தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கி.பி.3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பூரணி

கி.பி.3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பூரணி

கி.பி.3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பூரணி


PUBLISHED ON : ஜன 14, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 14, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: செயற்கை தீவில் இருந்த அந்த புதிய பல்லியை தொட்டவுடன் அதன் வால் பகுதியில் இருந்து ஒரு திரவம் பீச்சப்பட்டது. உடனே காவல் அதிகாரியின் கண்கள் தெரியாமல் போனது.

இனி-


காவல் அதிகாரியின் கண்கள் தெரியாமல் போனதும் அம்ருடன் பெரும் அதிர்ச்சி அடைந்தான்.

''இந்த பல்லி சாதாரண பல்லியாக இருக்க முடியாது,'' என்று தலைவனிடம் கூறவும் உடனே பல்லி 'டொக் டொக் டொக்' சத்தமிட்டது.

''தலைவா! சந்தேகமே இல்லை. இது மிக நுண்ணிய மின் பல்லிதான். இது சப்தம் செய்யும் ஒலி நமக்கு ஒரு சமிஞ்சையும் அந்த துப்பறியும் நாய் தாசுக்கு இங்குள்ள தகவலையும் தெரிவிக்கிறது,'' என்று அம்ருடன் கூறவும், தலைவன் பெரும் கோபம் அடைந்தான்.

''அப்படி என்றால் நாம் இப்போது பேசியது எல்லாம் அவனுக்கு தெரிந்திருக்குமா? அவமானம்!'' என்று பற்களை கடித்தான்.

''மிஸ்டர் அம்ருடன், உடனே இந்த பல்லிக்கு ஒரு ஏற்பாடு செய்யுங்கள்,'' என்று உரக்க சத்தமிட்டான்.

''தலைவா! இந்த பல்லியின் குரல் ஒலியில் பதிந்திருப்பது என்ன என்பதை நான் என் சிறு கணினியில் இணைத்து கண்டுபிடிக்கிறேன். அப்படி செய்தால் நாம் அவன் கையை வைத்தே அவன் கண்களை குருடாக்கிவிடலாம். நாமும் யார்? நம் பலம் என்ன என்று அந்த தாசும் அறிந்து கொள்வான்,'' என்று அம்ருடன் கூறிய உடனே அந்த பல்லியை ஒரு மெல்லிய ஒயர் கொண்டு தன் கணினியுடன் இணைத்தான். இப்போது மீண்டும் பல்லி 'டொக் டொக்' சத்தமிட அதன் மொழிபெயர்ப்பு அம்ருடனின் கம்ப்யூட்டரில் பதிவாகியது.

''அது என்ன சமிஞ்சை கொடுத்தது என்று தெரிந்ததா?'' என்று தலைவன் கேட்டதும், மிக மகிழ்ச்சி அடைந்த அம்ருடன், ''ஆம்!'' என்பதாக தலையசைத்தான்.

''பாஸ்! இது உலகின் மிக முக்கிய மொழி தமிழ் செம்மொழியில் இருக்கிறது. 'பட்ட பகலிலே விளக்க கொளுத்திக்கோ, பட்டை நாமத்தை பரக்க சாத்திக்கோ!' தலைவா இது செம்மொழி தமிழேதான். உடனே நாம் இந்த சங்கேத வரிகளுக்காக அர்த்தம் காண வேண்டும். அதற்கு ஒரே வழி இந்திய அறிவியல் கூடத்தில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கான நூலகம் தான். அதில் தான் இதற்கு விடை கிடைக்கும்!''

''சரி அதற்கு இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?''

''நம்மிடம் விவரம் புரிந்த சகாணி இருக்கிறானே. அவனை அனுப்பி விளக்கம் கேட்போம்,'' என்றான் அம்ருடன்.

''நல்லது. உடனே ஏற்பாடு செய்யுங்கள்,'' என்று தலைவன் கூறவும், சகாணி வரவழைக்கப்பட்டான்.

அவனிடம் அம்ருடன் விவரத்தை கூறினான். அவன் சற்று தயங்கினான். காரணம், அந்த நூலகத்துக்கு செல்ல வேண்டுமானால் பிரத்யேகமான உடைகள் இருக்கின்றன என்றான். மேலும், தன் மீது பவிஷ்கோஷ் கடத்தப்பட்டதற்கான பழி பிரகடீஸ்வரால் சுமத்தப்பட்டுள்ளதால் அது தனக்கு ஆபத்தாகிவிடும் என்றும் அஞ்சினான் சகாணி.

''அப்படி என்றால் நம் தீவுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்கு நீ சம்மதிக்கப் போகிறாயா?'' என்று அம்ருடன் மிரட்டவும், தலைவன் துப்பாக்கியை காட்டி மிரட்டவும் உடனே தான் எப்படியாவது அந்த நூலகத்துக்கு சென்று தாசின் சங்கேத மொழிக்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டு வருகிறேன். எனக்கு உலோக இழை கொண்ட ஆடைகள் தேவை என்றான் சகாணி.

தற்போது அவன் ஆடைகள் டில்லியில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கான பாதுகாவல் அதிகரித்த பகுதியில் உள்ள தன் வீட்டில் இருப்பதால் அதை தன்னால் அங்கு சென்று எடுக்க முடியாது என்றும் கூறினான். அம்ருடன் அவனை தட்டிக் கொடுத்தான்.

''சகாணி கவலை வேண்டாம். நானும் ஒரு விஞ்ஞானிதான். இந்த உலோக ஆடைகளை அணிவதை உருவாக்கியவனே நான்தான். அது எனக்கு தெரியும். என் ஆடைகளை அணிந்து செல். அது உடலுக்கு பொருந்தாவிட்டால் அதை மாற்றி உன் உடல் பரிமாணத்துக்கு ஏற்ப உடனே தைக்க ஏற்பாடு செய்கிறேன். உடனே நீ டில்லி செல்ல தயாராகு,'' என்று கட்டளை கொடுத்தான் அம்ருடன்.

அதேசமயம் பவிஷ்கோஷ் தன் வரைபடம் செயற்கை தீவினர் கையில் அகப்பட்டுவிட்டதால் புதியதாக அதே வரைபடத்தை வரைந்து தாசிடம் கொடுத்தார். உடனே செயற்கை தீவை அழிக்கும் ஏவுகணை தயாரிக்கும் பணி தொடங்கியது. அந்த வரைபடத்தை கொண்டு தாசும், ஆசானும் ஆலோசனைகள் செய்து பவிஷ்கோஷ் சம்மதத்துடன் உருவாக்கினர். தாசின் ஏவல் ரோபோக்களும் கொடுத்த வேலைகளை துல்லியமாக செய்து முடிக்க பவிஷ்கோஷ் ஏவுகணை தயாரானது. அந்த ஏவுகணைக்கு, 'பவிஷ்கோஷ் இந்தியா!'' என்று பெயரிட்டார் ஆசான்.

அதற்குள் நம் சிறுவர்கள் பிரசன்னா, கைலாஷ் மற்றும் ரோஷன் மூவரும் ஆலோசனை நடத்தினர். பவிஷ்கோஷ் மற்றும் சிறுவன் கைலாஷ் மீட்கப்பட்ட விவரம் இந்திய வல்லரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், பின் அது வேறு வழியில் இந்திய அரசுக்கு தெரிந்தால் தாஸ் பற்றி அவர்கள் தவறான அபிப்பிராயம் கொள்ள ஏதுவாகும் என்றும், மேலும் பவிஷ்கோஷின் உயிருக்கு எந்த ஆபத்து வந்தாலும் அதன் பொறுப்பு தாசின் மேல் சுமத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், முடிவு செய்து ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தனர்.

தாசும், ஆசானும், விஞ்ஞானி பவிஷ்கோஷும் புது ஏவுகணை செயல்பாட்டில் மும்முரமாக இருந்ததால் அவர்களை இவர்கள் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க அவகாசம் இருக்கவில்லை. அதனால் தாங்களே ஒரு முடிவுக்கு வந்து பின் ரோஷன் தன் காரில் அவர்களுடன் பயணித்து இந்திய தூதரகம் வந்தான். இளம் சிறுவர்களை கண்டதும் தூதரக அதிகாரி மிகவும் ஆச்சரியம் அடைந்தார்.

ரோஷன் முழு விவரத்தையும் கூறினான். மீட்கப்பட்ட சிறுவன் கைலாசை அறிமுகப்படுத்தி, இந்திய மூத்த விஞ்ஞானி பவிஷ்கோஷ் தன் தந்தை தாசின் உளவுக் கூடத்தில் இருப்பதாகவும், அவர்கள் ஒரு நவீன ஏவுகணை தயாரிப்பில் இருப்பதாகவும் கூறி உடனே இந்திய அரசுக்கு விவரம் தெரிவித்து ஆசான் மற்றும் பவிஷ்கோஷ், சிறுவன் கைலாசின் பாதுகாப்பை இந்திய அரசு ஏற்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தான்.

இது கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் உறைந்து போனார் தூதரக அதிகாரி. பல நாடுகள் செய்யாத ஒரு சாதனையை வீர சிறுவன் ரோஷன் செய்திருப்பதையும் அவனைப் போல் மாபெரும் செயல் புரிந்த சிறுவன் கைலாசையும் கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்தார். ரோஷனுடன் கூட சென்று அவனுக்கு 'மாரல் சப்போர்ட்' செய்த பிரசன்னாவையும் பாராட்டினார். அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

செய்தி மிக மிக ரகசியம் என்று ரோஷன் கூறியதும், சிரித்துக் கொண்டே தலை அசைத்த தூதரக அதிகாரி, ''கவலைப்படாதே... நீ தெரிவித்த விவரம் யாவும் இந்திய வல்லரசின் விஞ்ஞானிகள் பிரத்யேகமாக இந்தியாவுக்கே என்றே உருவாக்கிய மிக ரகசிய எழுத்தின் வாயிலாக அனுப்பப்படும். அதன் பிறகு இந்திய அரசு என்ன பதில் சொல்கிறது என்பதையும் நான் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்,'' என்றார் அதிகாரி. பின் தாங்கள் வந்த வேலை முடித்து சிறுவர்கள் உளவுக்கூடம் புறப்பட்டு சென்றனர்.

சகாணிக்கு உடைகள் தயாராகின. மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். பின் தலைவனிடமும், அம்ருடனிடமும் விடை பெற்று டில்லி வந்தடைந்தான். அது நடு நிசி. 24 மணி நேரமும் விஞ்ஞானிகளின் நூலகம் செயல்படுமாதலால் சகாணி நடு இரவில் செல்லவே முடிவெடுத்து சென்றான்.

அவன் சென்றதும் வாயில் காவல் ராட்சத ரோபோக்கள் அவனை, ''அறிவியல் ஐயா வருக வருக! தங்கள் பணி சிறக்க நல் வாழ்த்துக்கள்!'' என்று கூறி, பெரும் கும்பிடு போட்டன. சகாணி பெருமை அடைந்தான்.

''ஐயா அடியேனுக்கு தேவை சில விளக்கங்கள். அளிக்க இயலுமா?'' என்றது ஒரு ரோபோ.

''அதை நான் குறித்துக் கொள்வேனாக்கும்'' என்றது மறு ரோபோ. சகாணியும் சம்மதமே என்றான்.

''ஐயாவுக்கு இந்த நூலகத்துக்கு நுழையும் முன் உள்ள சட்ட திட்டங்கள் தெரியுமா?'' என்றது ரோபோ.

''இந்த சில்லி கேள்விகள் எல்லாம் என்னிடம் கேட்க வேண்டாம்,'' என்று கோபத்துடன் கூறினான்.

''ஐயா மன்னிக்கவும். இது எங்கள் கடமை. அதை செய்கிறோம். நீங்கள் இப்போது அந்த ஸ்கேனர் வழியாக செல்ல வேண்டும் என்று, ஒரு ரோபோ ஆலோசனை கூற சகாணி ஸ்கேனரில் நுழைந்தான். இப்போது அவன் உடல் நடுங்க ஆரம்பித்தன. கண்கள் இருண்டன. காரணம், காவல் இயந்திர மனிதர்களின் கண்களில் அபாயம் என்று அறிவிக்கும் சிவப்பு விளக்குகள் எரிந்தன. இப்போது ஒரு உண்மையை அவன் புரிந்து கொண்டான்.

பிரகடீஸ்வர் தலைமை பொறுப்பு ஏற்றதும் ஒவ்வொரு விஞ்ஞானிகளின் உலோக இழைகளால் பின்னப்பட்ட ஆடைகளிலும் ஒரு ரகசிய எண்ணை குறித்திருந்தார். சகாணி அணிந்திருந்த ஆடையில் அந்த ரகசிய எண் இல்லை. என்ன இருந்தாலும் பிரகடீஸ்வர் திறமைசாலிதான் என்று நினைத்தவன் அந்த ரகசிய எண் தனக்கு தெரியாததால் ஏமாந்து விட்டோமே என்று அஞ்சினான். அப்போது இரண்டு காவல் ரோபோக்களும் வந்தன.

''ஐயா, தாங்கள் தவறானவர். உள்ளே நுழைய முற்பட்டது தவறு. வருந்தாதீர்கள். நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம்,'' என்று கூறி, சகாணியை தூக்கி ஒரு சுழற்று சுழட்டி வானில் வெகு உயரம் தூக்கி எறிந்ததும் அவன், ''அய்யோ...'' என்று ரத்த வெள்ளத்தில் கீழ விழுந்தான்.

உடனே அடுத்த ரோபோ அவனிடம் ஓடியது. அவன் உயிர் இன்னமும் ஊசலாட அவனிடம் அவன் யார் என்றும், அவன் வந்த நோக்கம் என்ன என்றும் விசாரிக்க, ''நான் தான் இந்திய அறிவியல் கழகத்தின் துணை விஞ்ஞானியாக இருந்து கொண்டு செயற்கை தீவிற்கு உளவாளியாக செயல்பட்ட விஞ்ஞானி சகாணி,'' என்று கூறிக்கொண்டே உயிரை விட்டான்.

( — தொடரும் )

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us