PUBLISHED ON : மே 30, 2020

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை நடை பயிற்சியை முடித்து, ''அப்பாவோட ஒரே ரோதனையா போச்சு...'' என்றபடி, எரிச்சலுடன் வீட்டுக்குள் நுழைந்தாள் அம்மா; தொடர்ந்து அமைதியாக வந்தார் அப்பா.
''என்னாச்சும்மா...'' என்றான் மகன் வரதன்.
''நடை பயிற்சிக்கு சென்ற போது, வழியில் ஏகப்பட்ட பிரச்னையை கிளப்பி, வம்பை விலைக்கு வாங்குறாருடா...''
''அப்படி என்னம்மா செய்தார்... அவர்தான் சட்டத்தை மதித்து அறத்தோட வாழ்றவராச்சே...''
சந்தகேத்துடன் கேட்டான் வரதன்.
''ரோட்டுல, 'டூவீலர்'ல போறவங்க, எப்படி ஓட்டுனா இவருக்கென்ன... யாராவது அலைபேசியில் பேசியபடியே ஓட்டினால், நிறுத்தி சண்டை போடுறாரு...''
''அய்யோ பெரும் வம்பாயிடுமே...''
''அத்தோட விடுறதில்ல... கண்டபடி அறிவுரைய வாரி வழங்குறாரு...''
''அப்படி என்ன சென்னாரு...''
பேசிக் கொண்டிருந்த போது, இடையில் புகுந்தார் அப்பா.
''அமாம்டா... அலைபேசியில் பேசியபடி மோட்டார் சைக்கிள் ஓட்டினா கவன சிதறல் ஏற்படாதா... முன்னால் இருக்கிற மேடு பள்ளம் தெரியாம, நடந்து போகிறவங்க மீது மோத வாய்ப்பு ஏற்படுமே...
''விபத்து ஏற்பட்டு, கால், கை உடைஞ்சு, தலையில கூட அடிப்படலாம். சம்பந்தமே இல்லாத அப்பாவிகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு அல்லவா... அதுல, 'ஹெல்மெட்' என்ற தலைகவசம் வேற போடாம ஓட்டுறாங்க... அவங்களுக்கு சாலை விதிகளை எல்லாம் புரிய வைக்க வேண்டாமா...'' என்று நிதானமாக சிரித்தார்.
''பைக் ஓட்டுறவங்க ஒண்ணும் சொல்லுறதில்லையா...''
''பலர் ஆவேசப்படுவாங்க... 'இதுக்காகவா வண்டியை நிறுத்துற... போயா... உன் வேலையைப் பார்த்துட்டு'ன்னு, கோபத்தோட சண்டைக்கு வருவாங்க... நான் எனக்காகவா சொல்றேன்; அவங்களும், சாலையில் நடந்து போகிறவங்களும் பாதுகாப்பாயிருக்கணும்னு தானே சொல்றேன்...'' என்றார் அப்பா.
''இதுக்குப் போய், சண்டைக்கு வர்றீயேன்னு ஒருத்தர் கத்துறார்... தினமும், இதே கதையாப்போச்சு... நடை பயிற்சியை முடித்து வருவதற்குள் போதும் போதும்ன்னு ஆயிடுதுப்பா...'' என்று அங்கலாய்த்தாள் அம்மா.
''அப்பா செய்றதுல என்னம்மா தப்பு இருக்கு; நல்ல விஷயத்தை யாரு வேணுமானாலும் சொல்லலாம்... அரசும், நீதிமன்றமும் உத்தரவு போடுறது நம்ம நன்மைக்கு தானே... அதை கடைப்பிடிக்க வேண்டாமா... மத்தவங்களுக்கு முன்னுதாரணமா இருக்க வேண்டாமா... அதைத்தானே அப்பா செய்றாரு...'' என்ற வரதன், சாலைவிதியை மதிக்காததால் ஏற்பட்ட ஒரு விபத்தை விளக்கி, அதன் விளைவை விவரித்தான்.
அம்மாவுக்கு விவரம் புரிந்தது.
''அப்பா செய்றது ரொம்ப நல்ல செயல்; அவர் விதைக்கிற எல்லா விதைகளும் முளைச்சு வரப்போவதில்லை... ஒரு சில முளைத்து வந்தாலே நன்மை பெருகும்; இனி சேர்ந்து விதைப்போம்... கண்டிப்பா முளைக்க வைப்போம்... விளைவு பற்றிக் கவலைப்படாமல் நற்செயல்கள் செய்வோம்...'' என்றாள் அம்மா.
ஆச்சரியத்தில் மூழ்கினார் அப்பா.
சிறுவர்களே... சாலை விதிகள் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. அந்த விதிகளில் குறிப்பிடும் ஒழுங்கை மதித்து நடந்தால் தான் அமைதி ஏற்படும். சாலை விதிகளை மதிப்போம்; பாதுகாப்பை உறுதி செய்வோம்.
சி.சுகுமாரன்
