
பாளையங்கோட்டை, இக்னேஷியஸ் கான்வெட் உயர்நிலைப் பள்ளியில், 1959ல், 10ம் வகுப்பு படித்த போது, விடுதி காப்பாளராக சகோதரி செசிலியா இருந்தார். ஆங்கிலேயர்; கொஞ்சம் தமிழும் பேசுவார். பள்ளியில் ஆங்கிலத்தில் மட்டும் தான் உரையாட வேண்டும்.
முந்தைய ஆண்டு ஆங்கில பாடம் நடத்திய ஆசிரியை இருதயம் என் பாசத்துக்கு உரியவர். வேறு பள்ளிக்கு மாற்றலாகி இருந்தார். அவருக்கு ஒரு கடிதம் எழுதி, என் முகவரியை குறிப்பிட்டேன். பெறுநர் பகுதியில் அவர் பெயரை எழுதி, முகவரி சரி பார்க்க, அறைக்கு சென்றேன்.
திரும்பும் முன், அந்த கடிதத்தை தபால் பெட்டியில் சேர்க்க எடுத்து போய் விட்டனர். பெறுநர் முகவரி இல்லாததால், மறுநாளே திரும்பி வந்தது கடிதம்.
அதை வாசித்த விடுதி காப்பாளர், 'வான்ட் டூ சீ யுவர் லவ்விங் பேஸ்...'ன்னு எழுதியிருக்கிறாயே... டூ யு லவ் கர்...' என, கோபமாக கேட்டார். ஏளனமாக சிரித்தனர் மாணவியர். அவமானமாக உணர்ந்தேன்.
மறுநாள், என் பிறந்த தினம்; விடுதி காப்பாளருக்கு இனிப்பு கொடுத்து, 'அன்பு, பாசம், நேயம், காதல், பரிவு என, பல சொற்கள் தமிழில் உள்ளன. அவற்றுக்கு, 'லவ்' மட்டும் தான் ஆங்கிலத்தில் உண்டு. கடிதத்தை தமிழில் எழுதியிருந்தால், 'அன்பு முகத்தைப் பார்க்க ஆசை' என குறிப்பிட்டிருப்பேன்...' என, ஆங்கிலத்தில் கூறினேன். அசடு வழிய புன்முறுவல் செய்தார்.
தற்போது, என் வயது, 77; சொல்வளம் மிக்கது தமிழ் என, அந்த வயதில் உணர்த்தியதை, நினைத்தால் மனம் நெகிழ்கிறது. உன்னத தாய்மொழியை நேசிக்கிறேன்.
- லீலா, திருவண்ணாமலை.

