PUBLISHED ON : ஜூலை 29, 2016

நான் எட்டாம் வகுப்பு படித்தபோது, எங்களின், 'சயின்ஸ்' வகுப்பு டீச்சராக இருந்தவர் தேவகி. மாணவர்களிடம் பற்றும், பாசமும் மிக்கவர். மாணவ, மாணவியரால் பெரிதும் விரும்பப்பட்டவர்.
அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவரது கணவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர். அவருக்கு எதிர் பாராமல் ஈரலில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. எங்களது, ஆசிரியை நிலை குலைந்து போனார். அவரது நோய்க்காக தன் எதிர்கால வைப்பு நிதி பணம் மற்றும் நகைகளை எல்லாம் செலவழித்தார்.
இந்நிலையில் மாணவ, மாணவியர் சேர்ந்து, எங்கள் பெற்றோரிடம் ஆசிரியையின் நிலையைக் கூறி, ஆயிரம் இரண்டாயிரம் எனத் திரட்டி, சுமார் 30 ஆயிரம் ரூபாயை ஆசிரியையிடம் அளித்தோம்.
நன்றிப் பெருக்கோடு, கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டார்.
எவ்வளவோ செலவழித்தும் அவரது கணவரைக் காப்பாற்ற முடியவில்லை. ஆசிரியைக்கு ஆறுதல், தேறுதல் சொல்ல முடியாத துயரம்.
எங்கள் ஆசிரியை தன் இரு பெண்களுக்கும் தந்தையும், தாயுமாக இருந்து வாழ்க்கையில் போராடி அப்பெண்களை நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட்டார். பழைய மாணவிகளான எங்களை, இன்று கண்டாலும் பரிவுடன் விசாரிப்பார். என் பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு இது.
- எஸ். தஸ்லிமா, மடிப்பாக்கம்.

