
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுகா, நிம்மேலி, அகணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1990ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
பள்ளியில், வகுப்பறை கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. மாட்டு வண்டியில் செங்கல், சிமென்ட் போன்ற கட்டுமானப் பொருட்கள் வந்து கொண்டிருந்தன.
அவற்றை இறக்க ஆளில்லை. குறைவாக இருந்தனர் பணியாளர்கள். தலைமை ஆசிரியர் சந்திரசேகர், ஆசிரியர்கள் ஆரோக்கியசாமி, கஜேந்திரன் ஆகியோரும் செங்கல் இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். உதவிக்கு மாணவர்களில் சிலரை அழைத்தார் தலைமை ஆசிரியர்.
'இந்த வேலைகளை நாம் ஏன் செய்ய வேண்டும்...' என கேள்வி எழுப்பினர் மாணவர்கள்.
'நம் பள்ளி இது... நமக்காகத் தானே கட்டடம். உடனிருந்து உதவ வேண்டியது கடமை அல்லவா...'
'இந்த ஆண்டுடன் படிப்பு முடிந்து பள்ளியை விட்டுப் போய் விடுவோமே...'
அலட்சியமான பதிலைக் கேட்டு, 'உங்க தம்பியோ, தங்கையரோ இங்கு படிக்க வருவர் அல்லவா... அவர்களுக்கு உதவ வேண்டாமா... எத்தனை ஆண்டுக்குப் பின் இந்த பள்ளியை நினைத்தாலும், இன்று செய்யும் உழைப்பு, மகிழ்ச்சி உணர்வையே தரும்...' என்று நிதானமாக அறிவுரைத்தார். அது மனதில் பதிந்தது.
இப்போது என் வயது, 41; சென்னையில் வசிக்கிறேன். எப்போது ஊருக்கு சென்றாலும், பள்ளியை காண தவற மாட்டேன். உயர்ந்து நிற்கும் கட்டடம் போல் நினைவில் தங்கியுள்ளார் தலைமை ஆசிரியர்.
- விஜி விஜய், சென்னை.

