PUBLISHED ON : ஜூன் 12, 2021

முன்கதை: மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி ஸ்ருதி, மருத்துவர் அருணாவிடம் சிகிச்சை பெற்ற போது, கல்லுாரியில் நடந்த சம்பவங்களை பகிர்ந்தார். உடனிருந்த அவள் அம்மா சுகந்தியும் குறுக்கே பேசினார். இனி -
''உங்க அக்கறை புரியுது...''
''பள்ளியில எந்த போட்டினாலும் தவறாம கலந்துக்குவா...''
''எதை சொல்றீங்க...'' என்றார் மருத்துவர் அருணா.
கொஞ்சம் யோசித்து, ''பள்ளிகளுக்கு இடையில் நடக்க கூடிய அனைத்து போட்டிகளிலும், பங்கு பெற வெச்சிருக்கிறேன்...'' என்றாள் சுகந்தி.
''அவளுக்கும் ஆர்வம் இருந்ததா...''
''ஆர்வம் இருந்ததால் தான உற்சாகமா கலந்துகிட்டா... நுாற்றுக்கணக்கில் சான்றிதழ் வெச்சிருக்கிறா... எந்த போட்டினாலும் அவ பேரை சேத்துடுவேன்...''
''இது, திறமையுள்ள இன்னொரு மாணவியோட வாய்ப்பை தட்டி பறிக்கிறதாகாதா...''
''இல்லை... ஒரு போட்டியாளர் பெயரை நீக்கிட்டு, பதிலா இவ பேர சேர்க்கிறதில்ல... ஒரு போட்டிக்கு, மூணு பேர், எங்க பள்ளியில இருந்து போறாங்கனா, நாலாவதா இவளும் போவாள்; அவ்வளவு தான்...''
''எத்தனை பரிசு வாங்கியிருக்கா ஸ்ருதி...''
''எல்லா போட்டியிலயும் சான்றிதழ் வாங்கிடுவா; ஒன்னு ரெண்டுல பரிசுகள் வாங்கியிருக்கா...''
''கல்லுாரிக்கு போன அப்புறம் என்ன ஆச்சு...''
''போட்டிகளில் ஆர்வம் குறைஞ்சு போயிடுச்சு; அது மட்டும் இல்ல, போட்டியில கலந்துக்கிட்டேன்னு சில சமயங்களில பொய் கூட சொல்லி இருக்கிறா எனக்கு தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கிறா; ஆனா கண்டுபிடிச்சிட்டேன்...''
''ஏன் பொய் சொன்னான்னு எப்பவாது யோசிச்சு பாத்தீங்களா...''
''யோசிக்க என்ன இருக்கு... சேர்க்கை சரியில்ல; நண்பர்கள் கூட வெளியில சுத்த ஆரம்பிச்சுட்டா. அது தான் காரணம்...'' என்றார் சுகந்தி.
உற்று பார்த்து, ''அது இல்ல காரணம்...'' என, மருத்துவர் கூறிய தகவல் கேட்டு அதிர்ந்து போனாள் சுகந்தி. அவள் முகம் வெளிறியது.
''குழந்தைய நல்லா சாப்பிட வைக்கணுமுன்னு முயற்சி செய்திருக்கீங்க; அது தப்பு இல்ல; ஆனா, சாப்பிட வெச்ச முறை தான் தப்பு...'' என்றார் அருணா.
புரியாமல் பார்த்தாள் சுகந்தி.
''பள்ளியில நடக்கிற போட்டி, ஓட்டல இருக்குற பல வகை உணவு மாதிரி. எல்லா வகை உணவையும் ஊட்டி விட்டிருக்கீங்க; ஆனா, குழந்தைக்கு எந்த உணவு பிடிக்கும், ஒத்துக்கும் என கவலை படல; பிடித்த உணவ தேர்ந்தெடுத்து, சாப்பிடுற வாய்ப்பையும் அவளுக்கு, நீங்க கொடுக்கல; இப்போ விஷயம் புரியும்ன்னு நினைக்கிறேன்...'' என்றார் மருத்துவர்.
புரிய ஆரம்பித்தது.
''போட்டிகள், சாப்பாடு மாதிரி வகை வகையாய் இருக்கும்; அம்மாவே ஆசிரியையாக இருந்ததால, எல்லா சாப்பாட்டையும் எடுத்து, உங்க குழந்தைக்கு ஊட்டிட்டீங்க... அவளும் சாப்பிட்டு பழகிட்டா. கல்லுாரிங்கிற வேறொரு ஓட்டலுக்கு போன பின், எடுத்து ஊட்டி விட, அம்மா இல்லாத சூழ்நிலை; அவளுக்கு தானா எடுத்துச் சாப்பிட தெரியல...''
இப்போது புரிந்தது.
''பொறியியல் கல்லுாரிக்கு வர்றவங்க நல்லா படித்து திறமைசாலிகளாக இருப்பாங்க. போட்டியிட்டு, தனக்கான வாய்ப்பை தேடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். சில சமயம் வாய்ப்பு கிடைக்கும்; அதேசமயம் திறமையா இருக்குற மத்தவங்களுக்கும் வாய்ப்பு போகும்...''
தலையசைத்தாள் சுகந்தி.
''இந்த மாதிரி நேரத்துல, போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கலன்னு அம்மாவுக்கு தெரிஞ்சா நல்லாயிருக்காதுன்னு, பொய் பேச ஆரம்பிச்சிருக்கிறா...'' என்றார் மருத்துவர்.
ஆமோதிக்கும் நிலையிலிருந்தாள் சுகந்தி.
''ஸ்ருதி சொன்னது அப்படியே இருந்துட்டு போகட்டும்; அவளிடம் ஏதும் கேட்டுடாதீங்க... எந்த விஷயத்தையும் குழந்தைகள் மீது திணிக்கிறத தவிர்த்து, சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்குற பழக்கத்த உருவாக்கணும்...'' என்றார் அருணா.
ஒப்புதலாய் தலையசைத்தாள்.
டாக்டரின் ஆலோசனை முடிந்தது. இரவு 7.00 மணிக்கு வீடு வந்து சேர்ந்தனர்.
வந்ததும், ''அம்மா... எனக்கு சோர்வா இருக்கு... குளிச்சிட்டு வந்துடுறேன்...'' என கூறி சென்ற மகள் ஸ்ருதியை, வியப்புடன் பார்த்தாள் சுகந்தி.
குளித்து வந்தவளிடம் டம்ளரை நீட்டினாள் சுகந்தி.
''என்னது...''
''உனக்கு பிடிச்ச இஞ்சி டீ... சூடா, இதமா இருக்கும்...''
அம்மாவை, சினேகமாய் பார்த்தாள் ஸ்ருதி.
மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின், மாற்றம் உருவாகியிருப்பதை இருவரும் உணர்ந்தனர்.
ஸ்ருதிக்கு, சுலைமானி நினைவுக்கு வந்தது.
பால் கலக்காத மசாலா டீயில், எலுமிச்சை சாறு ஊற்றி தயாரிக்கும் டீ அது; அவளது கல்லுாரி கேன்டீனில் பிரபலம்!
பெயர் தெரியாமல், 'மிஸ்டர் எக்ஸ்' என பதிவு செய்திருந்தவன் தான், அவளுக்கு சுலைமானி டீயை அறிமுகப்படுத்தியவன்.
கல்லுாரியின் ஆரம்பகால நினைவுகளை அசைப்போட ஆரம்பித்தாள் ஸ்ருதி.
- தொடரும்...
ரவி

