PUBLISHED ON : அக் 17, 2020

கடலுார் மாவட்டம், சோழதரம், நடராஜர் நடுநிலைப்பள்ளியில், 2002ல், 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வீட்டில், 'டிவி' சீரியல் பார்க்க அனுமதியில்லை. விடுமுறையில், தாத்தா வீடு சென்றபோது, சீரியல் பார்க்கும் பழக்கம் ஒட்டிக் கொண்டது.
திரும்பியதும், அன்றடாம் சீரியலில் நடப்பவற்றை வகுப்பு தோழியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன். ஒருநாள் மிக ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தேன். இதை கவனித்த தமிழ் ஆசிரியர் பூங்குன்றன், 'அப்படி என்ன சுவாரசியமாக பேசுகிறீர்கள்...' என்றார். தயக்கத்துடன் கூறினோம்.
மிகவும் நிதானமாக, 'சீரியல் கதைகளில் வரும் குமுறல், சத்தமாக பேசுதல், பழி வாங்கும் உணர்வு, சோக இசை, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கும் திட்டம், குடும்ப உறுப்பினருக்குள் சண்டை போன்ற காட்சிகளை தொடர்ந்து பார்த்தால், மனதளவில் பெரும் பாதிப்பு ஏற்படும்...
'உளவியல் பிரச்னை, மன அழுத்தம், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும்...' என எச்சரித்து அறிவுரைத்தார். அது பசுமரத்து ஆணி போல், மனதில் பதிந்தது. அன்றே சீரியலுக்கு விடை கொடுத்தோம்
தற்போது என் வயது, 30; சீரியல் பார்ப்பதற்கு பதில், புத்தகம் படிப்பது மற்றும் நற்செயல்களில் நேரத்தை செலவிடுகிறேன். வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தியவரை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.
- கே.பிரேமா, சென்னை.

