sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

மூங்கில் சொன்ன பாடம்!

/

மூங்கில் சொன்ன பாடம்!

மூங்கில் சொன்ன பாடம்!

மூங்கில் சொன்ன பாடம்!


PUBLISHED ON : அக் 11, 2013

Google News

PUBLISHED ON : அக் 11, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசப் பெருந்தெருவை அடுத்து நாற்பெரும் வீதி சந்திக்கும் இடத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. கூடியிருந்த மக்கள் கையொலி செய்தும், ஆரவாரம் புரிந்தும் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். இடையிடையே மத்தள முழக் கொலியும், மக்களைப் பார்த்துப் பேசும் பேச்சொலியும் கேட்டுக் கொண்டிருந்தது. அதற்குக் காரணம், தெருப் புழுதியிலே கழைக்கூத்தாடி தன் வேடிக்கைகளை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டிக் கொண்டிருந்தான்.

நெடு மூங்கிலின்மேல் நின்று அவன் ஆடும் காட்சியை அனைவரும் கண்டனர். ஆட்டம் அழகுதான். அவன் கரணம் போடுவதும், தாவி ஆடுவதும், தலைகீழாகத் தொங்குவதும் காண்போர் அனைவரின் கண்ணையும், கருத்தையும் பற்றி ஈர்த்தன. அவர்கள் உள்ளங்களிலெல்லாம் ஓர் இன்ப வெள்ளம் ஊற்றெடுக்கச் செய்தான் அக்கழைக்கூத்தாடி. இளங்குழந்தைகளும், பெரியவர்களும் தம்மை மறந்த நிலையில், அவன் ஆடல் கண்டு மகிழ்ந்தனர்.

ஆட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை. கொஞ்ச தூரத்தில் முரசு முழக்கிப் பின் அறிவிப்பு ஒன்று கூறப்பட்டது. அது வேறொன்றுமில்லை.

அவ்வூரை ஆளும் மன்னர் பல்லக்கில் ஏறி உலா வருகிறார் என்பதே ஆகும். அச்சேதி கேட்ட மக்கள் அனைவரும் கலைந்து அரசப் பெருந்தெருவுக்குப் போய் விட்டனர். கழைக் கூத்தாடியும் வேடிக்கைக் காட்டுவதற்கு உறுதுணையாய் இருக்கும் பொருள்களை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்துத் தன் ஆட்டத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டான் பாவம்.

அதற்குள், மன்னரும் பல்லக்கில் அரசப் பெருந்தெருவின் முனையை வந்தடைந்தார்.

அரசரைக் காண கூத்தாடியும், கூட்டத்தோடு கூட்டமாகப் போய் நின்றான். முத்தாலும், மணியாலும், பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர்ந்து மன்னர் உலா வந்து கொண்டிருந்தார். நவரத்தினங்கள் வைத்துச் செய்யப்பட்ட மணிமகுடத்தை அணிந்து கொண்டிருந்தார் மன்னர். அம்மணி மகுடத்தின் மேல், அழகு செய்யப்பட்டு வளைந்து நின்ற மூங்கில் ஒன்று காணப்பட்டது.

அதனைக் கண்ட சிவா, தன்னருகில் நின்றிருந்த பெரியவரைப் பார்த்து, ''ஐயா... கொஞ்ச நேரத்துக்கு முன்பு கூத்தாடியின் காலின் கீழ் அகப்பட்டுப் படாத பாடு பட்ட நெடு மூங்கிலும், மன்னரின் மணிமகுடத்துக்கு மேலிருக்கும் பேறு பெற்ற இந்த மூங்கிலும் இனத்தால் ஒன்றாயிருந்தும், நிலையால் இரு வேறு பாகுபாடு ஏற்படக் காரணம் என்னவோ?'' என்று வினவினார்.

''அப்பா, நல்ல கேள்வி கேட்டாய்... அதற்குரிய பதிலைக் கூறுகிறேன் கேள்! தன்னைப் பிறர் வளைத்து வருத்தப்படுத்த மிக வருந்தி வளைந்த மூங்கில் தண்டு, உலகத்துக்கே தலைவரான அரசரின் மணிமகுடத்தின் மேல் இருக்கும் உயர் நிலையைப் பெற்றது.

''அங்ஙனம் வளைத்து வருத்த வளையாது நிமிர்ந்தே நின்ற மூங்கில் கொம்பு கீழ்மை உடையதாய், கழைக் கூத்தாடிகளின் கையிலே அகப்பட்டு உலகமெல்லாம் சுற்றிச் சுற்றி அலைந்து, அவருடைய காலின் கீழே கிடந்து இழிவடையும்!'' என்றார் பெரியவர்.

அப்போது அரசப் பெருந்தெருவின் வழியாக அறிஞர் பெருமகனார் வந்து கொண்டிருந்தார். அவரைப் பல்லக்கில் இருந்தபடியே பார்த்துவிட்ட மன்னன், பல்லக்கை கீழே வைக்கச் சொல்லி, பல்லக்கினின்றும் இறங்கிச் சென்று அவ்வறிஞர் பெருமகனாரை வணங்கி நின்றான்.

இதனைக் கண்ணுற்ற கேள்வி கேட்ட சிவா பெரியவரிடம், மீண்டுமொரு வினாவினைத் தொடுத்தார்.

''ஐயா! அரசனும் வணங்கத்தக்க அளவுக்கு அவர் அவ்வளவு பெரியவராய் உயர்ந்தது எதனால்? விளக்க வேண்டும்!'' என்றார்.

''அப்பா! இளமையிலே தந்தையாரும், ஆசிரியரும் வற்புறுத்திப் படிக்க வைக்க, அப்போதும் நன்றாய் வருந்திப் படித்துக் கொண்டதனால், அரசனும் வணங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.

''இளமையில் வளைந்த மூங்கில் தண்டு, ஏறிவரும் பல்லக்கில் மன்னரின் மணிமுடிக்கும் மேலிருக்கும் உயர்நிலையைப் பெற்றிருப்பதைப் போன்று, பால பருவத்தில் பணிந்து படித்துக் கொண்டவர் இவர்.

''அவ்வாறு வளையாமல் வாலிபப் பருவத்தைப் பாழாக்கிக் கொண்டு நிமிர்ந்து நின்றவர்கள் பின்பு குடிக்கக் கஞ்சியும், கட்டத் துணியும் அற்று, ஊர் ஊராய் அலைந்து திரிந்து கீழ்மக்களின் வேலைகளைச் செய்து கொண்டு கழைக் கூத்தாடியின் கையில் அகப்பட்ட நெடு மூங்கிலைப் போன்று அவர்களால் உதைப்பட்டுக் கிடப்பர்!'' என்று விளக்கினார் பெரியவர்.

''ஐயா! இன்று கழைக் கூத்துக் காண வந்து கல்வியின் அருமையைப் பற்றி, உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இனி பள்ளிக் கூடம் போகாமல் ஊர் சுற்றுவதை விட்டு விடுவேன். இந்த வயதில்தான் நன்றாகப் படிக்க முடியும்... எனவே, நன்றாகப் படித்து முன்னேறுவேன்!'' என்றான்.

***






      Dinamalar
      Follow us