
ஒரு நாள் -
அக்பர் சக்கரவர்த்தி, பீர்பலிடம் ஒரு புதிர் போட்டார்.
'மேலே மூடி, கீழே மூடி, நடுவே மெழுகு திரி எரிந்து அணைகிறது... இது என்ன...'
இதுதான் அந்த புதிர்.
அதற்கு விடை தெரியாததால், 'அரசே... ஒரு நாள் அவகாசம் கொடுங்கள்; யோசித்துக் கூறுகிறேன்...' என்றார் பீர்பல்.
மறுநாள் -
ஒரு கிராமம் வழியாக சென்றார் பீர்பல்; அவருக்கு தாகம் எடுத்தது; ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். சிறுமி, சமைப்பதைப் பார்த்தார்.
'என்ன செய்கிறாய்...' என்று, கேட்டார் பீர்பல்.
'குழந்தையை சமைத்துக் கொண்டிருக்கிறேன்; தாயாரை எரிய விட்டு கொண்டிருக்கிறேன்...' என்று கூறினாள், சிறுமி.
'அப்படியா... உன் தந்தை எங்கே...'
'மண்ணுடன், மண்ணைச் சேர்ப்பதற்குச் சென்றுள்ளார்...'
'உன் தாய் எங்கே...'
'ஒவ்வொன்றையும், இரண்டிரண்டாக ஆக்க சென்றிருக்கிறாள்...'
இந்த பதில்களை கேட்டு திகைத்தார் பீர்பல்.
சிறுமியின் பெற்றோர் அங்கு வந்தனர்; அவர்களிடம், சிறுமி கூறியதற்கு விளக்கம் கேட்டார் பீர்பல்.
சிரித்த சிறுமியின் தந்தை, 'அவள் சரியாக தானே கூறியிருக்கிறாள்...' என்றார்.
'எனக்கு ஒன்றும் புரியவில்லையே...' என்றார் பீர்பல்.
'குழந்தையை சமைத்து, தாயாரை எரித்துக் கொண்டிருக்கிறாள் என்றால், துவரம் பருப்பை உலையில் போட்டு, அந்த செடியின் காய்ந்த தழையை எரிக்க பயன்படுத்தி கொண்டிருக்கிறாள் என்று பொருள்...'
சிறுமியின் தந்தை விவரமாக சொன்னார்.
'மண்ணுடன் மண்ணைச் சேர்க்க தந்தை சென்றதாக கூறினாளே...'
சந்தேகத்தைக் கேட்டார் பீர்பல்.
'என் உறவினர் ஒருவர் இறந்து விட்டார்; அவரை தகனம் செய்ய போயிருந்தேன்...'
'உங்கள் மனைவி ஒவ்வொன்றையும், இரண்டிரண்டாக செய்து கொண்டிருக்கிறார் என்றாளே...'
வியப்புடன் கேட்டார் பீர்பல்.
'பக்கத்து வீட்டில், உளுந்து உடைத்துக் கொடுக்க சொன்னார்கள்; அங்கு சென்று, உளுந்து உடைத்து கொடுத்து வருகிறாள்...' என்றார், சிறுமியின் தந்தை.
இந்த பதில்களை கேட்டு, மகிழ்ச்சியடைந்தார், பீர்பல். அக்பர் கேட்ட புதிருக்கு பதில் அளிக்க திறமை பெற்றவர்களாக அவர்களை நம்பினார்.
எனவே, அக்பர் போட்ட புதிருக்கு விடை கேட்டார் பீர்பல்.
'இரண்டு மூடிகள் என்றால், ஒன்று ஆகாயம், மற்றொன்று பூமி; மெழுகு திரி என்பது மனிதன்; பூமியில், மனிதன் வாழ்ந்து, இறந்து விடுகிறான்...'
விளக்கினார் சிறுமியின் தந்தை.
மகிழ்ச்சியடைந்த பீர்பல், அவருக்கு பரிசுகள் கொடுத்தார்.
மறுநாள் -
அரச அவைக்கு சென்று, அக்பர் போட்ட புதிருக்கான விடையை கூறினார் பீர்பல்.
சபையிலிருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
மனம் மகிழ்ந்து, பரிசுகள் அளித்து கவுரவித்தார் அக்பர்.
குழந்தைகளே... ஐயங்களை உரிய அனுபவம் பெற்றவர்களிடம் கேட்டு தெளிவு பெற்று வாழ வேண்டும்.

