PUBLISHED ON : டிச 02, 2011

பாண்டிய நாட்டை வீரசேனன் சிறப்பாக ஆண்டு வந்தான். அவன் மனைவி குணவதி. பெயருக் கேற்றபடி குணசாலி. மன்னனுக்கு ஒரு மகன் பிறந்தான். அரண்மனை யெங்கும் சந்தோஷம்.
ஒருநாள் அரசன் நகர சோதனைக்குப் புறப்பட்டான். அவன் சென்ற வழியை ஒட்டி ஒரு மலர்த் தோட்டம் இருந்தது. வேலி ஒரத்தில் இருந்த செடி ஒன்றில், ஒரு கருநாகம் ஏறியது. செடியிலுள்ள முள் அதன் உடலைக் குத்த, சினத்தோடு சீறிய நாகம் மலர்ந்த பூ தான் தன்னைக் கிழித்ததாக எண்ணி, நஞ்சை அதில் கக்கிவிட்டுச் சென்றது.
இதை அறியாது அவ்வழியே வந்த மன்னன், அப்பூவின் அழகில் மயங்கி அதைப் பறித்து முகர்ந்தான். உடனே கண்கள் சொருகின; தலை கிறுகிறுத்தது. தள்ளாடியபடி அரண்மனைக்கு வந்து மஞ்சத்தில் துவண்டு விழுந்தான்.
அரசி பதறினாள்; வைத்தியரை அழைப்பித்தாள். வைத்தியர் வருவதற்குள் உயிர்ப்பறவை பறந்து விட்டது. குணவதி கதறினாள். பாண்டிய நாடே சோகத்தில் மூழ்கியது. இது இப்படி இருக்க...
மூலனென்ற இடையன் தேகத்தில் கூடு விட்டுக் கூடுபாய்ந்து திருமந்திரத்தைப் பாடிக் கொண்டிருந்த திருமூலர், வான் வழி சென்று கொண்டிருந்தார். அவர் இரக்க மனம் படைத்தவர். அதனால்தான் முன்பு பசுக்களின் கண்ணீரைக் கண்டு மூலன் சரீரத்தில் புகுந்தார். இப்போது குணவதியும், மக்களும் அழுவது கண்டு, வீரசேனன் மேனியில் புகுவதென்று தீர்மானித்தார்.
நான்கு வேதங்களும் சேர்ந்து சதுரகிரிடி என்ற மலையாய் இருந்தது. அங்கே குகைகள் ஏராளம். அங்கே தவமிருந்தான் திருமூலரின் அந்தரங்க சீடன் குருராஜன்.
அவனிடம் தம் கருத்தைச் சொன்னார் மூலனார்.
''குருவே! இறப்பும், பிறப்பும் தூக்கமும், விழிப்பும் போல் என்பீர்களே! இவர்களுக்கு அது பொருந்தாதா?'' என்று கேட்டான் சீடன்.
''அரசிக்குப் பைத்தியம் பிடித்து விடுமோ என அஞ்சுகிறேன். பித்துப் பிடித்தவரிடமும், குழந்தைகளிடமும் தத்துவம் பேச முடியாது. பறவைகள் மரங்களில் தங்குவதுபோல் ஒரு குலத்தில் பிறந்து வாழும் மனிதன், நோய்வாய்ப்பட்டு இறந்தால் சமாதானமடையும் மனம் அவனே சொல்லிக் கொள்ளாமல் திடீரென இறந்து போனால் ஸ்தம்பித்து விடுகிறது. மரம் கல்லடி தாங்கும். கண்ணாடி அதைத் தாங்காது. நான் வரும் வரை எனது சரீரத்தை பாதுகாத்து வை,'' எனக் கூறி சூட்சும உடலோடு பாண்டிய நாடு சென்றார் திருமூலர்.
புதைப்பதற்காக நீராட்டி முடித்த மன்னன் உடல் அசைந்தது. அனைவரும் திடுக்கிட்டனர். சித்தி சந்திரவதனியும் அவளது, மூன்று புதல்வர்களையும் தவிர அனைவரும் ஆனந்தித்தனர்.
தூங்கி எழுந்தவன் போல் மன்னன் எழுந்தான். பிழைத்த அரசனை ஆயிரம் கேள்விக் கணைகளால் துளைத்தனர், சந்தேகப்பிராணிகள். திருமூலராகிய வீரசேன மகாராஜா பொறுமையாக அனைத்துக்கும் பதிலளித்தார்.
''மன்னா! தங்களுக்கு ஏன் எதற்கும் கோபமே வருவதில்லை?'' என்று குணவதி கேட்டாள்.
''ஏன்? அது ஒரு குற்றமா?'' என்று மடக்கினார் அரசர்.
''இல்லை, இல்லை! இதற்கு முன்பு தொட்டதற்கெல்லாம் சினம் பொங்கும். இப்போது சாந்தம் தாண்டவமாடுகிறது. வழக்கு மன்றம் தூங்குகிறது. நாட்டில் செல்வம் கொழிக்கிறது. இதெல்லாம் தாங்கள் இறந்து பிறந்த பின்தான்! தாங்கள் வேறு யாரோ மகான் என்று என் உள் மனம் சொல்கிறது. உண்மையை என்னிடம் சொல்லக் கூடாதா?'' என்று கெஞ்சினாள் அரசி.
திருமூலர் கருணை மழையாயிற்றே! எல்லாவற்றையும் ஒப்பித்து விட்டார்.
''குணவதி! இந்த உடல் உன் கணவருடையது. உன் கண்ணீர் என்னைக் கரைத்தது. தவறென்றால் என்னை மன்னித்து விடு,'' என்றார் திருமூலராஜா.
''ஐயோ, என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்? தங்கள் பழைய உடல் என்னவாயிற்று? அதை யாராவது எரித்து விட்டால்?'' என்று பதறினாள் ராணி.
''அவ்வளவு சுலபமாய் அதைக் கொளுத்த முடியாது. அது காய கல்பம் சாப்பிட்ட மேனி. அதன் மேல் வெடி உப்பும், குங்கிலியமும், வெங்காரமும் (பொரிகாரம்) தூளாக்கிப் பூசி விராலி இலைகளால் மூடி, அகில் கட்டைகளை அடுக்கி தீ மூட்டினால்தான் அது பஸ்பமாகும். அதை என் சிஷ்யன் குருராஜன் பாதுகாத்து வருகிறான். கவலைப்படாதே,'' என்றார்.
குணவதி சிந்தித்தாள். தான் சுமங்கலியாக மடிய வேண்டும் என நினைத்தாள். தனக்கு நம்பிக்கையான ஆட்களை அனுப்பி குருராஜன் இல்லாத நேரம் பார்த்து சித்தர் சொன்ன முறைப்படி அவர் சரீரத்தைத் தகனம் செய்யும்படி அனுப்பினாள். அங்கோ வருடக் கணக்கில் காத்திருந்த குருராஜன் குருவைத் தேடிப் புறப்பட்டு போன நேரம் பார்த்து சேவகர்கள் குகைக்கு அருகில் வந்திருந்தனர். அரசி சொன்ன முறையில் திருமூலர் உடலைத் தகனம் செய்து திரும்பினர்.
இதை ஞான திருஷ்டியின் மூலம் இதை அறிந்தார் மூலனார். 'உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அரசர் சிறிது காலம் ஒய்வெடுக்கப் போகிறார். இனி மகாராணியே அரசின் பொறுப்புகளை கவனிப்பார்' என்று பிரகடனம் செய்தார் மன்னர் வடிவில் இருந்த சித்தர்.
குணவதி திடுக்கிட்டார். இதென்னா புதுக்குழப்பம் என்று சிந்தித்தாள். பிறகு உண்மையைக் கூறி விடுவதே உத்தமம் என்று நினைத்து அவரிடம், சேவர்களைக் கொண்டு தான் செய்தது அனைத்தையும் கூறி மன்னிக்கும்படி வேண்டினாள்.
''நான் தீர்க்க சுமங்கலியாக வாழ ஆசிர்வதியுங்கள்,'' என்று தன் காலில் விழுந்த அவளை, ''அப்படியே ஆகட்டும்,'' என்று ஆசீர்வதித்தார் அரசர். ஆனால், ஒரு நள்ளிரவில் எவரும் அறியாதபடி அரண்மனையை விட்டு வெளியேறி விட்டார். குருராஜனை சந்தித்து ஆறுதல் கூறி தவம் செய்ய அனுப்பினார்.
பொழுது விடியும் நேரத்தில் உட்கார்ந்த நிலையில் <உயிர் விட்டிருந்த ஒரு அந்தணன் உடலைக் கண்ட திருமூலர், அரசர் உடலைத் துறந்து அந்த தேகத்தில் புகுந்து கொண்டார். யானை உண்டி என்று பெரியமரம். அதில் பெரிய பொந்து இருந்தது. மன்னரின் உடலை அங்கே கொண்டு போய் இருத்தினார் அந்தணர் உடலில் புகுந்த திருமூலர். ஜோதி மரத்தின் பூக்களைப் பறித்து, அதனோடு சில மூலிகைகளைச் சேர்த்து, குழைய அரைத்து அதில் மந்திர சக்தியை ஏற்றி அரசர் சரீரத்தில் தடவினார். இலைகளுடன் கூடிய சதுரகிரிக்கு வந்தாள் குணவதி அவள் அரண்மனைக்கு வருமாறு அழைத்தும் திருமூலர் மனம் மாறவில்லை.
''தாயே! இனி நம் பந்தம் தொடர்வதற்கில்லை. அரசன் உடல் இந்த மரத்தில் இருக்கிறது. அது என்றும் 'கெடாது.' மரத்தோடு இணைந்து விட்டது. அதை நீ மட்டுமல்ல, பதிவிரதைகள் எவரும் வலம் வந்தால் தீர்க்க மாங்கல்யத்தைப் பெறுவர். மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவதைகளும் அம்மரத்தில் வசிப்பர். அரசனோடு ஐக்கியமான அந்த மரத்துக்கு இன்றிலிருந்து அரசமரம் என்று பெயர். அதை வலம் வந்தால் புத்திர பாக்கியம் கிட்டும். வியாதிகள் நீங்கும். போய் அதை பூஜை செய்,'' என ஆசீர்வதித்தார். இதுதான் அரசமரம் தோன்றிய வரலாறு.
***
