
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், ஆலஞ்சேரி அரிஜன நலத்துறை நடுநிலைப் பள்ளியில், 1966ல், 6ம் வகுப்பு படித்த போது, ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் அடைபட்டிருந்தார் என் தந்தை.
இதை அறிந்த சக மாணவர்கள், என் பக்கத்தில் அமரவோ, பேசவோ மறுத்தனர். சில நாட்கள் தனிமையில் அமர்ந்திருந்தேன். வகுப்பாசிரியரும் கண்டுகொள்ளவில்லை.
தனிமையில் தவித்ததால், பள்ளி செல்வதை நிறுத்தினேன். இதை கேள்விப்பட்டு, கண்ணீர் விட்டு கதறி அழுதார் என் தந்தை; தாயும் வேதனையில் இருந்தார்.
இந்நிலையில், புதிய வகுப்பாசிரியராக சாமுவேல் தர்மராஜ் பொறுப்பேற்றார். என் குடும்ப சூழ்நிலையை அறிந்து வீட்டிற்கு வந்து, அறிவுரை கூறி, பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.
சக மாணவர்களை இயல்பாக பழக வைத்து, 'தவறுகள் மனிதனின் பழக்கம்; அதை உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும்...' என அறிவுரைத்தார்.
தினமும் மாலை வகுப்புகள் முடிந்ததும், கவனம் செலுத்தி கூடுதல் நேரம் பாடங்கற்பித்தார். அவரது அயராத முயற்சியால், முதல் தர மாணவனாக உயர்ந்தேன். எல்லா வகுப்பிலும் சிறப்பு தேர்ச்சி பெற்று, ரயில்வே துறையில் முதன்மை அதிகாரியாக சேர்ந்தேன். சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன்.
இப்போது எனக்கு, 66 வயதாகிறது. என்னை வாழ வைத்த அந்த ஆசிரியர், என் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
- ஆ.ப.பன்னீர்செல்வம், சென்னை.
தொடர்புக்கு: 95662 58120

