாய், கத்தார், இந்தியா, பிரான்ஸ் நாடுகளின் மருத்துவ துறையினருக்கு மருந்து தேவையை அறிந்து அவற்றை தயாரித்து வழங்கியும், 'நோய் வரும்முன் காப்போம்' என்ற அடிப்படையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். மினுவுடன் மினி பேட்டி...
உங்களை பற்றி...
விஞ்ஞானி ஆகும் ஆசையில் 'எம்.எஸ்.சி., பயோ மெடிக்கல் சயின்ஸ்,' 5 ஆண்டுகள் திருச்சி பாரதிதாசன் பல்கலையில் படித்து ராங்க் பெற்றேன். மதுரை காமராஜ் பல்கலையில் 6 மாதம் ஆராய்ச்சி படிப்பு. நான்காண்டுகளாக ஆக்ஸ்போர்டில் பணிபுரிகிறேன்.
ஒருவர் என்ன நோயால் பாதிக்கப் படுகிறார். அவருக்குபின்னாளில் ஏற்படும் விளைவுகளை முன்கூட்டியே ரத்த பரிசோதனை முறையில் கண்டறிந்து எந்த மாதிரியான நோய் தடுப்பு மருத்துவம் தேவைப்படுகிறது என ஆலோசனை வழங்குகிறோம். அதற்குரிய புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி பணியை செய்கிறேன்.
நடிகர்களை அதிகம் தெரியும். ஆனால் படத்தை உருவாக்கிய இயக்குனரை தெரியாது. அது போலத் தான் நோயாளிகளுக்கு டாக்டர்களை தான் தெரியும். அவர்கள் பயன்படுத்தும் மருந்துகளை கண்டு பிடித்து தயாரிக்கும் சயின்டிஸ்ட்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு வெளியே தெரிவது இல்லை.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்தேன். அவரைபோல நானும் முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றேன். 18 நாடுகளை சுற்றி பார்த்துள்ளேன்.
அங்குள்ளவர்களுடன் பழகும் போது தான் நமது பண்டிகைகள், கலாசாரத்தை அவர்கள் எந்த அளவிற்கு விரும்புகின்றனர் என தெரிந்து கொண்டேன். எனது வெளிநாட்டு தோழிகளில் சிலர் தீபாவளி பண்டிகை குறித்த விபரம் கேட்டறிந்து அவரவர் வீட்டில் தீபம் ஏற்றினர். ஆன்லைனில் பல வெளி நாட்டு தோழிகள் சேலை கட்டுவது எப்படி என கேட்டறிந்து கொள்கின்றனர். பொட்டு வைக்க விரும்புகின்றனர். ஹங்கேரி நாட்டை சேர்ந்த ஆந்தாஸை காதல் திருமணம் செய்தேன். அவரும் இந்தியர்களின் வழிபாட்டு முறைகள், கலாசாரத்தை மிகவும் விரும்புகிறார். சில மாதங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி கோயில், ராமேஸ்வரம் கோயிலுக்கு கணவருடன் சென்றிருந்தேன்.
எதிர்காலத்தில் தமிழகத்தில் பயோ டெக் நிறுவனம் துவங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது லட்சியம். இந்தியன், தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறேன். 20 ஆண்டு உழைப்பால் இந்த இலக்கை எட்டி உள்ளேன்.
மேற்படிப்பிற்கு வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களே, 'நீங்கள் சாதிக்க நினைக்கும் துறை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, விடா முயற்சி செய்தால் குறைந்த செலவில் பயில பல்வேறு வழிகள் உள்ளன. சந்தேகங்களை எனது இமெயிலுக்கு (minubio@gmail.com) அனுப்பினால் ஆலோசனை தர தயார்' என்றார்.