PUBLISHED ON : ஜூன் 21, 2025

நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினம் வாத்தலகி. தலையின் முன்பகுதி வாத்தின் அலகு போல் இருப்பதால் இந்த பெயர் வந்தது. இதன் அறிவியல் பெயர் ஆர்நிதொரிங்கஸ் அனாடினஸ். ஆங்கிலத்தில், 'பிளாட்டிபஸ்' எனப்படுகிறது.
பாலுாட்டி வகையில் முட்டையிடும் ஒரே விலங்கு இது. ஆர்நிதொரிங்கிடே என்ற விலங்கினக் குடும்பத்தில் தற்போது வாழும் ஒரே உயிரினம் வாத்தலகி. ஆஸ்திரேலியா கண்டப் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.
சிற்றாறு மற்றும் நீர்நிலைகளின் கரையோரம் வளை தோண்டி வசிக்கும். வளையிலிருந்து நீருக்குள் செல்ல ஒரு வாயில் அமைத்து இருக்கும். வளைக்கு உள்ளே கூடு கட்டி தன் ரோமத்தை உதிர்த்து பரப்பி மெத்தை போன்ற அமைப்பாக்கி அதில் வசிக்கும். பெரும்பகுதி நேரத்தை நீரிலேயே கழிக்கும். நீர்நிலையின் அடிப்பரப்பில் காணப்படும் மெல்லுடலி, புழு, பூச்சிகளை தின்னும். அதற்கு பிரத்யேகமாக அமைந்துள்ள அலகு உதவுகிறது.
நடுத்தர அளவு உடலமைப்புள்ள உயிரினம் வாத்தலகி. வாலுடன் சேர்ந்து இதன் நீளம், 50 செ.மீ., வரை இருக்கும். நீரில் எளிதாக நீந்த வசதியாக பாதங்களில் நீந்து சவ்வு அமைந்துள்ளது. இதன் உதவியால் அதிவேகமாக நீந்தும். இதற்கு கரும்பழுப்பு வண்ணத்தில் முடிகள் மிக அடர்த்தியாக உள்ளது. இதனால் தண்ணீர் உடலில் புகுவதில்லை. கரையேறும் போது உடல் உலர்ந்திருக்கும். நீரில் மூழ்கும் போது இதன் செவித்துளைகள் அடைத்துக் கொள்ளும்.
பெண் வாத்தலகி கூட்டில் இரண்டு முட்டைகள் இட்டு அடைகாக்கும். முட்டைகளிலிருந்து வெளிவரும் குட்டிகள் உடலில் ரோமம் அற்றவையாக இருக்கும். பார்க்கும் திறனும் பெற்றிருக்காது.
வாத்தலகியின் பால் சுரப்பி எளிய கட்டமைப்புடன் இருக்கும். மற்றப் பாலுாட்டி இனங்களில் இருந்து மாறுபட்டுள்ளது. பாலுாட்டும் வேளையில், தாய் வாத்தலகி மல்லாந்து படுத்துக் கொள்ளும். குட்டிகள் அதன் வயிற்றில் ஏறி, சுரப்பிகளை அலகுகளால் நசுக்கி பால் சுரக்க வைத்து குடிக்கும்.
வாத்தலகியின் முன் கால் மணிக்கட்டு பகுதியில் சிறிய கொடுக்கு இருக்கும். பொதுவாக இரு பாலினத்திலும் இவை காணப்படும். ஆனால் ஆண் வாத்தலகி கொடுக்கில் மட்டுமே விஷம் சுரக்கும். இது பல புரதங்களின் கலவையாக உள்ளது. சிறு உயிரினங்களை கொல்ல வல்லது.
இந்த நஞ்சால் மனிதனுக்கு மரணம் நிகழாது. ஆனால் அதிக வலி ஏற்படும். பல மாதங்கள் வரை வலி நீடிக்கும். அழிந்து வரும் விலங்கினப் பட்டியலில் வாத்தலகியும் உள்ளது. இந்த இனத்தை பாதுகாக்க ஆஸ்திரேலிய பல்லுயிரின பாதுகாப்பு அமைப்பு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. உலகின் முதல் வாத்தலகி சரணாலம் ஆஸ்திரேலியாவில் திறக்கப்பட்டுள்ளது.
தனித்துவம் நிறைந்த வாத்தலகி பற்றி, ஆஸ்திரேலிய பழங்குடி இன மக்களின் வாய்மொழி கதைகளில் தகவல்கள் உள்ளன. காலநிலை மாற்றப் பிரச்னையால் இந்த உயிரினம் அழிவின் விளிம்பில் உள்ளது.
- ஆ.அம்பிகா