PUBLISHED ON : நவ 04, 2011

ஆப்பிரிக்கா கண்டத்து அடர்ந்த காடுகளில், ஒரு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில், மோபுத்தோ என்னும் விவசாயி, தன் மனைவி ஜேனியுடனும், தன் ஒரே மகன் ஏட்னேயுடனும் வசித்து வந்தான். அந்தக் கிராமத்து எல்லையில் மோபுத்தோவுக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. அதில், அவன் சோளம் பயிரிட்டு வந்தான்.
வயலில் சோளம் அறுவடைக்குத் தயாராக இருந்தது. மோபுத்தோவும், ஜேனியும் வயலைக் காண சென்றனர்.
செல்லும் வழியில் அறுவடையைப் பற்றித் திட்டம் இட்டுக்கொண்டு சென்றனர். தங்கள் வயலை அடைந்ததும், இருவரும் திடுக்கிட்டனர். வயலில் அறுவடைக்குத் தயாராக இருந்த சோளக்கதிர்களில் பாதியை யாரோ தின்றுவிட்டனர்.
இருவரும் கவலையுடன் வீட்டுக்குக் திரும்பினர்.
பெற்றோரின் கவலையின் காரணம் கேட்ட ஏட்னே உடனே புத்திசாலித்தனமாக, ''அப்பா, கவலைப்படாதீர்கள். நம் வயலுக்கு அருகில் ஒரு பெரிய குழி தோண்டி அதை இலைகளால் மறைத்து விடுங்கள். திருட வரும் மிருகம், அதன் மேல் காலை வைத்தால், குழிக்குள் விழுந்து விடும். நாம் பயிரையும் பாதுகாக்கலாம், தவிர சிக்கிக் கொள்ளும் மிருகத்தின் மாமிசமும் சாப்பிடலாம்,'' என்று யோசனை கூறினான்.
அந்த யோசனையின்படி மோபுத்தோ தன் வயலுக்குச் சென்று அதன் அருகில் ஒரு பெரிய குழி தோண்டலானான்.
குழி தோண்டி முடித்ததும், திடீரென, ''என் காட்டில் எனது அனுமதி இல்லாமல் நீ எப்படி குழி தோண்டினாய்?''என்று ஒரு ஆண் பிசாசு அவன் முன் நின்றது.
பிசாசைக் கண்ட மோபுத்தோ பயந்து நடுங்கினான்.
''ஆண் பிசாசே! நான் குழி தோண்டியிருப்பது, என் வயலை நாசம் செய்யும் மிருகத்தைப் பிடிப்பதற்காக,'' என்று பணிவுடன் கூறினான்.
''அதெல்லாம் எனக்குத் தெரியாது. என் அனுமதியில்லாமல் எனக்கு சொந்தமான காட்டில் நீ செய்த வேலைக்கு, இப்போதே உன்னை நான் கொல்லப் போகிறேன்,'' என்று சீற்றத்துடன் கூறியது பிசாசு.
''என்னை மன்னித்து விடு. என்னை நம்பி மனைவியும், பிள்ளையும் உள்ளனர்,'' என்ற மோபுத்தோ பிசாசிடம் கெஞ்சினான்.
''சரி, உன்னைப் பார்த்தால் பாவமாயிருக்கிறது. உன்னை விட்டு விடுகிறேன். ஆனால், இந்த குழியில் ஆண் மிருகம் எது விழுந்தாலும் நீ எடுத்துக்கொள்; ஆனால் பெண் மிருகம் விழுந்தால், அதை எனக்குக் கொடுத்து விடு,'' என்றது பிசாசு.
அவனும் ஒப்புக் கொண்டு, அந்தக் குழியை இலை தழைகளால் மூடி விட்டுச் சென்று விட்டான்.
மறுநாள் மோபுத்தோ, மிருகம் குழியில் ஏதாவது மிருகம் விழுந்திருக்கிறதா? எனப் பார்க்கச் சென்றான்.
உடனே, பிசாசும் தயாராக நின்றது. குழியில் ஓர் ஆண் குரங்கு விழுந்திருந்தது.
மகிழ்ச்சியுடன் குரங்கை எடுத்துச் சென்றார் மோபுத்தோ.
மறுநாள் பார்த்தால், ஓர் ஆண் மான் குழிக்குள் விழுந்திருந்தது. ஒப்பந்தப்படி மானையும் மோபுத்தோ எடுத்துச் சென்று விட்டான்.
இவ்வாறு மோபுத்தோ குழிக்குள் காணும் போதெல்லாம், ஆண் மிருகம் விழுந்திருக்கக் கண்டு மகிழ்ச்சி அடைந்தான். பிசாசு ஏமாற்றம் அடைந்தது. மோபுத்தோ வீட்டில் தினசரி மாமிச உணவு உண்ண முடிந்தது.
இனிமேல் அறுவடை செய்து விடலாம், என்று எண்ணிய மோபுத்தோவுக்கு ஒருநாள், உடல் நலம் குன்றியது. தனக்குப் பதிலாக தன் மனைவியை வயலுக்கு அனுப்பி வைத்தான். ஆனால், மாலை நேரம் வந்ததும், ஜேனி வீடு திரும்பவில்லை.
'ஜேனிக்கு என்ன ஆயிற்று?' என்ற கவலையில் ஆழ்ந்த மோபுத்தோ தன் மகனுடன் வயலுக்கு சென்றான். வயலை அடைந்ததும், இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், குழிக்குள் விழுந்திருந்தது வேறு யாருமில்லை ஜேனியேதான். உடனே, பிசாசும் அங்கு வந்தது.
பிசாசு மிகுந்த மகிழ்ச்சியுடன், ''இன்று முதல் முதலாக குழியில் பெண் மிருகம் விழுந்துவிட்டது. ஆகவே, இவள் எனக்குத்தான்,'' என்று கூக்குரல் இட்டுக் கொண்டே கூத்தாடியது.
''பிசாசே நீ சொல்வது சரியல்ல. இது பெண் மிருகம் அல்ல. ஜேனி ஒரு மனிதப் பிறவி ஆகவே, இவளை நீ எடுத்துக் கொள்ள முடியாது,'' என்று கெஞ்சினான் மோபுத்தோ.
''அதெல்லாம் கிடையாது. மனிதன் என்பவனும் ஒரு மிருகம் தான், ஆகவே ஜேனி எனக்குத்தான்,'' என்று பிசாசு பிடிவாதம் பிடித்தது. இப்போது என்ன செய்வது என்று திகைத்துப்போய் மோபுத்தோ சிலை போல் நின்றான்.
ஏட்னேவுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. ''பிசாசே! நீ சொல்வது சரி. ஒப்பந்தப்படி பெண் மிருகம் உனக்கே. நீ குழிக்குள் இறங்கி என் தாயைப் பிடித்துக் கொள்,'' என்றான்.
உடனே, பிசாசும் குழிக்குள் குதித்தது. ஜேனியும் மோபுத்தோவும் பயத்தில் அலறினர்.
''அப்பா, குழிக்குள் விழும் ஆண் மிருகம் நமக்குத்தான். ஆகவே, இந்த ஆண் பிசாசு இப்போது குழிக்குள் இருப்பதால் இது நமதே. வாருங்கள், இதை நாம் பிடித்துச் செல்லலாம்,'' என்று புத்திசாலித்தனமாகக் கூறினான்.
பிசாசு திடுக்கிட்டது.
''ஆஹா, நாம் மாட்டிக் கொண்டோமா!'' என்று யோசித்தது.
பின், பிசாசு, மோபுத்தோவை நோக்கி, ''உன் மனைவியை நீ எடுத்துக் கொள்,'' என்று கூறி குழியை விட்டு வெளியே வந்து காட்டிற்குள் மறைந்து விட்டது. மோபுத்தோ ஜேனியை குழிக்குள் இருந்து வெளியே கொண்டு வந்தான். சிறுவன் ஏட்னேயின் சாமர்த்தியத்தை எண்ணி, அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
***
