
எங்கள் வகுப்பில் கிருஷ்ணன் என்று ஒரு மாணவன் இருந்தான். அவனை செல்லமாக, 'கிச்சா' என அழைப்போம்.
அவன் எந்தக் கேள்விக்கும் வளவளவென்று பதில் கூறுவான். பரீட்சைத் தாள்களிலும் அவ்வண்ணமே ராமாயணம், மகாபாரத ரேஞ்சுக்கு விடை எழுதுவான். உதாரணமாக, 'வள்ளுவர் பற்றி குறிப்பு வரைக' எனும் கேள்விக்கு அவன் எழுதிய பதில் இது.
'வள்ளுவர் மயிலையில் பிறந்தவர்... மயிலையில் கபாலி கோயில் உள்ளது. சாந்தோம் சர்ச்சும் உள்ளது; அழகான கடற்கரையும் உள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மயிலையில் இவர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...
இவருக்கு மயிலையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருடைய பிறந்த நாள் அன்று அரசு விடுமுறையாகும். இவர் திருக்குறள் எனும் நூலையும் எழுதியுள்ளார்' பதில் தெரியுமோ, இல்லையோ எந்தக் கேள்வியானாலும் சகட்டு மேனிக்கு கைக்கு வந்ததை எழுதுவான்.
ஆசிரியர்கள் அவனை பல முறை அறிவுறுத்தியும் அவன் திருந்தவில்லை. அதனால் தலைமையாசிரியரிடம் புகார் சென்றது. அவர் அவனை அழைத்து, 'இனியும் நீ விடைகளை அனாவசியமாக நீட்டி எழுதினால் பெயில் ஆக்கிவிடுவேன்' என்று எச்சரித்து அனுப்பினார்.
அடுத்த பரீட்சையில், இந்தியாவுக்கு சுதந்திரம் வர பாடுபட்ட ஒருவர் பெயரை எழுதுக!' என்ற கேள்விக்கு இவன் எழுதிய பதில், 'வீ.பா.க.பொ...'
இது என்னவென்று புரியாமல் ஆசிரியர் குழம்பிப் போய் அவனிடமே கேட்க, 'என்ன சார் சுருக்கமா எழுத சொல்றீங்க... அப்புறம் என்னன்னு கேக்கறீங்க... வீர பாண்டிய கட்ட பொம்மன் சார்!' என்று இவன் கூற, அவர் அசந்து போனார்.
தமிழ் பரீட்சையில், 'ஓரிரு வாக்கியங்களில் விடை அளிக்கவும், என்ற ஒரு பகுதியில், அபிராமி பட்டரைப் பற்றி சிறு குறிப்பு வரைக' என்று ஒரு கேள்வி வந்தது. அதற்கு இவன் எழுதிய பதில் இதுதான்.
'பட்டர்' என்பது வெண்ணையைக் குறிக்கும் ஆங்கில சொல்லாகும். 'அபிராமி பட்டர்' என்பது ஒரு பிராண்டு வெண்ணெய் ஆகும். இதை உருக்கினால் அபிராமி நெய் வரும் என்று எழுதினான்.
இந்த விடை பள்ளி முழுவதும் பரவி அவனுக்கு ஏகப்பட்ட பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது என்றால் மிகையாகாது.
-ஆர்.பாலாஜி, ஸ்ரீபெரும்புதூர்.

