
பொங்கல் மணக்கப் புதுமஞ்சள் மணம்சிறக்க
எங்கள் தமிழரினம் எங்கும் உயர்ந்துநிற்க
கங்கையுடன் வைகை காவிரியை இணைத்துவைக்க
சங்கம் முழங்கத் தைமகளே நீவருக!
செந்நெல் விளைய செங்கதலி இஞ்சியுடன்
கன்னல் விளையக் கடலைக்கொடி விளைய
தென்னை விளையத் திராட்சைக்கனி விளைய
அன்னைத் தைமகளே அமுதே நீ வருக!
வாவியெல்லாம் செங்கமலம் வாய்திறந்து சிரித்திருக்க
பூவிரியும் இடமெல்லாம் பொன்வண்டு கவிஇசைக்க
நாவினிக்கப் பாவாணர் நற்றமிழில் வாழ்த்துரைக்கத்
தாவிவரும் திருவே தைமகளே நீவருக!
முன்பனிக் காலத்தை முடித்துவைக்கும் திருமகளே
பின்பனிக் காலத்தை பிறக்கவைக்கும் பெருமகளே
உன்னால் கழனியுடன் உழவர்களின் சிறப்பையெல்லாம்
தன்னால் அறியவைத்தாய் தைமகளே நீவருக!
எண்ணியவை எல்லாம் ஈடேற நாம்செய்த
புண்ணியங்க ளெல்லாம் பொழுதும் துணைக்குவர
கண்ணியம் தவறாமல் கடமைகள் ஆற்றிவர
தண்மை மிகுந்தவளே தைமகளே நீவருக!
எதிர்கால வாழ்க்கை இனிமை நிறைந்திருக்க
உதிர்காலம் கூட உள்ளத்தில் அமைதி தர
புதிரான உலகத்தில் புதுமைகள் பூத்துவர
சதிராடும் தைமகளே தமிழ்மகளே நீவருக!
- கவிஞர் முத்துலிங்கம்.

