தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கி.பி.3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பூரணி - பகுதி (6)

கி.பி.3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பூரணி - பகுதி (6)

கி.பி.3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பூரணி - பகுதி (6)


PUBLISHED ON : செப் 17, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: அமெரிக்க விஞ்ஞானிகள், இந்திய தலைமை விஞ்ஞானியுடன் பேசுவதை போதை சாம்ராஜ்ஜியம் தங்களது தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தெள்ளத் தெளிவாக கேட்டது.    

இனி-

இயந்திர மனிதனின் அபாய எச்சரிக்கை மணி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே சமயம் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருளடைந்திருந்த மின் திரையில் உலகப்படம் மெல்ல மெல்ல தெரிந்தது. அமெரிக்க அறிவியல் கழகத்தின் தலைமை விஞ்ஞானி இந்திய தலைமை விஞ்ஞானியுடன் பேசுவது ஒலிவடிவில் பதிவாகி உரக்க வந்து கொண்டிருந்தன.

அம்ருடன் இருக்கையின் நுனிக்கே சென்றுவிட்டார். தலைவனோ தலையை தடவிக் கொண்டே தன் கோபக்கணலை வெளியிட்டபடி மின் திரையை நோக்கியபடி இருந்தான்.

''ஹலோ மிஸ்டர் பிரகடீஸ்வர்... நான் அமெரிக்க விஞ்ஞானிகளின் தலைவன் பேசுகிறேன். செய்தி மிக அவசரம். அத்தோடு மிக மிக ரகசியம்!'' என்று ஆரம்பித்தார்.

''அமெரிக்க தலைமை விஞ்ஞானிக்கு என் வணக்கங்கள்.''

''என்ன செய்தி? எதுவாக இருந்தாலும் அது மிக ரகசியமாகவே இருக்கும். இந்திய தலைமை விஞ்ஞானி பற்றி தங்களுக்கு அந்த கவலையே வேண்டாம்...'' என்றார் பிரகடீஸ்வர்.

''நோ நோ. இது தங்களின் நம்பகத்தன்மை பற்றிய விஷயம் அல்ல. மாறாக உலக மக்களின் நலன் கருதி, அமெரிக்கா செய்ய இருக்கும் ஒரு முக்கிய செயலுக்கு அறிவியல் பேரரசு இந்தியா துணை நிற்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்!'' என்றார் அமெரிக்க தலைமை விஞ்ஞானி.

''எங்கள் நாட்டின் செயல்பாட்டின் மேல் தாங்கள் வைத்திருக்கும் பெரும் நம்பிக்கைக்கு என் இதயபூர்வ நன்றிகள். விவரத்தை உடனே கூறுங்கள். நாங்கள் எங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கிறோம்.''

''மிஸ்டர் பிரகடீஸ்வர்... அமெரிக்கா மீண்டும் ஒரு முறை ஒரு பெரும் ஏவுகணையை ரகசியமாக ஏவ இருக்கிறது. இது நிச்சயம் அந்த செயற்கை தீவை அழித்து நாசம் செய்யும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. பலமுறை நாம் ஏமாந்து விட்டதால் நம் திறமையின் மேல் உலக மக்களுக்கு சந்தேகம் வலுத்துவிட்டது. அத்துடன் அந்த செயற்கை தீவின் அதிநவீன தொழில்நுட்பம் அடங்கிய அறிவியல் ஆற்றலால் அவர்கள் மீது மக்களுக்கு இப்போது ஒரு மோகமே வந்துவிட்டது. இது மிகவும் துக்கமான ஒரு விஷயமாக கருத வேண்டியுள்ளது.

''அதனால் தான் அமெரிக்க அதிபரின் நேரடி உத்தரவின் கீழ் ஏவுகணை தயாரிக்கப்பட்டு நாம் அந்த செயற்கை தீவின் மீது ஏவ இருக்கிறோம். இம்முறை நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். இது இந்தியா தவிர, பிற நாடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்றும் அதிபர் கூறிவிட்டார். எனவே, இன்று நாங்கள் ஏவும் அதிநவீன ராட்சஸ ஏவுகணை சீறிப் பாய்ந்து அந்த தீவை அழித்துவிடும். அந்த நல்ல செய்தியே நாளைய தலைப்புச் செய்தியாக உலகில் எங்கும் பேசப்படும்.

''அதற்கு இந்தியா தன் பங்களிப்பாக ஒரு முக்கிய காரியம் செய்ய வேண்டும். உங்களிடம் உள்ள சக்தி வாய்ந்த ரேடார் உதவி கொண்டு அந்த ராக்கெட் வழி பாதையை கண்காணித்து தங்கள் விண் கோபுரங்கள் அனுப்பும் படங்களையும் செய்திகளையும் உடனுக்குடன் அனுப்ப வேண்டும். அறிவியலில் அதிக முன்னேற்றம் அடைந்த நாடான இந்தியா தவிர வேறு யாரும் இந்த பணியை செய்ய முடியாது என்று நாங்கள் கருதுகிறோம்.

''காரணம், இது எந்த நாட்டு ரேடாருக்கும் தெரியாத வகையில் வடிவமைத்திருக்கிறோம். ஆனால், அது நிச்சயம் உங்கள் கண்களில் இருந்து தப்பாது என்று எங்களுக்கு தெரியும். அதனால் தான் இந்த உதவியை நாங்கள் கோருகிறோம்,'' என்றார் அமெரிக்க தலைமை விஞ்ஞானி.

''ஒரு விதத்தில் பெருமையா இருந்தாலும், மறுபுறம் பிரகடீஸ்வர் மிகவும் கவலை அடைந்தார். சார்... ஒரு முக்கிய விஷயத்தை இப்போது நாம் பார்க்க வேண்டி உள்ளது. செயற்கை தீவை அழிப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இருக்க முடியாதுதான். ஆனால், அதில் தானே இப்போது உலகின் மிகச்சிறந்த எங்கள் நாட்டு முதிய விஞ்ஞானி பவிஷ்கோஷ் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். அப்படி செயற்கை தீவை அழிக்கும் பட்சத்தில் அவரும் அழிந்து விடுவார் இல்லையா? அதுதான் எனக்கு மிக கவலை அளிக்கிறது,'' என்றார் பிரகடீஸ்வர்.

''அதுவும் நாங்கள் எதிர்பார்த்ததுதான். ஆனால், வேறு வழியே இல்லியே. ஒரு பவிஷ்கோஷின் உயிருக்காக நாம் இன்று உலகின் கோடிக்கணக்கான மக்கள் கொடிய போதைப் பொருளுக்கு அடிமைகளாகி தினம் தினம் செத்து மடிகின்றனரே. அதை நாம் பார்க்க வேண்டாமா?'' சமாதானம் கூறினார் அமெரிக்க விஞ்ஞானி.

''அதனால் தயக்கமின்றி எங்களின் இந்த முயற்சிக்கு தங்களின் மனப்பூர்வமான ஒத்துழைப்பை அமெரிக்கா நாடுகிறது!'' என்றார் அமெரிக்க விஞ்ஞானி.

''ஓ ஷ்யூர். இது எங்கள் கடமையும் கூட. தாங்கள் எங்களுக்கிட்ட பணியை திறம்பட செய்து உடனுக்குடன் தங்களுக்கு செய்தியையும், புகைப்படங்களையும் அனுப்புவோம்,'' என்று பிரகடீஸ்வரரும் உறுதி அளித்தார். நன்றி தெரிவித்துக் கொண்டு அமெரிக்க தலைமை விஞ்ஞானி தன் பேச்சை முடித்துக் கொண்டார்.

இது மிக ரகசியம் ஆன காரணத்தால் பிரகடீஸ்வர் யாரையும் கலந்து பேசவோ, ஆலோசிக்கவோ இல்லை. துணை விஞ்ஞானி சகாணியே துரோகியாக மாறியதால் அவருக்கு ஒரு கசப்பான எண்ணம் உண்டாகி விட்டது. அதனால் அமெரிக்கா ஏவுகணை செயல்பாடுகளை கண்காணித்து, இந்திய விண் கோபுரங்களுக்கு அவ்வப்போது கட்டளை கொடுக்கும் பொறுப்பை தானே மேற்கொண்டார். இப்போது மின் திரை நிகழ்வுகள் நின்று போயின.

தலைவன் சாங்கிளிபட் அட்டகாசமாக சிரித்தான்.

''என்ன அம்ருடன் அவர்களே... இம்முறை மிக மிக ரகசியமாக நம் தீவை அழிக்க அமெரிக்கா ராக்கெட்டை ஏவப் போகிறதாமே. அந்த தலைமை விஞ்ஞானியே அதை கூறிவிட்டான். அதன் செயல்பாடுகளுக்கு பொறுப்பு இந்தியாவாமே. மடையர்கள். அமெரிக்கா ராக்கெட் வேணுமானால் தயாரித்து மிக மிக ரகசியமாக வைத்து ஏவலாம். ஆனால், அவர்களின் பேச்சுக்களை இப்போது நாம் கேட்டது அவர்களை விட நாம் எந்த அளவுக்கு அறிவியலில் முன்னேறியிருக்கிறோம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

''அத்தகைய பெருமைகளை செயற்கை தீவுக்கு அளித்த விஞ்ஞானி அம்ருடனுக்கும் இதர நாட்டு விஞ்ஞானிகளுக்கும் என் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன். சரி... இந்த ஏவுகணை தாக்குதலை எப்படி அம்ருடன் சமாளிக்கப் போகிறார்,'' என்று ஒரு புன்னகை ததும்பும் முகத்தோடு விஞ்ஞானி அம்ருடனை நோக்கினான் சாங்கிளிபட்.

''பாஸ். ரொம்ப சுலபம். இதோ என் கட்டளைகளை சூப்பர் கம்ப்யூட்டர் வாயிலாக பதிவு செய்கிறேன். அதை தாங்களே நம் மின் திரையில் பார்த்து மகிழலாம்,'' என்ற அம்ருடன் உடனே செயற்கை தீவின் வான் மண்டல பாதுகாப்பு வீரன் நீலமேகனை அழைத்தார். நீல நிற நட்சத்திரம் தோன்றியது.

நம் வான் மண்டல பாதுகாப்பு தலைவன் நீலமேகனுக்கு அம்ருடனின் கட்டளைகள் என்று கட்டளைகளை பதிவு செய்தான் அம்ருடன்.

''உடனே நம் செயற்கை தீவை சுற்றி வானில் நாம் உலவ விட்டிருக்கும் ஆயிரமாயிரம் கண்ணுக்கு புலப்படாத சக்தி வாய்ந்த மிதக்கும் வெடி குண்டுகளை ஆயிரம் கிலோ மீட்டர் உயரே சென்று பறக்க ஏற்பாடு செய்ய கட்டளை. நம் வான் மண்டலத்தில் நுழையும் எந்த ஒரு பொருளையும் அவைகள் தாக்கி அழித்து கடலில் எறிய கட்டளை!'' என்று பதிவு செய்தான்.

'சொல்லியதை சொல்லியபடி துல்லியமாக செய்வான் இந்த நீலமேகன்' என்று உறுதி கூறி மின் திரையில் இருந்து மறைந்தது அந்த நட்சத்திரம்.

அம்ருடன் தன் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நீலமேகனின் செயல்பாடுகளை கவனித்து அதை மின் திரையில் தெரியுமாறு அதற்கான கணினியை இயக்கிக் கொண்டிருந்தான். அனைவரும் மின் திரையை பார்த்தபடி இருக்க நீலமேகன் என்ற நீல நட்சத்திரம் உடனே வான் மண்டலத்தில் செயற்கை தீவின் பாதுகாப்பு கருதி உலவ விடப்பட்டிருந்த ஆயிரமாயிரம் மிதக்கும் வான் குண்டுகளை அப்படியே ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்திற்கு இட்டுச் சென்றது.

''ஏன் அம்ருடன் இப்போது நம் ஆசியாவின் உளவாளி நட்சத்திரம் மகாபலிக்கு ஒன்றும் ஆபத்து இல்லியே!'' என்று தலைவன் கேட்க உரக்க சிரித்தான் அம்ருடன்.

''தலைவா இப்போது தன்னை மட்டுமே நம்பிக் கொண்டு அத்தனை காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறான் பிரகடீஸ்வர். அவனுக்கு இன்னும் அந்த தொலைநோக்கியை கூட பொருத்த அவகாசம் இல்லை. ஒன்று மட்டும் உறுதி. நாளைய தலைப்புச் செய்தி அமெரிக்க தலைமை விஞ்ஞானி எதிர்பார்த்தது போல இருக்காது. காரணம், அம்ருடன் இப்போது தலைவிதியையே மாற்றி விட்டான். ஆம். நாளைய செய்தியின் தலைப்பு நம்மைப் பற்றியதாகத்தான் இருக்கும்,'' அம்ருடன் மீண்டும் உற்சாகமாக சிரிக்க அவனுடன் சேர்ந்து கை கொட்டி சிரித்த தலைவன் பலே அம்ருடன் என்று அவன் முதுகை தட்டினார்.

அப்போது வான் மண்டலத் தலைவனை இயக்கும் விசேஷ கணினியில் இருந்து சமிஞ்சை வரவே அனைவரும் மின் திரையை பார்த்தபடி இருந்தனர். இப்போது ஆயிரம் கிலோ மீட்டர் உயரே அமெரிக்க ராக்கெட் பறப்பதும் அதன் செயல்பாடுகளை இந்திய விண் கோபுரம் துல்லியமாக படம் எடுப்பதும் தெரிந்தது. அனைவரும் மிகவும் உணர்ச்சிவசத்துடன் காணப்பட நீலமேகன் சரியாக கட்டளை கொடுத்து இயக்க வானில் மிதந்து கொண்டிருந்த ஆயிரமாயிரம் மிதக்கும் வான் குண்டுகள் விசேஷ அழிக்கும் ஒளியினால் அமெரிக்காவின் ராட்சஸ ஏவுகணையை வெடித்து சிதறச் செய்தன.

அந்த ஒலி பசிபிக் சமுத்திரத்தில் அலைகளை வான் உயரே எழும்பச் செய்தன. வான் மண்டலமே தீப்பிழம்பாக காட்சி அளித்தது. தலைவன் சாங்கிளிபட், ''வெற்றி வெற்றி!'' என்று மிக உற்சாகத்துடன் அம்ருடனை கட்டித் தழுவினார். அதே சமயம் அமெரிக்கா பெரும் அதிர்ச்சி அடைந்தது. இந்தியாவுக்கு குறிப்பாக தலைமை விஞ்ஞானி பிரகடீஸ்வருக்கு மட்டுமே ரகசியமாக சொல்லப்பட்ட விஷயம் எப்படி கசிந்தது என்று அவர்கள் இந்திய விஞ்ஞானி மேல் பெரும் கோபம் கொண்டனர்.

முதலில் ஏவிய வேவுகணை வெடித்து சிதறியதும் இந்திய சமுத்திரத்தில்தான். அடுத்து உலக விஞ்ஞானிகளின் சிற்பி பவிஷ்கோஷ் கடத்தப்பட்டதும் பிரகடீஸ்வரின் அக்கறையற்ற தன்மையினால்தான். அதே போல் இப்போது மிக ரகசியமாக ஏவிய ஏவுகணை தோல்வி அடைந்தது பிரகடீஸ்வரின் மேல் உள்ள நம்பகத் தன்மையில் பலத்த சந்தேகம் ஏற்பட வழி செய்து விட்டது. இனியும் அவரை இந்திய தலைமை விஞ்ஞானியாக ஏற்றிருந்தால் ஒரு காலத்திலும் நாம் செயற்கை தீவை அழிக்க முடியாது என்று அமெரிக்க அதிபரும் அமெரிக்க தலைமை விஞ்ஞானியும் முடிவு செய்தனர்.

அமெரிக்க அதிபர் இந்திய பிரதமரிடம் தொலைபேசியில் பேசினார். காரணங்களை விவரமாக அடுக்கினார். அதில் உண்மை இருக்குமோ என்ற ஐயம் இந்திய அரசுக்கும் ஏற்பட்டதால் உடனே இந்திய அரசு பிரகடீஸ்வரை தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கியதோடு மட்டும் அல்லாமல் அவரை வீட்டுக்காவலிலும் வைத்து அவரை விசாரிப்பதற்கென்று ஒரு தனி உளவுப் பிரிவையும் அமைத்தது. செயற்கை தீவினரின் உற்சாகம் கரைபுரண்டு ஓட, சோகமே உருவாக பிரகடீஸ்வர் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்.

(— 6 தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us