தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அரிகோ! (4)

அரிகோ! (4)

அரிகோ! (4)


PUBLISHED ON : ஜூலை 03, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இப்போது இரவில் அரிகோ அவரது அறைக்குள் நுழைந்ததும், சவரக் கத்தியை வைத்திருந்ததும், அறுவை சிகிச்சைக்கான நேரம் வந்துவிட்டதாகக் கூறியதும் நன்றாக நினைவில் வந்தது.

அது கனவா? நிஜமா? தெரியவில்லை!

ஆனால், அரிகோ சவரக் கத்தியுடன் காணப்பட்டாரே! அதற்கு என்ன அர்த்தம்? அந்தக் கத்தியை வைத்து என்ன செய்தார்?

முகம் பார்க்கும் கண்ணாடி முன்பாக நின்று தனது சட்டையைக் கழற்றினார். அதில் சிறிதாக ரத்தக் கறை இருப்பது தெரிந்தது.

திடுக்கிட்டார் பிட்டன் கோர்ட்.

மேலும், நன்றாகப் பார்த்தபோது அவரது விலாப்புறத்தைச் சுற்றிலும் கிழிக்கப் பட்டிருப்பது தெரிந்தது. அதில் கசிந்த ரத்தம் தற்போது ஓரளவுக்குக் காய்ந்து வருவதும் தெரிந்தது. அவருக்கு எதுவுமே புரியவில்லை. இரவில் என்னதான் நடந்தது?

வேறு சட்டையை அணிந்தவாறு தரைத் தளத்திற்கு வந்தார். அரிகோவின் அறைக் கதவைக் தட்டினார்.

தூக்ககலக்கத்தோடு கதவைத் திறந்தார் அரிகோ. அவரது நடவடிக்கையில் இரவு நடந்ததைப் பற்றி எதுவும் துளிக்கூடத் தெரியவில்லை.

இது பிட்டன் கோர்ட்டிற்கு சின்னதாக அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அதனை வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை.

''எனக்கு உடம்பிற்கு என்னவோ போலிருக்கிறது. அவசரமாக மருத்து கடைக்கு வாருங்கள்,'' என்று அழைத்தார்.

அரிகோவும் உடை மாற்றிக் கொண்டு பிட்டன் கோர்ட்டுடன் வெளியே சென்றார்.

அதிகாலை நேரத்தில் மருத்துக் கடை ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்தனர். அவனிடம், ''எனக்கு சூடாகத் தேநீர் தர முடியுமா?'' என்று மிகுந்த தளர்ச்சியோடு கேட்ட பிட்டன், உடனே மயங்கிக் கீழே சரிந்தும் விட்டார்.

இதனைப் பார்த்த அரிகோ திடுக்கிட்டார். பின்னர், மருந்து கடைக்காரன் தயாரித்துத் தந்த தேநீரைப் பருகிவிட்டு, ஓட்டலை நோக்கி நடந்தபோது இரவில் நடந்தவற்றை அதிர்ச்சியுடன் விவரித்தார்.

இதைக் கேட்ட அரிகோ திடுக்கிட்டார். அவ்வாறு நள்ளிரவில் சவரக்கத்தியுடன் பிட்டன் அறைக்குச் சென்றதாக அவருக்கு நினைவே இல்லை. எனவே, அதனைத் திட்டவட்டமாக மறுத்தார். மேலும், அவரது விலாவில் அறுவை சிகிச்சை எதனையும் தான் செய்யவே இல்லை என்றும் உறுதியாகக் கூறினார்.

எனினும் பிட்டன் கோர்ட்டுக்கு நம்பிக்கை வரவில்லை. நிச்சயமாக அரிகோ வந்து தன் உடம்பில் ஏதோ செய்தார் என்பதில் உறுதியாக இருந்தார்.

எனவே, அதற்கு மேலும் நேரத்தைத் கால தாமதம் செய்ய அவருக்குப் பொறுமை இல்லை. உடனடியாக ரியோ சென்று தனது குடும்ப மருத்துவரைச் சந்திக்க விரும்பி, விமானத்தின் மூலம் பறந்தார்.

இதையடுத்து அரிகோவும் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஆனால், அதற்கு முன் தனது பெட்டியைத் திறந்து சவரக்கத்தியை எடுத்துப் பார்த்தார். அதில் ரத்தக் கறை எதுவுமே இல்லை. எனினும் பிட்டன் கோர்ட் ஏன் அவ்வாறு கூறினார்?

அவர் மனதிற்குள் பிட்டன் கோர்ட் சொன்னது ஓடிக்கொண்டே இருந்தது. அவர் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாமல் அரசியல் செல்வாக்கு மிக்கவர். ஏதாவது ஏடாகூடமாகிவிட்டால் தனது நிலைமை காலியாகிவிடும் என்ற அச்சம் அவரைப் படுத்தி எடுத்தது. உடம்பு முழுவதும் உதறல் எடுத்தது.

'ரியோவில் அவரது மருத்துவர் என்ன சொல்லப் போகிறாரோ?' என்று கவலைப்பட்டார் அரிகோ.

இதனிடையே ரியோ சென்ற பிட்டன், உடனடியாகத் தனது விலாவைச் சுட்டிக் காட்டினார். அதைப் பார்த்த மருத்துவர் உடனடியாக எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்.

என்ன ஆச்சரியம்....

நுரையீரலில் பரவிக் கிடந்த புற்றுநோய் சுத்தமாக அகற்றப்பட்டிருந்தது. பிரேசில் நாட்டில் இது வரை அறிமுகம் ஆகாத ஒரு புதிய உத்தியில் மிக நேர்த்தியாக சாமர்த்தியமான முறையில் புற்று நோய்க் கட்டி அகற்றப்பட்டிருப்பதாக மருத்துவர் ஆச்சரியத்துடன் வெளிப் படுத்தினார்.

இனிமேல் பிரச்சனையே கிடையாது. பிட்டன் கோர்ட், நீண்ட காலம் உயிர் வாழ்வது உறுதியாகிவிட்டதாக மருத்துவர் மிகழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதனால் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்ற பிட்டன் கோர்ட், முதல் காரியமாகத் தந்தி மூலம் இதனை அரிகோவிற்குத் தெரியப்படுத்தினார். அத்துடன் நின்று விடாமல், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, பிரேசில் நாட்டில் உள்ள அனைத்து நாளிதழ்களிலும் அந்தச் செய்தியை வெளியிடச் செய்தார்.

மறுநாள் அனைத்து பத்திரிகைகளும் அரிகோவின் அற்புதமான அறுவை சிசிச்சையை பற்றிய செய்தியை வெளியிட்டன. இதனையடுத்து ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டார் அரிகோ.

அப்புறம் பிட்டன் கோர்ட், தான் செல்லும் இடங்களில் எல்லாம் செய்தியாளர்களின் கூட்டத்தைக் கூட்டி அரிகோவைப் பற்றி புகழ்ந்து தள்ள, அது செய்தித்தாள்களில் பெரிய பெரிய தலைப்புகளாக வெளி வந்துகொண்டே இருந்தது.

இதனால் நாடு முழுவதும் அரிகோவைப் பற்றிய ஒரு பரவலான நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டதோடு, கிடைத்த வாகனங்களை அமர்த்திக் கொண்டு மக்கள் காங்கோனாய் டு காங்கோவிற்கு வரத் தொடங்கினர்.

மேலும், வெளிநாட்டுப் பத்திரிகைகளும் இந்தச் செய்தியை வெளியிட, மற்ற நாடுகளிலும் அரிகோவின் புகழ் பரவியது. அங்கிருந்தும் நோயாளிகள் வந்து குவியத் தொடங்கினர்.

ஆக, தினமும் குறைந்த பட்சம் நூறு பேருக்குக் குறையாமல் அரிகோவின் வீட்டின் முன்பாக வரிசை கட்டி நிற்கத் தொடங்கினர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நோய். அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே நோய் என்னவென்று கண்டுபிடித்துவிடும் திறமை அரிகோவுக்கு வந்திருந்தது. அதாவது அரிகோவினுள் நுழைந்து ஆட்டுவிக்கும் அந்த ஆவிக்கு, அந்த சக்தி வந்திருந்தது என்று வேண்டுமானாலும் கூறலாம்.

நோயாளிகளைப் பார்த்து அவரே அறிந்திராத ஜெர்மன் மொழியில் பேசுவார். கையில் எந்த வகையான கத்தி கிடைக்கிறதோ அதனை எடுத்து அறுவை சிகிச்சையை மளமளவெனச் செய்வார். ரத்தம் லேசாகப் பேருக்கு வருமே அன்றி அதிகமாகக் கொட்டுவதே கிடையாது.

இத்தனைக்கும் நோயாளி பேசாமல் இருப்பான். முரண்டு பிடிப்பதில்லை. வலி தாங்க முடியாமல் கத்துவதில்லை. வேறு யாரோ மூன்றாவது மனிதருக்கு அறுவை சிகிச்சை நடப்பது போல பேசாமல் இருப்பான். இவர் எழுதிக் கொடுக்கும் மருத்துகள் அனைத்தும் விசித்திரமாக இருக்கும். சம்பந்தமே இல்லாத மருத்துகளாக இருக்கும். கண்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவருக்கு பி காம்ப்ளக்ஸ் மாத்திரையை எழுதிக் கொடுப்பார்.

மேலும், அவர் தற்போது புழக்கத்தில் உள்ள மருந்துகள் மட்டுமல்லாமல், அரதப் பழசான மாத்திரை மருந்துகளையும் எழுதிக் கொடுப்பார். இதனால் மருந்துக் கடைக்காரர்கள் விதவிதமான மருந்துகளை தருவிக்க வேண்டியதாகியது.

ஆனால், இவ்வாறு அவர் எழுதிக் கொடுத்த பெரும்பாலான மருந்துகள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டவை என்பது பின்னர்தான் தெரியவந்தது.

அரிகோ மிக வேகமாக மருந்துச் சீட்டு எழுதிக் கொடுப்பார். மின்னல் வேகத்தில் அவர் பேனாவைப் பயன்படுத்துவது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தைத் தரும்.

ஜோஸ் நிலோ டி அலிவைரோ. 48 வயதான இவர் ஒரு அரசு ஊழியர். எழுத்தர் பதவியில் இருந்தார். இவரை எல்லாரும் செல்லமாக 'அல்டிமீரோ' என்றே அழைப்பர். இதற்கு பிரேசில் மொழியில் கருப்பன் என்று அர்த்தம்.

தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us